அரசுக்கு சாதகமாக அமையும் காலி முகத்திடல் போராட்டம்
கோட்டாபய ராஜபக்ச அரசுக்கு எதிராக சிங்கள தேசத்தில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு போராட்டங்கள் ஒருமுகப்படுத்தப்பட்டதாக காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அப்போராட்டமானது கோட்டா அரசுக்கு சாதகமானதாகவே அமைந்து வருவதனை அவதானிக்க முடிகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலையின் பின்னணியில் சிங்கள தேசத்தில் ஏற்பட்டுள்ள கொதிநிலை, அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களாக ஒழுங்கமைக்கப்பட்ட வகையிலும், தன்னெழுச்சியாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 09.04.2022 இற்கு முன்பாக, இவ்வாறு நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் அரச எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போன்று சிங்கள தேசம், தான் சந்தித்து நிற்கும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்ச தரப்பினரை பதவி விலக வலியுறுத்தி முன்னெடுத்திருந்த இப்போராட்டங்கள் பெரும்பாலும் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, நீர்த்தாரை பிரயோகம், கலகம் அடக்கும் பொலிஸார் தலையீடு என்ற நிலையிலேயே முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.
இவ்வாறு அமைதியான முறையில் போராடும் மக்களை அடக்க முற்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் கோட்டா அரசுக்கு எதிராக அனைத்துலக மனித உரிமை தரப்பினரது கண்டன அறிக்கைகளும், கவலை தெரிவிக்கும் அறிக்கைகளும் வெளிவந்திருந்ததுடன், நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் என்ற அச்சுறுத்தும் வகையிலான கருத்தாடல்களும் மேற்குறித்த தரப்பினரால் விடுக்கப்பட்டிருந்தது.
அரசாங்கம் தற்போது சந்தித்து நிற்கும் பொருளாதார-அரசியல் நெருக்கடி நிலைக்கு மத்தியில் இவ்வாறான அனைத்துலக தலையீடுகள் என்பது கோட்டாபய ராஜபக்ச அரசுக்கு பெரும் தலையிடியாகவே அமைந்திருந்தன.
இந்நிலையில், கடந்த ஏப்ரல்-09ம் திகதி காலிமுகத்திடலில் இளைஞர்களை அணிதிரளுமாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டு ‘கோ கோம் கோட்டா’ என்பதை வலியுறுத்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. பல்லாயிரக்கணக்கில் ஒன்றுகூடிய இளைஞர்கள் காலிமுகத்திடல் போராட்டத்தை தொடர் போராட்டமாக மாற்றி முன்னெடுத்து வருகின்றனர்.
காலிமுகத்திடல் கோசம் என்னவோ ‘கோ கோம் கோட்டா’ என்பதாக இருந்தாலும், செயல்வடிவில் அவ்வாறு இல்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் இளைஞர்கள் உள்ளிட்ட தரப்பினர் காலிமுகத்திடலில் சுழற்சி முறையில் ஒன்றுகூடி கோசங்களை எழுப்பி போராடுவதும், கேளிக்கை நிகழ்வுகளுடன் இரவுப் பொழுதை கழிப்பதும் மீண்டும் விடிந்ததும் கோசம்; இரவானால் கேளிக்கை. எனவே நாட்கள் கடந்து செல்கின்றன.
தினமும் புதிதுபுதிதாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தி வரினும், காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலான முன்னெடுப்புகள் தவிர்க்கப்பட்டு வருகின்றமையானது, தற்செயலானதாக கருதிவிட முடியாதுள்ளது. உணவு தவிர்ப்பு போராட்டங்கள் கூட 24 மணி நேர வரையறையுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை, காத்திரத் தன்மையுடைய போராட்ட வடிவமாக முன்னெடுப்பதற்கு பதிலாக காலிமுகத்திடல் போராட்ட களத்தை வெறுமனே கவனயீர்ப்பு போராட்டமாகவே வடிவமைத்துள்ளதன் வெளிப்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது.
