ஈழத் தமிழர்க்கு விடியல்: தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு-“கோட்டாபய வீட்டுக்குப் போ” போராட்டத்திற்கு ஆதரவு

தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு

கடந்த 9ம் திகதி ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் ’ஈழத் தமிழர்க்கு விடியல் – தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு’  நடைபெற்றது. இந்த மாநாட்டில் இலங்கையில் நடைபெற்ற இனவழிப்புக்கு சர்வதேச  போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளோடு, பொருளியல் நெருக்கடியால் பெரும் அவலத்திற்கு உள்ளாகியுள்ள  சிங்களர்கள், ஈழத் தமிழர்கள், தமிழ் முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், “கோட்டபய வீட்டுக்குப் போ” எனக் கிளர்ந்தெழுந்து நடத்திவரும் போராட்டத்திற்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2022 04 11 at 2.18.45 PM ஈழத் தமிழர்க்கு விடியல்: தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு-“கோட்டாபய வீட்டுக்குப் போ” போராட்டத்திற்கு ஆதரவு

சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் ’ஈழத் தமிழர்க்கு விடியல் – தமிழ் மக்கள் கோரிக்கை மாநாட்டிற்கு தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில்  இனவழிப்புப் போரை நிறுத்த வலியுறுத்தி தன்னுயிரை  ஈகம் செய்த ஈகியர்கள் முத்துக்குமார், முருகதாசுக்கு மலரஞ்சலி மூலம் வீரவணக்கம் செலுத்தப்பட்டு,  மாநாட்டு உரைகள் தொடங்கின.

தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு

தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு நோக்கவுரை ஆற்றினார். அதை தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த தோழர் பாரி மைந்தன் மாநாட்டு தீர்மானங்களை வாசித்து அரங்கத்தில் உள்ளோரது ஏற்பைப் பெற்றார்.

தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு

பின்னர் தீர்மானங்களை அடியொற்றி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் அ.சா. உமர்பாரூக், தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், பச்சைத் தமிழகத்தைச் சேர்ந்த அருள்தாஸ், திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் சிங்கராயர்,  இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், பேராசிரியர் மணிவண்ணன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிக் குமரன், தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திமுகவின் செய்தி தொடர்பாளர் கே.எஸ். இராதாகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் நெடுமாறன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் உரையாற்றினர்.

WhatsApp Image 2022 04 11 at 2.18.19 PM ஈழத் தமிழர்க்கு விடியல்: தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு-“கோட்டாபய வீட்டுக்குப் போ” போராட்டத்திற்கு ஆதரவு

மாநாட்டின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் கீழே காண்க.

WhatsApp Image 2022 04 11 at 2.18.27 PM ஈழத் தமிழர்க்கு விடியல்: தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு-“கோட்டாபய வீட்டுக்குப் போ” போராட்டத்திற்கு ஆதரவு

 தீர்மானங்கள் :

