பதினொராவது தடவை பிறழ்வடைந்த வைரஸ் – ஆபத்து இன்னும் நீங்கவில்லை – ஆர்த்தீகன்

வைரஸ் ஆபத்து இன்னும் நீங்கவில்லை

– ஆர்த்தீகன்

பதினொராவது தடவை பிறழ்வடைந்த வைரஸ் ஆபத்து இன்னும் நீங்கவில்லை: நூறு ஆண்டுகளின் பின்னர் உலகை அச்சுறுத்தியதுடன், பெருமளவு உயிர் மற்றும் பொருளாதார இழப்புக்களை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும், உலகின் இயக்கத்தை முன்னைய நிலைக்கு மீள்வதற்கு அனுமதிக்கவில்லை.

வைரஸ் - ஆபத்து இன்னும் நீங்கவில்லைகடந்த வெள்ளிக்கிழமை (10) கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி இதுவரையில் உலகில் 5.3 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 268 மில்லியன் மக்கள் தொற்றுதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

அடிக்கடி விரைவாக உருமாற்றம் பெறும் வைரசினால் ஏற்படும் இந்த நோயை ஒரு குறுகிய காலத்தினுள் கட்டுக்குள் கொண்டுவருவது என்பது இயலாத காரியம். மேலும் அன்ரிபயோட்டிக் (Antibiotic) மருந்தினாலும் அதனை பக்ரீரியாவை போல அழிக்க முடியாது. எமது உடல் எதிர்ப்பு சக்தி தான் ஒரே ஆயுதம்.

கடந்த இரு வருடங்களில் 10 தடவைகள் பிறழ்வடைந்து புதிய தோற்றம் பெற்ற இந்த வரைஸ், தற்போது 11 ஆவது தடவையாக ஒமைக்ரோன் என்ற பெயருடன் அதிக வீரியம் மிக்கதாக பிறழ்வடைந்துள்ளது என்பது உலகின் இயக்கத்தை மேலும் ஒரு முடக்க நிலை நோக்கி தள்ளியுள்ளது.

இந்த புதிய வைரஸ் நவம்பர் 11 ஆம் நாள் பொட்ஸ்வானாவிலும், 14 ஆம் நாள் தென்னாபிரிக்காவிலும் கண்டறியப்பட்டதுடன், தற்போது அது 57 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னைய டெல்டா வகை வைரசை விட இதன் பரவும் விகிதம் அதிகமாகும். எனினும் நோயின் தாக்கம் குறைவாக உள்ளளபோதும் பரவல் விகிதம் தென்னாபிரிக்காவில் 400 விகிதம் அதிகரித்துள்ளது.

அங்கு நோய் பரவும் விகிதம் 2.5 (R rate) ஆக உள்ளது. அதாவது 10 பேரில் இருந்து 25 பேருக்கு பரவும் தகைமை கொண்டது. கோவிட்-19 ஆரம்பித்ததில் இருந்து கணிக்கப்பட்ட பரவும் விகிதத்தில் இதுவே மிக மிக அதிகமாகும். டெல்டாவின் பரவும் விகிதம் 0.8 ஆகவே இருந்தது.

எனவே தான் இதன் தாக்கம் நாடுகளில் மிக வேகமாகப் பரவி வருகின்றது. மேலும் அதற்கு எதிரான உடலின் நோயெதிர்ப்பு தன்மை 40 விகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் முன்னர் நோயின் தாக்கத்துக்கு உட்பட்டவர்கள் போன்றவர்களின் எதிர்ப்பு சக்தியிலும் வீழ்ச்சி காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார் நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வைத்திய கலாநிதி டெபோரா குரோமர்.

பிரித்தானியாவில் இதுவரையில் 900 இற்கு மேற்பட்டவர்களும், இந்தியாவிலும் 32 பேரும் இதன் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனினும் இந்த எண்ணிக்கை என்பது மிகவும் குறைவானது எனவும், உண்மையான எண்ணிக்கை மிக அதிகமானது எனவும் பேராசிரியர் ரிம் ஸ்பெக்ரோர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பல நாடுகள் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. பல நாடுகள் மீதான பயணத்தடைகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. ஐந்தாவது அலையின் தாக்கத்தை தாம் எதிர் கொள்ளவுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

ஆனால் தென்னாபிரிக்காவில் இருந்து வரும் விமானங்களைத் தடை செய்வதன் மூலம் இதனை கட்டுப்படுத்துவது சாத்தியமற்றது என்கிறார் பேராசிரியர் சிறீதர்.

