உலகம் மிகப்பெரும் பொருளாதார சரிவை சந்திக்கவுள்ள நிலையில் அதனை எதிர்கொள்ளும் முகமாக உலகில் உள்ள பல பெரிய நிறுவனங்கள் தமது பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றன.
மைக்ரோசொப்ற், ரெஸ்லா, முகநூல், நெற்பிளிக்ஸ் போன்ற மிகப்பெரும் நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் தமது பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. அடுத்த வருடத்திற்குள் உலகில் மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சி வரும் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட 91 சதவிகித நிறுவனங்களின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த பொருளாதார வீழ்ச்சி தமது நிறுவனங்களின் வளர்ச்சியை அடுத்துவரும் 3 வருடங்களுக்கு பாதிக்கும் என 80 விகிதமானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீதான ரஸ்யாவின் படை நடவடிக்கை அதனை தொடர்ந்து மேற்குலக நாடுகள் கொண்டுவந்த பொருளாதாரத் தடைகளே இந்த பொருளாதார சரிவுக்கான பிரதான காரணிகளாகும்.
உலக நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து வருவதுடன், உலகம் மிகப்பெரும் உணவுத் தட்டுப்பாட்டையும் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.