காலம் தாழ்த்தாமல் தொண்டர் ஆசிரியர் நியமனங்களை வழங்க கோரி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

தொண்டர் ஆசிரியர் நியமனங்களை வழங்க கோரி

காலம் கடந்து சென்று கொண்டிருக்கின்ற நிலையில் மேலும் காலம் தாழ்த்தாமல் உரிய தொண்டர் ஆசிரியர் நியமனங்களை வழங்க கோரி தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (22)  திருகோணமலை மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக   முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில், கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த தொண்டர் ஆசிரியர்களின் நியமனங்களை வழங்குமாறு வலியுறுத்தி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தொண்டர் ஆசிரியர்களில் ஒருவர், “நாட்டில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வந்த காலகட்டத்தில் பாடசாலைகளின் ஊடாக குறித்த ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தொண்டர் ஆசிரியர்கள் ஆகிய நாங்கள் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்து இருந்தோம். ஆனால் நிரந்தர வேலைவாய்ப்பு என்று வரும்போது அரசியல் இலாபத்திற்காக சுயநலமாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடாத பல ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள விடயமானது கவலைக்குரியது. எனத்  தெரிவித்தார்.

மேலும் இந்த போராட்டத்தின் போது,கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் எனவும் அவ்வாறு அவர்களுக்கு நியமனம் வழங்குவதை விட்டுவிட்டு மாறாக பல்வேறு மாற்று செயற்பாடுகள் முன்னெடுத்து வருவதாகவும் இன்னமும் காலம் தாழ்த்தாமல் தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறும்   ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்ததுடன் குறித்த தொண்டர் ஆசிரியர்களினால் கையொப்பங்கள் அடங்கிய மகஜர் ஒன்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Tamil News