கோவிட்டின் ஆரம்பத்தில் இருந்தே இதனை நாம் அறிந்திருந்தோம். அதாவது முதலாவது அலையின் போது சீனாவில் இருந்து வரும் விமானங்களை உன்னிப்பாக நாம் பார்த்துக்கொண்டிருந்த போது வைரஸ் பிரித்தானியாவில் இருந்து விரைவாக பரவியதுடன், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருந்து பிரித்தானியாவை விரைவாக வந்தடைந்திருந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பயணத்தடை என்பது முதலில் கூறும் நாடுகளை தண்டிப்பது போன்றது, இதனை தான் உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்திருந்தது.

வரட்டு இருமல், காய்ச்சல் மற்றும் உடல் வலி என்பன இதன் அறிகுறிகளாக இருக்கும் போதும் தடுப்பூசி போட்டவர்களில் அதன் தாக்கம் குறைவாக காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

 வைரஸ் - ஆபத்து இன்னும் நீங்கவில்லை
போராசிரியர் டேம் சரா கில்பேட்

இந்த நோயானது இன்னும் முடியவில்லை. இதன் அடுத்த அலை என்பது மிகவும் பயங்கரமாகவே இருக்கும் என ஒக்ஸ்போட் மற்றும் அஸ்ராசெனிக்கா தடுப்பூசியை தயாரித்த போராசிரியர் டேம் சரா கில்பேட் தெரிவித்துள்ளார். அவர் தயாரித்த தடுப்பூசி 170 இற்கு மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப் படுகின்றது.

அடுத்த அலையில் பெருமளவானவர்கள் மரணத்தைத் தழுவ நேரிடும். படையினருக்கும், புலனாய்வுத் துறையினருக்கும், இராஜதந்திரிகளுக்கும் நிறைய பணத்தை செலவிட்டு போரை தவிர்க்கின்றோம் அல்லது போரை வெல்ல நினைக்கின்றோம். ஆனால் அதேபோலவே ஆய்வுகள், விஞ்ஞானிகள், மருந்து உற்பத்தித்துறை மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கி இவ்வாறான நோய்களை எதிர்க்க எம்மை தயார்ப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந் வைரஸ் அதிக பாதிப்புக்களை மனிதர்களில் ஏற்படுத்தவில்லை என தெரிவித்துள்ள அமெரிக்காவின் தொற்று நோய் தொடர்பான நிபுணர் கலாநிதி அந்தோனி பௌச்சி அவர்கள், எனினும் அதனை உறுதிப்படுத்த மேலதிக தகவல்கள் தேவை என தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பிரித்தானியாவில் அதிகரித்து வருவதாக வைத்தியர் கத்திரின் ஹென்டர்சன் தெரிவித்துள்ளார். இந்த நிலை தொடர்ந்தால் வைத்தியசாலைகளில் இட இநருக்கடி ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் நிலையே இவ்வாறு என்றால் ஏனைய நாடுகளின் நிலை மிகவும் வருந்தத்தக்கதாகவே இருக்கும்.

பிரித்தானியாவைப் பொறுத்தவரையில், அடுத்த இரண்டு வருடங்களுக்கு தேவையான தடுப்பூசிகளுக்கான கொள்வனவுப் பத்திரத்தை தற்போதே சமர்ப்பித்துள்ளது. அடுத்த இரு வருடங்களுக்கு மக்கள் தொடர்ந்து தடுப்பூசிகளைப் போட வேண்டும் என பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது வைரஸ் நோயை முற்றாக அழிப்பது என்பது விரைவில் சாத்தியமற்ற தொன்று. தொடர்ச்சியாக போடப்படும் தடுப்பூசிகள், பரவல் தடுப்பு முறைகள் என்பனவே எதிர்காலத்தில் இந்த நோயின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றும்.

அதனை மேற்கொள்ளும் தகைமை என்பது வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு உண்டு. ஆனால் அபிவிருந்தி அடைந்து வரும் நாடுகள் மிகவும் அதிக பாதிப்புக்களை சந்தித்து வருகின்றன. பொருளாதார வீழ்ச்சி என்பது பல நாடுகளை முற்றாக வீழ்ச்சியடையும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

எனவே எதிர்வரும் சில வருடங்கள் மிகவும் ஆபத்தானதாகவே இருக்கும் என்பதுடன், மக்களின் வாழ்க்கையும் இயல்புநிலைக்கு திரும்புவது சாத்தயமற்றதாகவே காணப்படுகின்றது. கொரோனோ வைரசின் பிறழ்வு நிலை தான் அதனை தீர்மானிக்கப் போகின்றது. அதனை எதிர்கொள்ள மருத்துவ உலகம் தன்னைத் தயார்படுத்தினால் மட்டுமே நாம் சுபீட்சமான எதிர்காலத்தைக் காணமுடியும்.

 

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad பதினொராவது தடவை பிறழ்வடைந்த வைரஸ் - ஆபத்து இன்னும் நீங்கவில்லை - ஆர்த்தீகன்