கொரோனா தொற்றினால் 10 நாட்களில் 591 பேர் மரணம்; அமைச்சர் பவித்திரா தகவல்

Pavithradevi Wanniarachchi கொரோனா தொற்றினால் 10 நாட்களில் 591 பேர் மரணம்; அமைச்சர் பவித்திரா தகவல்இலங்கையில் கடந்த 10 நாட்களில் மட்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளான 21,344 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 591 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, கொரோனாவின் அலை ஏற்படுவது குறித்து சரியாக குறிப்பிட முடியாதுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன் நாட்டில் இதுவரையில் 45,831 சிறுவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 14 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கொரோனா தொற்று நிலவரம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நிலையியல் கட்டளை 27/2இன் கீழ் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நேற்று வியாழக்கிழமை பதிலளித்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி மேலும் கூறுகையில்,

கடந்த வாரத்திற்குள் உலகளாவிய ரீதியிலும் மற்றும் தெற்காசிய வலயத்திற்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு சமாந்திரமாக இலங்கையிலும் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. இதற்கு முன்னரான வாரங்களில் 1000 முதல் 1500 வரையிலான தொற்றாளர்களே நாளாந்தம் அடையாளம் காணப்பட்டனர். ஆனால் கடந்த ஒரு வாரத்திற்குள் அந்த எண்ணிக்கை 2000 முதல் 2500 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை இலங்கையின் சனத் தொகையில் 30 வயதுக்கு மேற்பட்டோரில் 86 வீதமானோருக்கு ஏதேனும் ஒரு கொரோனா தடுப்பூசியாவது வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 18 வீதமானோருக்கு இரண்டாவது தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் மாதங்களுக்குள் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒரு தடுப்பூசியாவது ஏற்றப்பட்டு விடும்.

இந்நிலையில் நாட்டில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

தற்போது பல்வேறு நாடுகளில் அடிக்கடி கொரோனா அலைகள் உருவாகின்றன. இந்த தொற்று அடிக்கடி மாறுவதால் அடுத்த கொரோனா அலை ஏற்படுவது குறித்து சரியாக குறிப்பிட முடியாது. எவ்வாறாயினும் சர்வதேச நாடுகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தடுப்பூசிகள் மற்றும் தனிமைப்படுத்தல் முறைகள் மூலம் அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

இதன்படி கடந்த 10 நாட்களில் (ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 4 வரை) நாட்டில் 21,344 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 591 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தக் காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 79 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் தொற்றாளர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஜூலை 23 ஆம் திகதி 23,804 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற நிலையில் அந்த எண்ணிக்கை ஆகஸ்ட் முதலாம் திகதி 30,017 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது 164 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற ரீதியில் சுகாதர பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை, மக்களின் வாழ்வாதரம் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்லக் கூடியவகையில் இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் ஊடாக கொரோனா தொடர்பான சுகாதார ஒழுங்குவிதிகள் தளர்த்தப்படுவதில்லை. அந்த ஒழுங்குவிதிகள் அவ்வாறே பேணப்படும்.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கக் கூடிய மேலும் 90 கட்டில்கள் அமைக்கப்படுகின்றன. தற்போது அனைத்து பிரிவுகளிலும் 186 தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டில்கள் உள்ளன. அத்துடன் அரச வைத்தியசாலைகளில் தேவையான ஒட்சிசனும் உள்ளது.. தேவைகள் அதிகரிக்கும் பட்சத்தில் அதனை நிறைவேற்றக் கூடிய வகையில் அதனை பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவையின் அனுமதியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் கொரோனா தொற்றால் 45,831 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 26,143 சிறுவர்களும், 10 வயதுக்கு குறைந்த 19,688 சிறுவர்களும் அடங்குகின்றனர்.அத்துடன் 14 சிறுவர்கள் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 16 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட 2 பேரும், 11 முதல் 5 வயதுக்கு இடைப்பட்ட 2 பேரும், 6 முதல் 10 வயதுக்கு இடைப்பட்ட 3 பேரும் 5 வயதுக்கு குறைவான 7 பேரும் அடங்குகின்றனர்.

இந்நிலையில் 18 வயதுக்கும் குறைவானவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குவது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக இறுதித் தீர்மானம் சிறுவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கான விசேட நிபுணர்கள் குழுவினால் எடுக்கப்படும் என்றார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021