  1. ஈழத் தமிழர்களுக்கு எதிராக  இனவழிப்புக் குற்றங்கள், மாந்த குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் செய்த கோடாபய ராசபக்சே, மகிந்த இராபக்சே உள்ளிட்ட சிங்கள ஆட்சித் தலைமைகள், சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா, கமல் குணரத்னா, ஜகத் ஜெயசூர்யா உள்ளிட்ட படைத் தலைமைகளை,  2002 ஆம் ஆண்டு  ஜூலை முதலாம் நாளுக்கு முன்னர் புரிந்த குற்றங்களையும் உள்ளடக்கக் கூடியதான இலங்கை தொடர்பான அனைத்துலகக் குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று சிறப்பாக அமைக்கப்பட்டோ, அன்றேல் குறைந்தது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, கூண்டிலேற்ற  வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
  2. 2014 ஆம் ஆண்டு வடமாகாணசபையில் இயற்றப்பட்ட தீர்மானத்தின்படியும், 2021 ஆம் ஆண்டு சனவரியில் தமிழ்த் தலைவர்களும் குடிமைச் சமூக பிரதிநிதிகளும் சேர்ந்து ஐ.நா. உறுப்பரசுகளுக்கு அனுப்பிய மடலின்படியும் 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக இயற்றப்பட்ட தீர்மானத்தின்படியும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக செய்யப்பட்ட மேற்சொன்ன பன்னாட்டு சட்டமீறல்கள் தொடர்பில் எவ்வித உள்நாட்டுப் பொறுப்புக் கூறலுக்கும் சிறிலங்கா அரசு வழி செய்யாத நிலையிலும் ஐ.நா. மாந்தவுரிமைப் பேரவையில்  இயற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்துக் கொண்டிருக்கும் நிலையிலும் இனியும் காலந்தாழ்த்தாமல் பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்ய வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
  3. இலங்கை அரசு ஐ. நா. பேரவையில் உறுப்பு வகிக்கத் தொடங்கிய 1955 ஆம் ஆண்டு திசம்பர் 14ஆம் நாளுக்கு முன்னதாகவே, இன அழிப்பைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான அனைத்துலக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு விட்டது. இதனால், இந்த ஒப்பந்தத்தின் சட்ட ஆளுகைக்கு அந்த நாடு 1951 ஆம் ஆண்டு சனவரி 12 ஆம் நாள் தொடக்கம் உட்பட்டிருக்கிறது. அந்த நாளில் இருந்து இலங்கையின் ஆட்சி மற்றும் படைத் தலைமைகள் மட்டுமல்ல அந்த நாட்டிற்கு பொறுப்பான அரசும், ஈழத்தமிழர்கள், மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் எதிராகப் புரிந்த இன அழிப்புக் குற்றத்தை பன்னாட்டு நீதிப் புலனாய்வுக்கு தவறாது உட்படுத்திடவேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
  4. ஐரோப்பிய வல்லரசிய ஆளுகைக்கு முன்னிருந்த இறைமையை மீட்டுக்கொள்ளும் உரிமையின் பாற்பட்டும், பெரும்பான்மைத் தமிழீழ மக்களின் மக்களாணை பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பாற்பட்டும், அளப்பரிய ஈகங்களுடன் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் விளைவாக மெய்ந்நிலை அரசொன்றை நடத்தியவர்கள் என்ற வகையிலான இறைமையின் பாற்பட்டும், இனவழிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஈழத் தமிழர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஈடுசெய் நீதி என்ற பன்னாட்டு நடைமுறையின் பாற்பட்டும் இறைமையை மீட்டுக் கொள்ளும் வாய்ப்பை வழங்கும் வகையில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஈழத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி இலங்கைத் தீவின் இனச்சிக்கலுக்கு அரசியல் தீர்வு காண வேண்டுமென இம்மாநாடு கோருகிறது.
  5. முள்ளிவாய்க்கால் படுகொலையோடு தமிழின அழிப்புக்கான தடைகள் அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக தமிழீழத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்பை (Structural Genocide) தடுத்து நிறுத்துவதற்குப் பன்னாட்டுப் பாதுகாப்பு பொறியமைவு (International Protective Mechanism) ஒன்றை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழத் தாயகத்தில் ஏற்படுத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
  6. மாந்தவுரிமைகளுக்கான ஐநா. உயராணையர் மிசேல் பசலே 2021 சனவரியில் கொடுத்த பரிந்துரைகளான – போர்க் குற்றங்களுக்கான சான்றுகளைப் பாதுகாத்தல், சிறிலங்காவில் பன்னாட்டுக் குற்றங்கள் செய்தவர்கள் மீது ஐ.நா. உறுப்பரசுகள் எல்லைகடந்த மேலுரிமைக் கோட்பாடுகளின்படி (Universal Jurisdiction) அந்தந்த நாட்டு நீதிமன்றங்களிலும்  அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தல், பயணத் தடை விதித்தல், சொத்துகளை முடக்குதல்   ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
  7. தமிழர் தாயகப் பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில் இலங்கையின் வடக்கு கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள சிங்களப் பெரும்படை உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
  8. போரின் முடிவில் சிங்களப் படையினரிடம் கையளிக்கப்பட்டோர் உள்ளிட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட 19,000 த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலுக்கு வழிசெய்ய பன்னாட்டுப் பொறுப்புக்கூறல் பொறியமைவு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
  9. போர்க் கைதிகள் உள்ளிட்டதமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
  10. தொல்லியல் பணிகள், மகாவலி வளர்ச்சித் திட்டம், வனத்துறை, வன விலங்குகள் துறை, சுற்றுலாத் துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் ஊடாக தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதும் தமிழர்களின் வரலாற்று மரபுவழித் தாயகம் என்பதற்கான சான்றுகளை அழிப்பதும் தமிழ்ச் சிற்றூர்களின் எல்லைகளை மாற்றியமைப்பதும் மக்களின இயைபை (demographic composition) மாற்றிக் கொண்டிருப்பதும்  உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
  11. தமிழர்களின் வரலாற்று மரபுவழித் தாயகம் என்பதை ஏற்று வடக்குகிழக்கு மாகாணங்களை இணைத்துகுடியியல் ஆட்சியை அங்கு நிறுவும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
  12. இலங்கையின் வடக்கும் கிழக்கும் ஈழத் தமிழர்களினமரபுவழி தாயகம் என்பதை இந்திய அரசு திட்டவட்டமாக அறிந்தேற்க வேண்டும். தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற கொள்கைகளுக்கு முரணான தீர்வு எதையும் இந்திய அரசு நேரடியாகவோ மறைமுகமாகவோ தமிழர்கள் மீது திணிக்கக் கூடாது என இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
  13. தமிழீழ மக்களின் அரசியல் வேணவாக்களைத் துச்சமாக மதித்தும் சிங்கள பெளத்த பேரினவாதம் தமிழின அழிப்பு என்ற கட்டத்தை அடைந்துவிட்டதை பொருட்படுத்தாமலும் இந்திய அரசு 13 ஆம் சட்டத்திருத்தத்தை ஓர் அரசியல் தீர்வென்று தமிழீழ மக்கள் மீது திணிப்பதற்கு செய்துவரும் முயற்சிகளை தமிழ்நாட்டு மக்கள் சார்பில் இம்மாநாடு உறுதியாக மறுதலிக்கிறது.
  14. இந்திய அரசு மேற்சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் ஐ.நா.உள்ளிட்ட பன்னாட்டு மன்றங்களில் முயற்சிகள் எடுக்குமாறு இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
  15. தமிழ்நாடு அரசு மேற்சொன்ன கோரிக்கைகளை ஏற்கும்படி இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும்,  உலக நாடுகளிடமும் ஐ.நா உறுப்பரசுகளிடமும் ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்டுவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
  16. தமிழீழத் தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் புலம்பெயர் தமிழ் உலகத்திலும் தமிழ் மக்களும் அவர்தம் அமைப்புகளும் தலைமைகளும் மேற்சொன்ன கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு ஒன்றுபட்டு நின்று உறுதியோடு போராட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

