அரசியல் நெருக்கடி- பிரான்சில் ஆட்சி கவிழ்ந்தது: பிரதமர் பதவி விலகினார்

பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து, அந்நாட்டின் ஆட்சி கவிழ்ந்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் பார்னியர் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் போது, 577 உறுப்பினர்களில் 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

இதன் மூலம், கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரான்ஸ் அரசு கவிழ்க்கப்பட்ட முதல் சந்தரப்பம் இதுவாகும். 2025ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் அரசாங்கம் முன்வைத்த வரவு செலவுத் திட்டத்தின் பல அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை எதிர்கொண்டன.

இந்நிலையில், பார்னியர் சர்ச்சைக்குரிய வகையில் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி கடந்த திங்கட்கிழமை வரவு செலவுத் திட்டத்தை வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றியதை அடுத்து எதிர்க்கட்சிகள் இந்த பிரேரணையை தாக்கல் செய்தன.

இது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தின் பின்னர் நடைபெற்ற  வாக்கெடுப்பில் 577 உறுப்பினர்களில் 331 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பிரேரணை நிறைவேற்ற 288 வாக்குகள் தேவைப்பட்டன. பிரேரணைக்கு ஆதரவாக மொத்தம் 331 பேர் வாக்களித்ததாக பிபிசி தெரிவித்துள்ளது.

இதனையடுத்து சபையின் பணிகள் நிறைவடைந்த பின்னர், தனது இராஜினாமா கடிதத்தை உத்தியோகபூர்வமாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனிடம் கையளிக்குமாறு பிரதமருக்கு சபாநாயகர் அறிவித்தார்.

இந்நிலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் பிரதமராக பதவியேற்ற மைக்கேல் பார்னியர் தலைமையிலான அரசாங்கம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.