நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணை தோற்கடிப்பு

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 116 மேலதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணைக்கு எதிராக 152 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், ஆதரவாக 36 வாக்குகள் மட்டுமே பதிவாகின.

இதன் மூலம் அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தாம் பதவி விலக வேண்டும் என நாட்டு மக்கள் கோரவில்லை என்றும், ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களும் பிணையில் உள்ளவர்களுமே பதவி விலகுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (24) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இந்த விவாதத்தில் கருத்துரைத்த போதே நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.

“என்னை பதவி விலகுமாறு நாட்டு மக்கள் குறிப்பிடவில்லை. ஊழல்வாதிகளும், பிணையில் உள்ளவர்களுமே நான் பதவி விலக வேண்டும் எனக் கூறுகின்றனர். நான் பதவி விலகப் போவதில்லை. அதற்கான எந்தவொரு அவசியமும் கிடையாது” என்று அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நீதித்துறை மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான பொறுப்புகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும், அரசாங்கத்தின் மக்கள் ஆணைக்கு அமைவாக தனது கடமைகளை நிறைவேற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.