கொங்கோ மற்றும் உகண்டாவில் பரவிவரும் எபோலா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ள போதிலும், அதுவும் ஹண்டா வைரஸ் பரவலும் தற்போதைக்கு உலகளாவிய பெரும் அச்சுறுத்தலாக மாறாது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸ் தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் 79 ஆவது உலக சுகாதார மாநாட்டின் செவ்வாய்க்கிழமை (19) அமர்வில், உலகளாவிய பொதுச்சுகாதாரப் பாதுகாப்பு குறித்து உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“கொங்கோ குடியரசு மற்றும் உகண்டாவில் தீவிரமாகப் பரவி வரும் எபோலா நோய் அச்சுறுத்தல் காரணமாக, சர்வதேச அக்கறைக்குரிய பொதுச்சுகாதார அவசரநிலையை நான் பிரகடனப்படுத்தியுள்ளேன். அவசரநிலைக் குழுவைக் கூட்டுவதற்கு முன்னரே ஒரு பொதுச்சுகாதார அவசரநிலையை உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் பிரகடனப்படுத்திய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். சர்வதேச சுகாதார விதிகளின் 12 ஆவது பிரிவின்படி, இரு நாடுகளினதும் சுகாதார அமைச்சர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்தேன்.
மேலும், இதூரி மாகாணத்தில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளதால், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். எபோலா பரவலின் போது மக்கள் இடம்பெயர்வது பேரபாயத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமன்றி, ‘பண்டிபுஜியோ’ எனும் இந்த வைரஸூக்கு இதுவரை தடுப்பூசிகளோ அல்லது முறையான சிகிச்சைகளோ கண்டறியப்படவில்லை. இதற்காக அவசர நிதியிலிருந்து மேலதிகமாக 3.4 மில்லியன் டொலர்களை வழங்க அனுமதித்துள்ளேன்.
மறுபுறம் ‘எம்.வி ஹொண்டுரஸ்’ உல்லாசக் கப்பலின் பயணிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பரவிய ஹண்டா வைரஸ் தொற்றும் பேசுபொருளாகியுள்ளது. இக்கப்பலில் இருந்த பயணிகள் அனைவரும் தற்போது அந்தந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதுடன், அவர்களின் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடையும் ஜூன் மாதம் 21 ஆம் திகதி வரை அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். அத்துடன், நேற்று இந்த ‘ஹொண்டுரஸ்’ கப்பல் ரோட்டர்டாம் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. அங்கு கப்பலின் ஊழியர்கள் அனைவரும் இறக்கப்பட்டு, ஜூன் 29 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் தற்போதைய மதிப்பீடுகளின்படி, உலகளாவிய ரீதியில் இந்த ஹண்டா வைரஸ் பரவலுக்கான ஆபத்து மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. இதுவரை இத்தொற்றுக்குள்ளான 11 சம்பவங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளன. இவர்களில் மூன்று மரணங்கள் உள்ளடங்குகின்றன. எனினும், இக்கப்பலில் தொற்றுப் பரவல் ஏற்பட்டமை குறித்து உலக சுகாதார அமைப்பிற்கு முதன்முதலில் அறிவிக்கப்பட்ட மே மாதம் 2 ஆம் திகதிக்கு பின்னர், புதிய மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை. இக்கப்பலின் பயணிகள் மற்றும் ஊழியர்களைத் தொடர்ந்து மிகவும் அவதானமாக் கண்காணிக்குமாறு நாம் வலியுறுத்துகின்றோம் என்றார்.



