இலங்கை அரசாங்கமானது ஒருபோதும் இலங்கையில் நடந்த அநீதிக்கு தீர்வு வழங்காது. ஒரு சர்வதேச நீதிப் பொறிமுறை மூலமே இதற்கு தீர்வு கிட்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொருளாளர் கண்ணதாசன் சுடரோன் தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை சித்துப்பாத்தி இந்து மயானத்துக்கு அருகில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த உள்ளகப் பொறிமுறை மூலம் இற்றைவரை எமக்கான நீதி கிடைக்கவில்லை. இங்கே செயற்படுகின்ற காணாமல் ஆக்கப்பட்டோரது அலுவலகமும் சரி, அரசாங்கத்தின் நீதிப் பொறிமுறைகளும் சரி, வெறும் தரவுகளை அறிக்கையிடும் வகையிலேயே அமைகிறது.
அரசாங்கத்தின் இயந்திரமாக செயற்படும் நீதித்துறையினால் எமது பிரச்சினைகளுக்கான தீர்வினை ஒருபோதும் பெற்றுக் கொடுக்க முடியாது. ஒரு முறையான சர்வதேச பொறிமுறை ஊடாகவே எம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான தீர்வு கிடைக்க முடியும்.
2010ஆம் ஆண்டு நீக்கப்பட்ட GSP+ வரிச் சலுகை மீண்டும் 2017ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டது. அதன்போது பயங்கரவாத தடைச் சட்டமானது நீக்கப்பட வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் இன்று வரை மக்களை அடக்குகின்ற பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட விடயங்கள் நீக்கப்படவில்லை.
இது இவ்வாறு இருக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தினர் இங்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களை சரியாக சந்திக்காமல் செல்வது ஒரு கண்துடைப்பு விடயமாகவே பார்க்கப்படுகிறது.
நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை கேட்பது யாதெனில், இலங்கை அரசால் நடத்தப்பட்ட அநீதியை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தட்டிக்கேட்காது. எனவே இதற்கு முறையான ஒரு சர்வதேச பொறிமுறை செயற்படுத்தப்பட வேண்டும் என்றார்.



