ஹனியே படுகொலை- ஈரானின் இறையாண்மை மீதான “தீவிரமான தாக்குதல்”: ஓஐசி அறிக்கை

கடந்த வாரம் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் ஹனியே படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள ஓஐசி அமைப்பு, “இந்த கொடூரமான தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் முழு பொறுப்பு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதில் இருந்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானும் அதன் நட்பு நாடுகளும் இஸ்ரேல் மீது குற்றம் சாட்டின, ஆனால் இஸ்ரேல் தரப்பு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஈரானிய மற்றும் பாலத்தீனிய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC- ஓஐசி) புதன்கிழமை செளதி அரேபியவில் கூடியது.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஈரானின் பொறுப்பு வெளியுறவுத்துறை அமைச்சர் பக்யூரி அலி பாகேரி கனி, ‘ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் கொலைக்கு ஈரான் கொடுக்கப் போகும் பதிலடியை ஓஐசி அமைப்பு ஆதரிக்கும் என எதிர்பார்ப்பதாக’ கூறினார்.

“ஈரானின் நடவடிக்கை அதன் சொந்த இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கான அரண் மட்டுமல்ல, முழு பிராந்தியத்தின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கான அரண்” என்றும் அவர்  சுட்டிக்காட்டினார்.

இந்தனிலையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பால் வெளியிடப்பட்ட அறிக்கையில், “கொடூரமான தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் முழு பொறுப்பு” என்றும்  இது ஈரானின் இறையாண்மை மீதான “தீவிரமான தாக்குதல்” என்றும்  குறிப்பிட்டுள்ளது.

அதே சமயம் ஈரானிய இராணுவ நடவடிக்கைக்கு இந்த அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.