சிங்கள தேசத்தின் வரலாற்றில் முதல் தடவையாக என்று குறித்துரைக்கும் வகையில் பெருந்திரள் மக்கள் ஒன்றுகூடலுடன் காலிமுகத்திடல் போராட்ட களம் 10 நாட்களை கடந்த காலப்பகுதியில் கோட்டா அரசு எதுவித சலனமும் இன்றி தனது அரச-நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுத்து வந்திருந்தது. அதுமாத்திரமல்ல, ராஜபக்சக்கள் சந்தித்து நிற்கும் பின்னடைவுகளில் இருந்து எவ்வாறு தம்மை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் அவர்கள் தீவிர கவனம் செலுத்தும் அளவுக்கு காலிமுகத்திடல் போராட்ட களம் அவகாசசத்தை வழங்கி வந்திருந்ததை எவராலும் மறுத்துவிட முடியாது.
இந்நிலையில் தான் ஏப்ரல்-19 விடிகாலை பொழுது ராஜபக்சக்களுக்கு மீண்டும் சோதனை பொழுதாகவே விடிந்தது. ஆம், முதல்நாள் நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட பின்னணியில் 19ம் திகதி சிங்கள தேசம் எங்கும் அரசுக்கு எதிரான வீதி மறியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
பேருந்துகள், முச்சக்கரவண்டிகள், கனரக வாகனங்களை வீதிக்கு குறுக்காக நிறுத்தியும், ரயர்களை போட்டு எரித்தும் தடைகளை ஏற்படுத்தி பெரும்பாலான நகரங்களில் சிங்கள மக்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இவ்வாறு ரம்புக்கனை பகுதியில் தொடருந்து பாதையை மறித்து பிரதேசவாசிகளால் முன்னெடுக்கப் பட்டிருந்த போராட்டம் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையேயான இருதரப்பு மோதல் களமாக மாறியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இலங்கை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டும், 30 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும் இருந்தனர். அவர்களில் 10இற்கு மேற்பட்டவர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சங், ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹானா சிங்கர் ஆகியோர் உடனடியாகவே இச்சம்பவத்தை கண்டித்து தமது கருத்துகளை பதிவிட்டிருந்தனர். அத்துடன் சர்வதேச மன்னிப்புச் சபையும் இதுகுறித்து கண்டித்துள்ளதுடன் சுதந்திர விசாரணைக்கும் வலியுறுத்தியுள்ளது.
எவ்வாறு ஏப்ரல்-09 இற்கு முன்னதாக மக்களின் போராட்டங்களை அடக்கி-ஒடுக்குவதற்காக பாதுகாப்புத் தரப்பினர் செயற்பட்டனரோ அதே பாணியில் ஏப்ரல் 19 நடந்து கொண்டதன் காரணமாக கோட்டா அரசின் ஜனநாயக மறுப்பும், பாதுகாப்பு தரப்பினர் மூலம் மக்களது ஜனநாய குரல்கள் அடக்கப்படும் அராஜகத்தையும் எல்லோரும் உணரத்தக்கதாக அமைந்திருந்தது.
இதன் காரணமாகவே ஜனநாயகத்தின் குரல்கள் அதிகார பலம் கொண்டு நசுக்கப்படுவதற்கு எதிராக உள்நாட்டிலும் அனைத்துலக ரீதியிலும் கண்டனக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இதுதான் கோட்டா அரசுக்கான நெருக்கடி நிலையை வலுப்படுத்தியுள்ளதே தவிர, காலிமுகத்திடல் போராட்டக் களம் அல்ல. இந்த அவதானிப்பின் அடிப்படையில் தான் கலிமுகத்திடல் போராட்டமானது எதிர்ப்பின் பெயரால் முன்னெடுக்கப்பட்டு, கோட்டா அரசுக்கு சாதகமாக அமைந்து வருவதனை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்த முடிகிறது.
ஏப்ரல்-09 இற்கு முன்னரும் ஏப்ரல்-19 இற்கு பின்னரும் கோட்டார அரசு முகம்கொடுத்துள்ள நெருக்கடி நிலையை அவதானிக்கும் போது, காலிமுகத்திடல் போராட்டமென்பது கோட்டா அரசுக்கு எவ்வித அரசியல்-சமூக நெருக்குவாரத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை என்பதை இலகுவாக உணர்ந்து கொள்ள முடியும்.
காலிமுகத்திடல் போராட்டக் களத்தின் நிலை இதுவாக இருக்க, வடக்கு, கிழக்கு தமிழர்களை குறித்த போராட்டத்தில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பு என்பது சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலின்பாற்பட்டதாகவே அமைந்துள்ளது.
