‘ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வு திணைக்களமே முன்னெடுக்க வேண்டுமே தவிர உதய கம்மன்பில போன்ற அரசியல் தரப்பினர் இல்லை’ என்று கத்தோலிக்க சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அப்போதைய புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலே ஆகியோரை கைது செய்வதற்கு அரசாங்கம் தயாராகுவதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்த போதே கத்தோலிக்க சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘செனல் 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில் பல தகவல்களை வெளிப்படுத்திய அசாத் மௌலானா தொடர்பில் வெவ்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர்’. ‘எனவே, உதய கம்மன்பில போன்றோர் தங்களது அரசியல் செயற்பாடுகளை மாத்திரம் முன்னெடுத்து செல்ல வேண்டும்’. ‘இவ்வாறான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஊடாகவே இடம்பெறுகின்றன’ என்று கத்தோலிக்க சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
‘ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பாதிப்படைந்தவர்களை விடவும் அதிக வேதனையுடன் கடந்த காலங்களை போன்று உதய கம்மன்பில கருத்துக்களை வெளியிடுகின்றார்’. ‘பலரை அழைத்து விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் எதிர்வு கூறியுள்ளார்’. ‘எனினும் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு உண்மை தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்’ என்று அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
‘அதற்காக உதய கம்மன்பில பதற்றமடைய வேண்டிய அவசியமில்லை’. ‘தங்களை போன்று விசாரணை முழுமையாக நிறைவடையும் வரை பொறுமையுடன் செயற்படுமாறு உதய கம்மன்பிலவிடம் கோருவதாக’ கத்தோலிக்க சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.