சிங்களமயமாக்கலால் நிலஇழப்பு, இந்திய மயமாக்கலால் இறைமை இழப்பு உலகமயமாக்கலால் இருப்பு இழப்பு இதுதான் ஈழத்தமிழரின் இன்றைய நிலை | ஆசிரியர் தலையங்கம் | lakku Weekly ePaper 284

ஈழத்தமிழர்களின் இறைமையையும் உள்ளடக்கிய நாடு என்று பிரித்தானிய அரசு சிறிலங்காவுக்கு அளித்த அங்கீகாரமே இன்றுவரை சிறிலங்காவை உலகநாடுகள் நாடு என்ற நிலைப்பாட்டில் தங்களோடு இணைத்து தங்களின் இறைமையைப் பாதுகாக்கத் சிறிலங்காவையும் சிறிலங்காவின் இறைiமையைப் பாதுகாக்கத் தங்களையும் முன்னிலைப்படுத்திச் செயற்பட்டு வருகின்றன. இதனாலேயே ஈழத்தமிழர் தேசியப்பிரச்சனை என்பது ஈழத்தமிழர்களின் இறைமையை மீள் உறுதிப்படுத்தி அவர்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளின் அடிப்படையில் காலனித்துவத்தால் தீர்க்கப்படாத ஐக்கிய நாடுகள் சபையால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என்பதனை இலக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபை ஈழத்தமிழரின் காலனித் துவகாலப் பிரச்சினயைத் தீர்ப்பதில் காட்டும் காலதாமதத்தால், 18.05.2009 இல் உச்சம் பெற்ற 176000 ஈழத்தமிழர்களைத் தேசமாகவே இனஅழிப்புச் செய்த சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் இனஅழிப்புப் போரின் பின்னர் இதுவரை முல்லைத் தீவு மாவட்டத்தின் ஐந்து இலட்சத்து தொண்ணூறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 74.24 வீதமான நிலப்பரப்பு சிறிலங்காவின் வனத்துறையால் படைபலத்துணையுடன் அபகரிக்கப்பட்டுள்ளது.
2009க்கு முன்னர் அடர்ந்த காடுகளாக இருந்த 36.72 வீதமான காணிகள் இரண்டு இலட்சத்து இருபத்தி இரண்டாயிரத்து ஆறு ஏக்கர் காணிதான் வனத்துறையிடம் இருந்தது. பின்னர் அபகரிக்கப்பட்ட காணிகளில் 28500 ஏக்கர் காணியில் வெலிஓயா என்று மணலாறு என்ற தொன்மை மிகு தமிழ்ப்பெயரையே சிங்களப் பெயராக மாற்றிய சிங்களக் குடியேற்றத்தை நிறுவி இன்று அந்த வெலிஓயா என்று சிறிலங்காவின் படைபல ஆக்கிரமிப்புக் குடியேற்றத்திற்கு மேலும் மேலும் காணிகளை இணைக்கும் ஆக்கிரமிப்பைச் சிறிலங்காவின் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தலைமையிலான சிங்கள பௌத்த அரசாங்கம் செய்து 2009க்குப் பின்னர் கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்துப் பத்தாயிரம் ஏக்கர் காணிகளை அபகரித்து அதனைச் சிங்களவர்களுக்கான தனியார் நிரந்தரக் குடியேற்றக் காணிகளாக இன்று காணி உறுதிப்பத்திரத்தை அங்கு குடியமர்த்தப்பட்ட சிங்களவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. நீர்நிலைகளுடன் சேர்ந்த வளமான நந்திக்கடல் அருகில் உள்ள 69401 ஏக்கர் நிலத்தில் 29401 ஏக்கர் நிலம் இன்று வனத்துறையினால் தமதாகப் புதிதாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் பறவைகள் சரணாலயம் என்ற பெயரில் இரணைப்பாலை, செம்மண்குன்று, அம்பலவன், பொக்கணை, மத்தளன், வலயர்மடம், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் 600 ஏக்கர் மக்களின் விவசாயக் காணிகள் வனத்துறையால் அபகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புள்ளிவிபரங்களை வெளிப்படுத்தியுள்ள முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டமே சிறிலங்காவால் சிங்கள மயப்படுத்தப்பட்டு ஈழத்தமிழர்கள் ஒடுக்கப்படுகையில் அங்கு வாழும் ஈழத்தமிழ் மக்கள் எங்கு செல்வது என்ற நியாயமான கேள்வியை முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு மாதமான மே மாதத்தை உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் நினைவேந்தல் செய்ய ஆயத்தமாகுகின்ற நேரத்தில் எழுப்பியுள்ளார்.