WhatsApp Image 2022 04 11 at 2.18.51 PM ஈழத் தமிழர்க்கு விடியல்: தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு-“கோட்டாபய வீட்டுக்குப் போ” போராட்டத்திற்கு ஆதரவு

சிறப்பு தீர்மானம்:

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள் பொருளியல் நெருக்கடியால் பெரும் அவலத்திற்கு உள்ளாகியுள்ள  சிங்களர்கள், ஈழத் தமிழர்கள், தமிழ் முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், “கோட்டபய வீட்டுக்குப் போ” எனக் கிளர்ந்தெழுந்து நடத்திவரும் போராட்டத்தை இம்மாநாடு வாழ்த்துகிறது. அதேநேரத்தில் , இப்போராட்டம் ஆள்மாற்றம், ஆட்சி மாற்றம் என்பதாக முடிந்து போய்விடக் கூடாது. பொருளியல் நெருக்கடிக்கு வித்திட்ட சிங்கள பெளத்தப் பேரினவாத ஒடுக்குமுறை அரசியலுக்கு முடிவுகட்டி, தேசிய இன சிக்கலுக்கு குடியாட்சியத் தீர்வு காண்பதில்தான் இலங்கை தீவில் உள்ள மக்களினங்களின் இருப்பும் நல்வாழ்வும் எதிர்காலமும் அடங்கியுள்ளது என்பதைப் புரிந்து கொண்டு அனைத்து தரப்பாரும் அதை நோக்கி பாடுபட வேண்டும் என இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.