தாஸ்
தாயக மேம்பாடு – நேற்று இன்று நாளை மட்டக்களப்பு மாவட்ட வளங்கள்: மட்டக்களப்பு மாவட்டம் வாவியால் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒருபகுதி எழுவான்கரை (சூரியன் எழும் பகுதி அ-து கிழக்குப் பகுதி) என்றும் மறு பகுதி படுவான்கரை (சூரியன் மறையும் பகுதி அ-து மேற்குப் பகுதி) என்றும் அழைக்கப்படுகின்றது. காடுகள், விவசாய நிலம், வாவி, முகத்துவாரம், கடல், அணைகள், களப்பு, இயற்கைத் துறைமுகம், குளம் போன்ற புவியியல் அம்சங்களைக் கொண்டுள்ளது. படுவான்கரைப் பிரதேசம் வளமிக்க விவசாய நிலத்தினைக் கொண்ட பகுதியாகும்.
மட்டக்களப்பு மாவட்டமானது இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. 2610 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பும் 244 சதுர கிலோ மீட்டர் நீர்ப் பரப்பையும் கொண்டு அமைந்துள்ளது.
வங்காள விரிகுடாவினை கிழக்கு எல்லையாகவும், அம்பாறையினை தெற்கு எல்லையாகவும், பொலநறுவை மாவட்டத்தை மேற்கு வட மேற்கு எல்லையாகவும் கொண்டு மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது.
மட்டக்களப்பு நகரின் தனித்துவமான சிறப்பியல்பு யாதெனில், இது மூன்று கடல்நீரேரிகளைக் கொண்டுள்ளதே. அவை மட்டக்களப்பு வாவி, வாழைச்சேனை வாவி, பனிச்சங்கேணி வாவி இதில் மட்டக்களப்பு வாவியே மிக நீண்டது. இது 56 km நீளமும்இ 168 சதுர கிலோமீற்றர் பரப்பும் கொண்டது. வடக்கில் ஏறாவூர் வரையும் தெற்கில் கல்முனை வரையும் நீண்டுள்ளது. இது சிறு நிலப்பரப்புக்களையும் தீவுகளையும் கொண்டமைந்த அழகிய கடல்நீரேரி ஆகும்.
மட்டக்களப்பு மாவட்டம் 14 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளையும், 345 கிராம சேவையாளர் பிரிவுகளையும் 1036 கிராமங்களையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்த சனத்தொகை 6,08,000ஆகும் இதில் தமிழர்கள் 4,38,211, முஸ்லிம்கள் 1,60,340, சிங்கள மக்கள் 3850மற்றும் ஏனைய இனத்தவர் 5250 மக்களும் வசிக்கின்றனர்.
5 பாராளுமன்ற உறுப்பினர்களையும், 112 மாகாணசபை உறுப்பினர்களையும் கொண்டுள்ளதுடன், அனுமதிக்கப்பட்ட ஆளணி 122 பேர், பிரதேச சபைகளில் 1045 பேர் ஊழியர்கள் உள்ளனர். ஒரு மாநகர சபையையும் 22 நகர சபைகளையும் கொண்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்கு கடற்கரை 130 கிலோமீட்டர் நீளமானது. முன்னர் ஏற்றுமதி துறைமுகமாக காணப்பட்டது, இன்று கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. துறை நிலாவரை முதல் வெருகல் கடற்கரை வரையில் 100 மைல் நீளத்திற்கு முழுமையாக வயல் காணியாக உள்ளதுடன் செய்கையும் நெற்செய்கையில் தன்னிறைவு மாவட்டமாக உள்ளது. இயற்கையான தேன் அதிகம் கிடைப்பதால் மீன் பாடும் தேன் நாடு என அழைக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய பொருளாதார நடவடிக்கையாக விவசாயம் காணப்படுகின்றது. தெங்கு உற்பத்திக்குரிய சிறப்பான வளங்களை இம்மாவட்டம் கொண்டிருந்த போதும் 1978 ம் ஆண்டின் கொடும் சூறாவளியின் பின்னர் தெங்குப் பயிர்ச்செய்கை வினைத்திறனாக மேற்கொள்ளப்படாததால் அவை சார்ந்த தொழில்துறை நலிவடைந்துள்ளது. 2003 ஆம் ஆண்டில் 1664 ஏக்கர் தென்னை உற்பத்தி இலக்கு வைக்கப்பட்டது. இதே ஆண்டில் பனை உற்பத்திப் பொருட்கள் மூலம் ரூபாய் 1,266,000.00 வருமானமாகப் பெறப்பட்டது. சிறுபோக, பெரும்போக பயிர்ச் செய்கை விவசாயத்தில் முக்கிய இடம்பெறுகின்றது. கொச்சி மற்றும் சின்ன வெங்காய பயிர்ச் செய்கையும் முக்கிய விளைச்சல் பயிர்களாகும்.
கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு இங்கு பொருளாதாரத்தில் முக்கிய இடம்பெறுகின்றன. கடல் மற்றும் பிற நீர்வளங்கள் இங்கு உள்ளதால் மீன்பிடி முக்கிய தொழிலாகவுள்ளது. இறால், நண்டு என்பன முக்கிய வருவாய் ஈட்டித் தருவனவாகவுள்ளன. மட்டக்களப்பு நகர் மற்றும் அதனைக் கிட்டிய இடங்களில் கைத்தொழில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
8 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் 76 கிராம சேவையாளர் பிரிவுகள் முழுமையாக மீன்பிடி கிராமங்கள் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. உவர் நீர் மீன் பிடி ஆனது 229 கிலோ மீட்டர்கள் ஆக காணப்படுகின்றது. மொத்த நிலப்பரப்பில் 8.7ம% வேளான் செய்கை இடமாக உள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும் .
பாசிக்குடா பிரதேசம் சுற்றுலாத்துறைக்கு பெயர் போனது. இது நெற்செய்கைக்கு உகந்த வண்டல் மண் கொண்ட பிரதேசமாகும். தன்னிறைவான வகையில் அதிக நெல் உற்பத்திக்கு கொண்ட மாவட்டமாக உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டமானது 14 பாரிய குளங்களையும் 10 நடுத்தர குளங்களையும் கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தில் 54,535 ஏக்கர் நல்ல நிலையில் உள்ள வயல் காணியாக உள்ளது. இவ் வயல்களில் இருந்து அறுவடை செய்யப்படும் நெல் அந்த மாவட்டத்தின் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலதிகமான நெல் வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
மாவட்ட மக்களுக்கு உணவு உற்பத்திக்கான வாழ்வாதார திட்டங்கள் அதிகம் மேற்கொள்ள வேண்டி உள்ளது. மாவட்டத்தின் உட்கட்டுமானத்துக்கு 2018ஆம் ஆண்டு வரையும் 6528 வேலை திட்டங்கள் 5066 மில்லியன் இலங்கை ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மக்களின் மேம்பாட்டுக்கான வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்படாமையால் மக்களில் அதிகமானவர்கள் வறுமையின் பிடியில் உள்ள உள்ளனர் என்பது குறிப்பிட வேண்டி உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 2,31,000 பேர் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களிளும், 24,000 பேர் விவசாயம் சார்ந்த தொழில்களிலும், 20,026 பேர் மீன்பிடி தொழில் கட்டுமான தொழில்களிலும் 6,500 பேர் பேர் கூலி தொழில்களிலும், 64,330 பேர் வியாபார நடவடிக்கைகளிலும் வேலை செய்கின்றனர்.
அதிக மக்கள் கூலித் தொழிலாளர்களாகவே உள்ளனர். இவர்கள் நாளாந்த உணவுக்கே மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் வளத்தை முழுமையாக பயன்படுத்தி தொழில் முயற்சி செய்வதற்கு புலம்பெயர்ந்த உறவுகளும் சர்வதேச நிறுவனங்களும் அங்குள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக உதவிகள் செய்ய முன்வரவேண்டும் என்பதே அந்த மக்களின் ஆவலாக உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 வைத்தியசாலைகளையும், 359 பாடசாலைகளையும், 8000 ஆசிரியர்களையும் கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தின் கல்வி வளம் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை மாணவர்கள் கல்வி கற்பதற்கான சரியான வசதிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு தேவையான துவிச்சக்கர வண்டிகள் போன்றவை வழங்க வேண்டி உள்ளது. மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் செய்யப்பட்டால் அந்த மாவட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.