வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அடையாளங்களை மீட்க உதவ கோரிக்கை!

பல தசாப்தங்களாக இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது அன்புக்கு உரியவர்களின் கதி என்னவென்பது தெரியாமல் ஆயிரக்கணக்கான தமிழ் தாய்மார்கள், தந்தையர்கள், வாழ்க்கைத் துணைகள் மற்றும் குழந்தைகள் எனப் பலரும் வேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர். செம்மணி உள்ளிட்ட படுகொலை மற்றும் மனிதப்புதைகுழித் தளங்களில் மனித எலும்புக் கூட்டு எச்சங்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வரும் நிலையில், இத்தகைய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் முக்கிய தகவல்கள் இழக்கப்படுவதற்கு முன்பு, அவர்களின் அடையாளங்களைப் பாதுகாக்க உதவுமாறு உலகளாவிய தமிழ் சமூகம், மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடம் பிரித்தானிய தமிழர் பேரவை அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

இதுகுறித்து பிரித்தானிய தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

நவீன தடயவியல் விஞ்ஞானமும் டி.என்.ஏ பகுப்பாய்வும் மீட்கப்பட்ட மனித எச்சங்களை அடையாளம் காண்பதற்கும், முடிந்தால் அவற்றை அவர்களின் குடும்பங்களுடன் மீண்டும் இணைப்பதற்கும் ஒரு முக்கிய வழியை காட்டுகின்றது. ஆனால் அறிவியலால் மட்டுமே தனித்துச் செயற்பட முடியாது. அடையாளம் காணும் செயன்முறைக்கு நம்பகமான மரணத்திற்கு முந்தைய தகவல்களும் உயிரியல் ரீதியான இரத்த உறவினர்களின் டி.என்.ஏ ஒப்பீட்டு மாதிரிகளும் மிகவும் அவசியமானவை.

இந்த ஆவணங்களும் குடும்பத்தினரின் ஒப்பீட்டுத் தரவுகளும் இல்லாவிட்டால், பாதிக்கப்பட்ட பலரை அடையாளம் காண முடியாமல் போவதுடன் பதில்களுக்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் குடும்பங்களின் துயரமும் மேலும் நீடிக்கும்.

வலிந்து காணாமல் போதல்களுக்கு ஆளாக்கப்பட்டவர்களின் முழுமையான அல்லது பகுதியான பட்டியல்கள் அல்லது பதிவுகளை வைத்துள்ள ஒவ்வொரு தனிநபரும், சமூக அமைப்பும், பதிவு வைத்திருப்பவரும் முன்வந்து அந்தத் தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அவசரமாகக் கேட்டுக் கொள்கிறோம். ஒற்றைப் பெயரோ அல்லது சிறு தகவல் துணுக்கு கூட அடையாளம் காணும் செயல்முறையை முன்னெடுத்துச் செல்லவும், ஒரு குடும்பத்தை உண்மையின் அருகில் கொண்டு செல்லவும் உதவும்.

சுயாதீனமான சர்வதேச தடயவியல் மற்றும் சட்ட வழிமுறைகளை உருவாக்குவதற்கு பாதிக்கப்பட்டவரின் முழுப் பெயர், பிறந்த தேதி (அல்லது காணாமல் போன நேரத்தில் அண்ணளவான வயது), காணாமல் போன திகதி மற்றும் இடம் (சரியான விவரங்கள் தெரியவில்லை எனில் அண்ணளவான மாதம், ஆண்டு மற்றும் இருப்பிடம்), உயிருடன் இருக்கும் உயிரியல் ரீதியான இரத்த உறவினர்களின் பெயர்கள், அந்த உறவினர்களுக்கான தொடர்பு விவரங்கள் (அல்லது குடும்பத்தினரை பாதுகாப்பாகத் தொடர்பு கொள்ளக் கூடிய நம்பகமான நிறுவனம் அல்லது அமைப்பின் பெயர்) போன்ற தகவல்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்

முழுமையற்ற தகவல்களும் கூட மதிப்புமிக்கவையே. சில விவரங்கள் விடுபட்டிருந்தாலும் கூட, தனிநபர்களும் அமைப்புகளும் தங்களிடம் உள்ள தொடர்புடைய பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பிரித்தானியா மற்றும் பிற ஐரோப்பிய பங்காளிகளுடன் இணைந்து டி.என்.ஏ தரவு வங்கியை உருவாக்குவது குறித்தும், காணாமல் போனவர்களின் அடையாளங்களை மீட்பதை ஆதரிப்பதற்கான பொருத்தமான நடவடிக்கையை முன்னெடுக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டு வருகிறோம்.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் உயிரியல் ரீதியான இரத்த உறவினர்களின் விரிவான, கவனமாக ஆவணப்படுத்தப்பட்ட பதிவுகள் இந்த முயற்சிக்கு இன்றியமையாததாக இருக்கும் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.