சுதந்திரத்திற்கு முன்னரும் சரி பின்னரும் சரி ஈழத்தமிழர்களது போராட்ட வரலாறு தனித்துவமானது. சிங்கள தேசத்தின் வரலாற்றில் ‘கோ கோம் கோட்டா’ என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டமே முதன்மை இடத்தை பிடித்துள்ளது. அரச இயந்திரம் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரது அதியுச்ச அராஜகத்தின் வெளிப்பாட்டிற்கு மத்தியிலேயே ஈழத்தமிழர்களது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன, முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஈழத்தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளை உலகிற்கு முரசறையும் வகையில் வடக்கு, கிழக்கில் இலட்சக் கணக்கான தமிழர்கள் ஒன்றுகூடி முன்னெடுத்திருந்த ‘பொங்கு தமிழ்’ பேரெழுச்சி நிகழ்வுகளாகட்டும், ‘எழுக தமிழ்’, ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’ மக்கள் பேரெழுச்சி முன்னெடுப்புகள், கேப்பாப்பிலவு நில விடுவிப்புக்கான போராட்டம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்கான போராட்டம் என வடக்கு, கிழக்கில் நாம் முன்னெடுத்த, முன்னெடுத்து வரும் போராட்டங்களென்பன சிறிலங்கா அரச இயந்திரம் மற்றும் பாதுகாப்பு தரப்பினரது அதியுச்சமான அடக்கு முறை பிரயோகத்திற்கு மத்தியிலேயே இடம்பெற்று வருகின்றன.
நிரந்தர அரசியல் தீர்வுக்காகவும், நீதிக்காகவும் ஈழத்தமிழர்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்களில் முன்னிற்பவர்கள் காணாமல் ஆக்கப்பட்டும், கடத்தப்பட்டும், உயிரற்ற சடலங்களாக வீதிகளில் வீழ்த்தப்படும் அச்சுறுத்தலான பின்னணியுடன் ஒப்புநோக்குகையில், தற்போதைய காலிமுகத்திடல் போராட்டம் என்பது தமிழர்களால் வியந்து பார்க்கும் வகையில் இல்லை.
இது ஒருபுறமிருக்க, வடக்கு, கிழக்கில் நாம் முன்னெடுத்து வரும் மேற்குறிப்பிட்ட பலவகை போராட்டங்களுக்கு இதுவரை உரிய தீர்வோ, நீதியோ கிட்டாத நிலையில், இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வெறுமனே சிங்கள தேசத்தின் பொருளாதார நெருக்கடியை முன்னிறுத்தியதான போராட்டத்தில் தமிழர்களையும் பங்கேற்கச் செய்வது என்பது வரலாற்றுத் தவறாகவே அமைந்துவிடும்.
இலங்கை தீவு சந்தித்து நிற்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை தணியும் போது சிங்கள தேசத்து அரசியல் தரப்பினரும், பொது மக்களும் எதிரப்பு ஆர்ப்பாட்டங்களை கைவிட்டு இயல்புநிலைக்கு திரும்பிவிடுவர். சிங்கள தேசத்து அரசியல் தரப்பினரது இன்றைய நிலையே இதற்கு சான்று. கோட்டா அரசை கவிழ்ப்பது மட்டுமே தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வாகாது என்றபோதிலும், அதனையே வலியுறுத்தி வந்த சிங்கள அரசியல் தரப்புகள் இன்று சுருதியை மாற்றி சர்வகட்சி இடைக்கால அரசு ஒன்றை அமைப்பதிலேயே மும்முரம்காட்டி வருகின்றன.
20ஆம் திருத்தச்சட்டம் நீக்கப்பட்டு 21ஆம் திருத்தம் தொடர்பில் சமர்ப்பிக்கப்படும் முன்மொழிவுகளில் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பான கரிசனை துளியளவேனும் இடம்பெறவில்லை என்பதன் மூலம் சிங்கள தேசம் நிலைமாறா நிலையுடன் தொடர்வதனையே எடுத்துக் காட்டுகிறது.
இவ்வாறான நிலையில், எவ்வித அடிப்படையுமின்றி வடக்கு, கிழக்கு தமிழர்கள் காலிமுகத்திடல் போராட்ட களத்தில் பங்கேற்பதானது, ஈழத்தமிழனத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் பின்னடைவாகவே அமையும் என்பது திண்ணம்.