இலங்கையின் பெருந்தோட்டத்துறையில் பணியாற்றும் மலையகத் தமிழ் பெண்கள் இன, மொழி மற்றும் பொருளாதார ரீதியில் பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுத்துவருவதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தனியார் கம்பனிகளின் முறையற்ற நடவடிக்கைகளால் அப்பெண்களின் சீரான வேலைச்சூழல், சுகாதாரம், பாதுகாப்பான வீடு என்பவற்றுக்கான உரிமைகள் வெகுவாக மீறப்படுவதாக விசனம் வெளியிட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான ஐக்கிய நாடுகள் குழுவின் 90 ஆவது கூட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 – 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அதனை முன்னிறுத்தி கடந்த 2016 – 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் (அதற்குப் பின்னரும்) பெண்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகளை முடிவுக்குக்கொண்டுவருவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான ஐக்கிய நாடுகள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
பெண்களுக்கு எதிரான சகல விதமான ஒடுக்குமுறைகளையும் முடிவுக்குக்கொண்டுவருதற்கான பிரகடனத்துக்கு அமைவாக தாம் கொண்டிருக்கும் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளைப் பாராட்டுகின்றோம்.
இருப்பினும் கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மனித உரிமைகள் தொடர்பான தேசிய வேலைத்திட்டம் 2021 ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்தது. அதனைத்தொடர்ந்து புதிய வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
அதேவேளை பெண்களை வலுவூட்டுவதுடன் பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டு 37 ஆம் இலக்க பெண்கள் வலுவூட்டல் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அச்சட்டத்தின் ஊடாக பெண்களுக்கான உரிமைகளை அனுபவிப்பதற்கு சகல பெண்களும் உரித்துடையவர்கள் என்ற விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று பெண்களுக்கு எதிரான சகல விதமான ஒடுக்குமுறைகளையும் முடிவுக்குகொண்டுவருவதற்கான பிரகடனத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகள் இலங்கையின் அரசியலமைப்பு உள்ளடங்கலாக பல்வேறு சட்டங்களில் உள்வாங்கப்பட்டுள்ளன.
இருப்பினும் இலங்கையில் நடைமுறையிலுள்ள சில சட்டங்களில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை ஊக்குவிக்கக்கூடியவாறான சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக 1951 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், 1952 ஆம் ஆண்டு 44 ஆம் இலக்க கண்டிய விவாக, விவாகரத்துச் சட்டம், 1911 ஆம் ஆண்டு 10 ஆம் இலக்க திருமண உரிமைகள் மற்றும் மரபுரிமை ஆணைச்சட்டக்கோவை என்பன அத்தகைய ஒடுக்குமுறை சரத்துக்களைக் கொண்டிருக்கின்றன.
இச்சரத்துக்கள் முற்றாக நீக்கப்படவோ அல்லது பெண்களுக்கு எதிரான சகல விதமான ஒடுக்குமுறைகளையும் முடிவுக்குக்கொண்டுவருவதற்கான பிரகடனத்துக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்படவோ வேண்டும். அதேபோன்று முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் ஊடாக முஸ்லிம் பெண்களின் உரிமைகள் மீறப்படுவதுடன், அவர்களது நீதிக்கான அணுகல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சில சந்தர்ப்பங்களில் மதரீதியான ஆடைகளை அடிப்படையாககக்கொண்டு பெண்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன.
உதாரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள பாடசாலையொன்றுக்குள் முஸ்லிம் பெண்கள் அணியும் ‘அபாயா’ ஆடையுடன் பிரவேசிப்பதற்கு இடமளிக்கப்படாமை குறித்து உதவி ஆசிரியைகள் நால்வரால் எமது ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டது.
அத்தோடு இலங்கை சட்டத்தின்கீழ் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளும் தொடர்ச்சியாக ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
எனவே அவர்களது பெயர்ப்பதிவு மற்றும் அவர்களின் பிறப்புச்சான்றிதழ்களில் பால் மாற்றம் செய்தல் என்பன தொடர்பில் சுகாதார அமைப்பு, பதிவாளர் நாயகம் திணைக்களம் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் நாம் தொடர்ச்சியாகக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுவருகிறோம் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவற்றுக்கு மேலதிகமாக நீதிக்கான அணுகல், சமாதானம் மற்றும் பாதுகாப்பு, அரசியல், பொதுவாழ்வு மற்றும் தீர்மானம் எடுத்தலில் பங்கேற்றல், வரவு, செலவுத்திட்டத்தில் பெண்களைப் பொருளாதார ரீதியில் வலுவூட்டுவதற்கான நிதியொதுக்கீடு, வேலைவாய்ப்பு, அபிவிருத்தி போன்றவற்றில் பெண்கள் முகங்கொடுத்துவரும் ஒடுக்குமுறைகள் குறித்தும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் கவனம்செலுத்தப்பட்டுள்ளது.