ஈகை. முத்துக்குமார் நினைவாக…| பெ. தமயந்தி (வழக்கறிஞர்) | பகுதி 1

முத்துக்குமார் நினைவாகபெ. தமயந்தி (வழக்கறிஞர்)

ஈகை. முத்துக்குமார் நினைவாக..“எனது உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும்.  விட்டுவிடாதீர்கள்.. என் பிணத்தை கைப்பற்றி அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்து ஈழப்போராட்டத்தை கூர்மைப் படுத்துங்கள்” என்று எழுதி வைத்துவிட்டு தன் உடலை தீயிற்க்கு தின்னக் கொடுத்த முத்துக்குமாரை மறக்க இயலுமா…???

முத்துக்குமார் நினைவாகமுத்துக்குமார் இறந்து இன்றோடு 12 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. இந்த கட்டுரை எழுதும் போதே உணர்வெழுச்சியால் கண்கள் பனிக்கின்றது. எப்படி அண்ணன் திலீபன் ஈழ விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து உயிரை மாய்த்துக் கொண்டாரோ,  அதேபோல இங்கு தமிழ்நாட்டில் முத்துக்குமார் என்ற 26 வயதுடைய இளைஞன் தமிழீழ விடுதலைப் போரில் பல்லாயிரக் கணக்கான மக்கள் சிங்களப் பேரினவாத அரசால் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப் பட்டதை கண்டித்து ஈழத் தமிழர்களை  காப்பாற்ற கோரி முழக்கமிட்டு தன்னுடலை தீயிட்டு கொளுத்திக் கொண்டு அதன் சிறு பொறியை உலகெங்கிலும் பற்றவைத்தான். அவனது எழுச்சியூட்டும் கடிதம் மூலம் அவன் பற்ற வைத்த சிறு தீ  உலகெங்கிலும் பற்றி படறி ஈழ ஆதரவு அலையாக பெருநெருப்பாய் கொளுந்துவிட்டு எரிய வைத்தது. அவன் தான் எங்கள் அன்பு தமிழ்பிள்ளை முத்துக்குமார்.

தலைவரைப் போன்று நமக்கான நல்ல தலைமை இல்லை என்று இப்போது நாம் இங்கு நிலவும் அரசியல் வெற்றிடம் குறித்து பேசுகிறோமே, அதை அப்போதே உணர்ந்து எழுதி இருந்தவர் முத்துக்குமார். “…இதை யெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குங்கள்” என்று தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழம் என்பது ஈழதேசத்தின் தேவை மட்டுமல்ல.. அது தமிழகத்தின் தேவையும் கூட என்று குரல் கொடுத்தவர்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் வந்து வாழும் வடநாட்டவராகட்டும், மாணவர்கள் மீனவர்கள், மருத்துவர்கள், பெண்கள், காவலர்கள், என அனைத்து தரப்பு இளைய சமூகத்தினரையும் தனது ஒற்றை கடிதத்தால் உணர்வெழுச்சி கொள்ளவைத்து போராட்டக் களத்தை வடிவமைத்தவர் முத்துக்குமார்.

பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும்.  “நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழருக்கு இன்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்” என்ற காசி ஆனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள்.  என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக் கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?”

என்று மருத்துவ மாணவர்களை மட்டுமல்ல ஒவ்வொரு பிரிவினரையும் தன் கடிதத்தின் வாயிலாக கேள்வி கேட்டதன் மூலம், அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத, உலகமயமாக்கலுக்குப் பிறகு பிறந்த பிள்ளைகள் எல்லாம் கூட, அவரின் கடிதத்தால் உந்தப்பட்டு,  தன்னெழுச்சியாக போராட்டங்களில் இறங்கினர். தமிழ் நாட்டின் அனைத்து மூலை முடுக்கிலிருந்தும் சென்னையை நோக்கி மக்கள் படையெடுத்தனர். கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டது. பஸ் மறியல், ரயில் மறியல் என  ஒட்டுமொத்த தமிழகத்தையும் போராட்டக் களமாக மாற்றி தமிழீழ விடுதலைக்கான குரலை ஓங்கி ஒலிக்கச்செய்தவர் தான் எனது சகோதரன்   முத்துக்குமார்.

விதியே விதியே என் செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை..? என தொடங்கும் அவரது கடிதத்தை இன்றைய நாடு கடந்து வாழும் ஈழத்தமிழ் இளைஞர்கள்  அவசியம் வாசிக்க வேண்டும் என்பதால். எனது சகோதரன் முத்துக்குமரனது கடிதவரிகளை இங்கு இணைக்கிறேன்.

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…

அன்பார்ந்த உழைக்கும் தமிழ் மக்களே…

 முத்துக்குமார் நினைவாகவணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.

உங்களைப் போல் தான் நானும். தினமும் செய்தித் தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் நானும் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது.

அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் நியாயமானதென்றால், அதை வெளிப் படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை.

தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

முத்துக்குமார் நினைவாகஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவுக்கு வரவில்லையா?

கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்து கொள்ளும் ஆகப் பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கப் போகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.

மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு மத்திய அரசைப் புரிந்துகொள்வார்.

பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் – இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்லை என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!

இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன?

ஒருமுறை அவரே சொன்னார், ”தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா”னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே…

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே… உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன்.

உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்கான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.

உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.

உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப் பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.

போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக் கொள்ள இதுதான் தருணம்.

தொடரும்…….

பெ. தமயந்தி. வழக்கறிஞர்.

துணை தலைவர்.

தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர் சங்கம்.

Tamil News