மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிக்கும் நிகழ்வு தமிழ்த் மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறையில் உணர்வுபூர்வமான முறையில் இடம்பெற்றுள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபை கட்டடத் தொகுதி மரக்கறி சந்தைக்கு மேல் மண்டபத்தில் நேற்று (23) திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
எங்கள் இனத்தின் சுதந்திர மூச்சுக்காக தம்மூச்சை மண்ணுக்குள் அடக்கிய மாவீரர் தெய்வங்களை பெற்றெடுத்த தெய்வங்களை கௌரவிப்போம் என்ற தொனிப்பொருளில் வல்வெட்டித்துறை மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வல்வெட்டித்துறை மாவீரர் பணிமனையின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் வல்வெட்டித்துறை நகரபிதாவுமான இராமச்சந்திரன் சுரேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் அழைத்து மதிப்பளிக்கப்பட்டிருந்தனர்.
வல்வெட்டித்துறை பேருந்து நிலையத்தில் இருந்து மாவீரர் பொதுத்திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து சுடரேற்றியதை தொடர்ந்து மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மங்கல வாத்திய மரியாதையுடன் ஊர்வலமாக நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
மாவீரர் மேஜர் அலையழகியின் தந்தை சுந்தரலிங்கம் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து மாவீரர் பெற்றோர் உரித்துடையோரால்
மாவீரர் நினைவு ஈகைச்சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன. தொடர்ந்து மலர் வணக்கம் செய்யப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றது.
வரவேற்பு நடனத்தை தொடர்ந்து தலைமை உரை இடம்பெற்று மாவீரர் நினைவுரைகள் இடம்பெற்றிருந்தன. தொடர்ந்து மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், வல்வெட்டித்துறை பிரதேசத்திற்குட்பட்ட மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர், வல்வெட்டித்துறை முன்னாள் நகரபிதா அனந்தராஜ், நகரசபை உறுப்பினர்கள், தமிழ்தேசிய ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.






