நிதி அமைச்சர் நான் தான்! நாட்டிற்கான எனது பணியில் என் உயிர் போனாலும் கவலைப்பட மாட்டேன்; அலி சப்ரி அறிவிப்பு

நாட்டின் நிதி அமைச்சர் நான் தான். நாட்டிற்கான எனது பணியில் என் உயிர் போனாலும் கவலைப்பட மாட்டேன் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் அலி சப்ரி உரையாற்றிக் கொண்டிருந்த போது குறுக்கிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. யான எம்.ஏ.சுமந்திரன். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை அறிக்கை தொடர்பான நிதி அமைச்சுடன் தொடர்புபட்ட இந்த விவாதத்தில் நீங்கள் நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் பேசுகின்றீர்களா அல்லது எம்.பி.யாக பேசுகின்றீர்களா எனக்கேள்வி எழுப்பினார்.

இதற்கு அலி சப்ரி பதிலளிக்கும் போதே, நான்தான் இந்த நாட்டின் தற்போதைய நிதி அமைச்சர். ஜனாதிபதி நிதி அமைச்சுப்பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். ஆனால் என்னை விட சிறந்தவர்கள் யாராவது இருந்தால் அவர்களிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள், நான் தேவையானால் எம்.பி. பதவியிலிருந்து கூட விலகுவதற்கு தயாராகவுள்ளேன் என ஜனாதிபதியிடம் கூறி இராஜிநாமா கடிதம் கையளித்தேன்.

ஜனாதிபதியும் சிறந்தவர்களை வந்து பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுத்தார். எதிர்க் கட்சியினருக்கும் அழைப்பு விடுத்தார். ஆனால் யாரும் பொறுப்பேற்க முன்வர வில்லை. இவ்வாறான நாட்டின் ஸ்திரமற்ற நிலை எதிர்காலத்துக்கு பாதிப்பாக அமையுமென சர்வதேச நாணய நிதியம் மற்றும் நட்பு நாடுகள் சுட்டிக்காட்டின.

நிதி அமைச்சை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையில் தான் நாட்டை நேசிக்கும் ஒருவனாக நிதி அமைச்சை பொறுப்பேற்றுள்ளேன். எனது இந்தப்பணியின் போது எனது உயிர் போனாலும் நான் கவலைப்பட மாட்டேன், நாட்டிற்காக எனது பணியை முன்னெடுப்பேன் என்றார்.

Tamil News