இந்திய மீனவர்களின் வருகை தொடர்பாகவும் அவர்களின் வருகையை கட்டுப்படுத்த நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளையும், போராட்டங்களை முன்னெடுத்துள்ள போதும் மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்ட தலைவர் என்.எம்.ஆலாம் தெரிவித்தார்.
உலக உணவு தன்னாதிக்க வாரத்தையொட்டி மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் மாவட்ட இணைப்பாளர் ஏ.பெனடிற் குரூஸ் தலைமையில் ஊடக சந்திப்பு இடம் பெற்றது.
குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘இந்திய துணைத் தூதுவரை யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் மீனவ தலைவர்கள் சென்று சந்தித்து கலந்துரையாடி உள்ளனர். மீனவ தலைவர்களாக சென்றவர்கள் அவர்களிடம் எதை கூறினார்கள் என்று இன்று வரை தெரியவில்லை.
எனினும் பாதிக்கப்படுவது மீனவர்கள்.மீனவர்களின் பாதுகாப்பையும்,மீனவர்கள் படும் துன்பங்கள் மற்றும் அதனை விட மீனவர்களின் குடும்பங்கள் படும் துன்பங்களையும் யாரிடம் தெரிவிப்பது என்று தெரியாமல் உள்ளது.
அரசு செவிடன் காதில் ஊதிய சங்கு போல் நாங்கள் பல்வேறு விடையங்களை எடுத்துக் கூறியும்,இன்று வரை அதனை கேட்பதாகவும் இல்லை.
இலங்கைக்கான வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பது சாதாரணமான விடையமாக உள்ளது. சீனாவிற்கு விற்கப்பட்டமை போன்று இன்று இந்தியாவின் தரப்புக்கள்,பாதுகாப்பு ஆலோசகர்கள் ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்து இலங்கையுடன் ரகசிய பேச்சுவார்த்தையை நடாத்திச் செல்லுகின்றனர். இதனால் வட பகுதி மீனவர்கள் அல்லது மக்கள் எதை இழக்க போகிறார்கள் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.குறிப்பாக கடலின் ஒரு பகுதியை வழங்கி உள்ளதாகவும் ஒரு பேச்சு.
கடலில் எரி பொருட்கள் இருப்பதாக கூறப்பட்டு அதை கண்டு பிடிக்கப்பட்டு, விற்கப்பட்டால் மன்னார் தீவில் உள்ள மக்கள் இடம் பெயர வேண்டிய நிலையும் ஏற்படலாம். அதன் உண்மைத்தன்மை என்ன?அரசு ஏன் குறித்த விடயத்தை தெரிவு படுத்தவில்லை.? மேலும் தற்போது நாட்டில் பொருட்களின் விலை என்றும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.