ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் முன்வைத்துள்ள பரிந்துரை தொடர்பில் ஆராய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் விடுவிக்கமுடியுமென சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குறித்த வழக்கில் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய பணிக்குழாம் சார்ஜென்ட் பிரேமானந்த உடலாகம, கல்கிசை காவல்நிலைய குற்றப்பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி உப காவல்துறை பரிசோதகர் திஸ்ஸசிறி சுகதபால மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பிரசன்ன நாணயக்கார ஆகியோர் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இந்நிலையில் ‘குறித்த மூவருக்கும் எதிராக மேலதிக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்க்கவில்லை’என சட்டமா அதிபரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தினால் பெறப்பட்டுள்ளதுடன் இந்த வழக்கு எதிர்வரும் மே 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இது குறித்த அரசாங்கம் அறிந்திருக்கவில்லை’ என்றும் ‘தொடர்ந்து ஆராயப்படும்’ என்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமது தந்தை லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கு தொடர்பில் கடமை தவறிய சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப்பிரேரணையை சமர்ப்பிக்குமாறு அஹிம்சா விக்ரமதுங்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ள் கடிதத்திலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ‘சட்டமா அதிபரின் இந்த தீர்மானம் தற்செயலானது அல்லவென்பது கடந்த வாரத்தில் இடம்பெற்ற விடயங்களில் தௌிவாகின்றது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘2015ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரணைகள் தீவிரமாக அல்லது நம்பகத்தன்மையுடன் இடம்பெறவில்லை’ என்றும் அஹிங்சா விக்ரமதுங்க தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். ‘சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப்பிரேரணையை முன்வைத்து அவரை பதவிநீக்கம் செய்வதே நீதிக்கான அரசாங்கத்தின் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான ஒரேவழி’ என்றும் அஹிம்சா விக்ரமதுங்க குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதியன்று ரத்மலானையின் அத்திடிய பகுதியில் படுகொலை செய்யப்பட்டதுடன், 2010 ஆம் ஆண்டு முதல் இது தொடர்பில் பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.