மேலும் கடந்தவாரம் 24ம் திகதி சிறிலங்காவுக்கு உமாஓயாப் பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தைத் தொடக்கி வைக்க சிறிலங்காவுக்கு வருகைதந்த ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் வருகையும் உறுதி செய்துள்ளது. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தனது உரையில் “நமது இருநாடுகளுக்கும் ஆசிய பிராந்திய நாடுகளுக்கும் இடையே அதிகபட்ச ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம், மற்றும் ஒற்றுமை என்பவற்றை உறுதி செய்வதே இங்கு முக்கியமான விடயம் என்று நான் நம்புகின்றேன். மேலும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதை விட நமது இருநாடுகளுக்கும் இடையில் உள்ள மக்களின் விருப்பமும் உறுதியும் முக்கியமானது என்றே கூறவேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அவர்களே ஈரான் இஸ்லாமியக் குடியரசிடம் உள்ள நவீன தொழில்நுட்ப அறிவை சிறிலங்காவுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராகவுள்ளோம். மேலும் சிறிலங்காவுடன் சிறந்த பங்காளித்துவத்துடன் முன்னேறிச் செல்ல ஈரான் தயாராக இருப்பதை நான் உறுதியளிக்கின்றேள்” என வெளிப்படையாகவே பேசி ஈரானின் இறைமைக்குச் சிறிலங்கா பங்காளியாகவும் சிறிலங்காவின் இறைமைக்கு ஈரான் பங்காளியாகவும் பயணிக்கும் என்பதை இஸ்ரேயலுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்காவுக்கும் மேற்குலக அணிக்கும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் சிறிலங்கா ஈரான் உடன் ஐந்து உடன்படிக்கைளைச் செய்துள்ளமையும் சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா நாம் அனைவரும் உலகளாவிய தெற்கு நாடுகள் என எங்கள் அடையாளத்தையும் சுதந்திரதிதையும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் இத்தகைய பங்காளித் திட்டங்கள் முக்கியம் எனப் பகிரங்கமாகவே அறிவித்துச் சிறிலங்காவை இந்தியத்துணைக்கண்டத்தின் தொடர்நிலப்பரப்பு என்னும் புவியியல் தன்மையில் இருந்தும் இலங்கைத் தீவில் உள்ள அனைத்து மக்களுடனும் இந்தியா பண்பாட்டு-வர்த்தக-வரலாற்றுத் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட தொகுதி என்ற இயல்புத் தன்மையில் இருந்தும் விலத்தி உலகின் தெற்கு நாடுகளுடன் அடையாளப்படுத்தியுள்ளமை சிறிலங்காவின் இந்திய விலகல் அரசியல் நிலைப்பாடடை உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும் இந்தியாவோ தானும் நாலு பில்லியன் நிதி உதவியளித்தும் அனைத்துலக நாணயநிதியத்துக்கும் உலக வங்கிக்கும் வெளிப்படையாகவே சிறிலங்காவுக்குக் கடன் கொடுக்கப் பரிந்துரையளித்தும் சிறிலங்கா சீனாவிடம் கடன் பெறுவதை மட்டுப்படுத்தும் தந்திரோபாயத்தை முன்னெடுத்து வருகிறது. ஆயினும் சிறிலங்கா சீனாவுடனான தனது நட்பை மேலும் மேலும் ஆழப்படுத்தி வருவதுதான் நடைமுறை எதார்த்தமாக உள்ளது. சீனாவின் வெளிநாட்டுக் கொள்கை வகுப்பினைச் செய்யும் சீனப் பொதுவுடைமைக் கட்சியின் அனைத்துலக விவகாரங்களின் திணைக்களத்தின் பிரதிநிதியும், அமைச்சருமான ஷன்கயன் அவர்கள் சிறிலங்காவுக்கு வருகை தந்து ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவரை மட்டுமல்ல தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசநாயக்காவையும் சந்தித்து சிறிலங்காவின் உள்நாட்டு வெளிநாட்டு செல்நெறிகள் சீனாவால் தொடர்ந்து மேலாண்மை செய்யப்படுமென்பதை இந்தியாவுக்கும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலகநாடுகளுக்கும் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் இதுவரை யாருமே சிறிலங்காவில் முதலிடாத மிகப்பெரிய முதலீடான 4.5 பில்லியன் டொலரை சினோபெக்கின் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தில் முதலிடவுள்ளது.
இந்த மாற்றங்களின் எதிரொலியாக உலகநாடுகளில் மனித உரிமைகள் குறித்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள 2023ம் ஆண்டுக்கான அறிக்கையில் 1983 முதல் 2009 வரையான காலங்களிலும் அதேபோல் ஜே வி பி கிளர்ச்சிக்காலமான 1988-1989 இலும் மனித உரிமைகள் வன்முறைப்படுத்தப்பட்டது தொடர்பான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் ஏற்படவில்லையெனத் தெரிவித்துள்ளது. இது அமெரிக்கா ஈழத்தமிழர்களைச் சிறிலங்காவின் ஒரு சமுகமாகப் பார்த்து அவர்களின் வரலாற்று இருப்பான தேசமக்கள் என்பதை மாற்றியமைத்து வருவதையும் இந்தியா தொடர்ந்தும் இலங்கையில் தமிழர்களின் கண்ணியமான வாழ்வினை உறுதிப்படுத்தல் என்கிற தனது கொள்கையுடன் கூடிய சிறிலங்காவுக்கான முதலீடுகள் கடன்கள் நிதிஉதவிகள் வழி ஈழத்தமிழர்களின் இறைமையைத் தொடர்ந்தும் மறுத்து வருவதையும் ஈழத்தமிழர்கள் உணர வேண்டிய நேரம் என்பதை இலக்கு இவ்வாரத்தில் வலியுறுத்திக் கூற விரும்புகிறது. இந்த அடிப்படை அரசியல் சிந்தனைகளில் புலம்பெயர் தமிழர்கள் மாற்றத்தைக் கொண்டுவர ஒன்று சேர்ந்து உழைக்காவிட்டால் அமெரிக்கா இஸ்ரேயலுக்கும் உக்ரேனுக்கும் தைவானுக்கும் ஆயுதவழங்கலுக்கான நிதியினை வெளிப்படையாகவே வழங்கியும் பிரித்தானியா தனது பாதுகாப்புச் செலவினத்துக்கான தொகையை 2.5 ஆக உயர்த்தியும் மூன்றாவது யுத்த உலகில் அடியெடுத்து வைத்து வரும் சூழலில் ஈழத்தமிழர்கள் நிலமும் இறைமையும் இருப்பும் இழக்கப்படும் பேரபாயம் ஏற்படும் என்பதையும் இலக்கு ஈழத்தமிழர்களுக்கு எச்சரிப்பாக எடுத்துரைக்க விரும்புகிறது.

Tamil News