முறையான சட்ட அனுமதியோடு வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு எடுங்கள்: மலேசியாவின் மாநில காவல்துறை 

வேறு எந்தவிதமான சட்டப் பிரச்சினைகளில் சிக்காமல் இருக்க முறையான ஆவணங்களுடன் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துங்கள் என நிறுவனங்களை/முதலாளிகளை மலேசியாவின் Kelantan மாநில காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

Gua Musang, Kuala Krai மற்றும் Jeli ஆகிய பகுதிகளில் உள்ள பண்ணைகளில் முறையான ஆவணங்களின்றி வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றுவது அங்கு மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் தெரிய வந்துள்ளது என Kelantan மாநில காவல்துறை தலைமை (பொறுப்பு) அதிகாரி முகமது ஜாகி ஹருன் குறிப்பிட்டுள்ளார்.

முறையான ஆவணங்களின்றி வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படும் பட்சத்தில் வேலை வழங்குபவர்கள் அல்லது நிறுவனத்தின் மேலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என அவர் எச்சரித்துள்ளார்.

“பண்ணைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இடையே சண்டைகள் அல்லது மரணங்கள் ஏற்படுவது குறித்து அவ்வப்போது எங்களுக்கு தகவல்கள் கிடைக்கின்றன. அப்போது சோதிக்கும் பொழுது அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லை,” என Kelantan மாநில காவல்துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tamil News