ஊடகவியலாளர் தாக்கப்பட்டு கடத்த முற்பட்ட சம்பவம்: விசாரணை நடத்த CPJ இலங்கையிடம் கோரிக்கை

இலங்கை தமிழ் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன்  தாக்கப்பட்டு கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாகரிகள் பாரபட்சமற்ற விரைவான விசாரணையை நடாத்த வேண்டும் என அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்குகின்ற பத்திரிகையாளர்களை பாதுகாக்கின்ற குழுவின் (CPJ) திட்ட இயக்குநர் Carlos Martinez de la Serna  அறிக்கை ஒன்றின் மூலம்  தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் டிசம்பர் 26 ஆம்  திகதி கிளிநொச்சி நகரில் வைத்து தாக்கப்பட்டு கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இவர் அதிலிருந்து தப்பியிருக்கின்றார். பின்னர்  அவர் நெஞ்சு, கழுத்து,முதுகில் தாக்குதல்  காரணமாக ஏற்பட்ட  வலி காரணமாக சிகிச்சை பெற்றுள்ளார்.

அவர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தின் படி டிசம்பர் 27 ஆம் திகதி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு 30  ஆம் திகதி நீதிமன்றில் சந்தேக நபர்கள்  தமிழ்ச்செல்வனால் அடையாளம் காட்டப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றம் அவர்களை பிணையில் விடுவித்துள்ளது.

இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் சமரவிக்ரசிங்கவை தொடர்பு கொண்டு வினவிய போது அவர்  உடனடியாக பதில் கூற முடியாது என தெரிவித்துவிட்டார்.

உள்ளுர்  நாளிதழ்களில் போதைப்பொருள் மற்றும்  சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்பில் தொடர்ச்சியாக எழுதிவருவதன் காரணமாக தான் தாக்கப்பட்டிருக்கலாம் என எம்மிடம் தமிழ்ச்செல்வன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழ்பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு தண்டனைகள் கிடைக்காமை தொடர்பில்  CPJ ஆவணப்படுத்தியிருக்கிறது.1983 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதிகளில் உள்நாட்டு போர் காரணமாக கொல்லப்பட்ட அதிகளவான பத்திரிகையாளர் தமிழ் பத்திரிகையாளர்கள்.

எனவே புதிதாக பொறுப்பேற்ற அரசு தமிழ் பத்திரிகையாளர்கள் மீதான் தாக்குதல், துன்புறுத்தல்கள் மற்றும தணடனை விலக்களிப்பு என்பவற்றை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் பத்திரிகையாளர்களை பாதுகாக்கின்ற குழுவின் (CPJ) திட்ட இயக்குநர் Carlos Martinez de la Serna கோரியுள்ளார்.