ஈழப்பற்றாளர் புலவர் புலமைப்பித்தன் காலமானார்

569 Views

ஈழப்பற்றாளர் புலவர் புலமைப்பித்தன் காலமானார்

ஈழப்பற்றாளர் புலவர் புலமைப்பித்தன் காலமானார்: சமூக அக்கறை கொண்ட திரையிசைப் பாடல்களை எழுதியவரும் தமிழீழ விடுதலையில் பேரார்வம் கொண்டவரும் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களிடத்தில் பற்றும் பாசமும் கொண்டு அவரை தன் இல்லத்தில் தங்க வைத்து உபசரித்து அழகு பார்த்தவருமான புலவர் புலமைப்பித்தன்(86) இன்று காலமானார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பை ஏற்படுத்தியவர்களின் பெரும் பங்காற்றியவர் என்பதோடு அதிமுக கட்சியில் பல பதவிகளில் இருந்தவர் புலவர் புலமைப்பித்தன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு இலக்கு  செய்தி நிறுவனம் தனது  வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

புலவர் புலமைப்பித்தனின் திரை இசை பற்றிய   சில தகவல்கள்

ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட புலமைப்பித்தன் சென்னை சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

மரபுக்கவிதைகளில் தோய்ந்த புலமைப்பித்தன் குடியிருந்த கோயில் திரைப்படத்தில் ”நான் யார நான் யார்” பாடலின் மூலம் எம்ஜிஆரின் அபிமானத்தைப் பெற்றார். பின்னர் அடிமைப் பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா… போன்ற பாடல்களையும் எழுதி தொடர்ந்து இறவாப் புகழ் பெற்றார்.

இதயக்கனி திரைப்படத்தில் நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற என்ற மிகவும் புகழ்பெற்ற பாடலை எழுதியவரும் இவரே. சிரித்து வாழ வேண்டும், ஓடி ஓடி உழைக்கணும் உள்ளிட்ட இவர் எழுதிய ஏராளமான சமூக அக்கறையுள்ள பாடல்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மறையாத இடத்தைப் பெற்றுத் தந்தன.

உன்னால் முடியும் படத்தில் புஞ்சை உண்டு நஞ்சை உண்டு என்று கமல்ஹாசனுக்கும் இவர் பாடல்கள் எழுதியுள்ளார்.

நாயகன் படத்தில் இடம்பெற்றுள்ள தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே, சிவக்குமாரின் 100-வது படமான ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் இடம் பெற்ற உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி போன்ற உருக்கமான பாடல்களையும் எழுதியுள்ளார். சமீபத்தில் வடிவேலு நடித்த எலி (2015) படத்தில் தனது கடைசிபாடல்களை எழுதினார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply