இந்திய காவல்துறையினரின் மனித உரிமை மீறல் – மன்னிப்புச்சபை கண்டனம்

முஸ்லீம் மக்களுக்கு எதிராக இந்திய காவல்துறையினரும் அரசியல்வாதிகளும் மேற்கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக மன்னிப்புச்சபை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தில் கோவில் திருவிழா மீது கல்லெறிந்தனர் என காரணம் கூறி முஸ்லீம் இளைஞர்களை பொதுமக்களின் உடையில் வந்த இந்திய காவல்துறையினர் மரத்தில் கட்டிவைத்து தடிகளால் தாக்கியுள்ளனர்.

அதனை பெருமளவான மக்கள் பார்வையிட்டதுடன், தமது மகிழ்ச்சியை அவர்கள் தெரிவித்ததும் மிகவும் வருந்ததக்க விடயம் என மன்னிப்புச்சபை தொவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பான காணொகளிகள் சமூகவலையத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் குஜராத் மாநிலமே வன்முறை மிக்க மாநிலமாகும்.

2002 ஆம் ஆண்டு அங்கு முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறையில் 2000 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். குஜராத்தில் கடந்த 25 வருடங்களாக பாரதிய ஜனதா கட்சியே ஆட்சியில் உள்ளது. இந்த கட்சி அங்குள்ள மக்களிடம் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையை வளர்த்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த வன்முறையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.