ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை: ஐரோப்பிய ஒன்றியத்திடம் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகள் கூட்டாக கோரிக்கை

350 Views

வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகள்

இலங்கைக்கு  ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்க முன் நாட்டின் மனித உரிமையைச் சுட்டெண்ணை  ஆராய வேண்டும் என்று வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகள் சார்பாக அதன் பிரதிநிதிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

“ஐரோப்பிய ஒன்றியத்தால் ஒரு நாட்டுக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு முன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள 27 நிபந்தனைகளுக்கு அந்த நாட்டு அரசு இணக்கம் தெரிவிக்க வேண்டும்.

இலங்கை அரசானது போர் நடைபெற்று 10 வருடங்கள் கடந்த நிலையில் காணாமல் ஆக்கப்படுதல், அரசியல் கைதிகள் விவகாரம், காணி அபகரிப்பு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலமான கைது நடவடிக்கைகள் என்பன தொடர்ந்த வண்ணமே உள்ளது. இன்னொருபுறம் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஐ.நாவில் காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

மரணச் சான்றிதழ் வழங்குவதற்கு எமது உறவுகள் காணாமல் போனவர்கள் அல்லர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள். இதனை சர்வதேசம் நன்கு உணர வேண்டும்.

மரணச் சான்றிதழ் வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த நிலையில் நமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அவர் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் விவசாய பூமி பெரும்பான்மை இனத்தவர்களால் அபகரிப்பு செய்யப்படுகின்ற நிலையில் தமிழ் மக்கள் உண்ண வழியின்றி தமது நிலங்களை இழந்த நிலையில் காணப்படுகின்றனர்.

1984ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழ் மக்கள் தொடர்ந்தும் அகதி வாழ்க்கை நடாத்திவரும் நிலையில் அரசாங்கமானது தீர்க்கமான முடிவொன்றை மக்களுக்கு வழங்க வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் மீனவ மக்களின் வாழ்விடங்கள் மற்றும் அவர்களின் தொழில் துறைகளை கடற்படையினர் இன்னும் விடுவிக்காமல் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

தமிழ் மக்களின் மீன்வளத்தை தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் அனுபவித்து வரும் நிலையில் இதனை நம்பி கடற் தொழிலில்  ஈடுபட்டவர்கள் மாற்றுத் தொழிலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பொது மக்களின் 3500 ஏக்கர் காணிகளில் சுமார் 500 ஏக்கர் காணிகள் தொடர்ந்தும் பாதுகாப்பு தரப்பினரின் பயன்பாட்டில் உள்ளன.

மேலும், வடக்கில் சிறந்த விளைச்சலைத் தரக்கூடிய 2 ஆயிரம் ஏக்கர் வளமான விவசாய காணிகள் தொடர்ந்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் விடுவிக்கப்படாமல் உள்ளன.

இவ்வாறான நிலையில் இலங்கை அரசுக்கு ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்குவதற்கு முன்னர் குறித்த விடயங்கள் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊடக சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரதிநிதிகள், வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் புனரமைப்பு சங்கத் தலைவர், கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளர், மாதர் சங்க உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், சட்டத்தரணி எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply