கூட்டுறவும் அபிவிருத்தியும் | துரைசாமி நடராஜா

429 Views

கூட்டுறவும் அபிவிருத்தியும்

கூட்டுறவும் அபிவிருத்தியும்

பெருந்தோட்டத் தொழிற்றுறை நாட்டின் முதுகெலும்பாக இருந்து,  அதிகளவான அந்நியச் செலாவணியை நாட்டிற்கு  பெற்றுக் கொடுத்த காலம், வரலாற்றில் முக்கியத்துவம் மிக்கதாகும். பெருந்தோட்ட மக்கள் நாடுயரத் தம்மை அர்ப்பணித்து செயற்பட்ட நிலையில், அம்மக்களின் வாழ்க்கையில் அபிவிருத்தியை ஏற்படுத்த எந்தளவுக்கு ஆட்சியாளர்கள் முன்னின்று செயற்பட்டார்கள்? என்பது கேள்விக்குறியான ஒரு விடயமேயாகும்.

உதிரத்தை வியர்வையாக ஈந்து நாட்டின் எழுச்சிக்காகப் பாடுபடும் தொழிலாளர்கள், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நோக்கப்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல. இதன் தொடர்ச்சி இன்றும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றது. பெருந்தோட்ட மக்கள் மீதான அழுத்தங்கள் பல மட்டங்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதில் நிறுவனத்தினரின் தொழில் ரீதியான நெருக்கீடுகள் அண்மைக்காலமாக கணிசமாக அதிகரித்துள்ளன.

கூட்டுறவும் அபிவிருத்தியும்இந்நிலையில் இதனைக் கண்டித்து அதிருப்தி யான வெளிப்பாடுகள் பலவும் முன்வைக்கப் பட்டு வருகின்றன. நிறுவனத்தினரின் நெருக்கீடு களால் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளதோடு, தேயிலைத் தொழிற் றுறையில் இருந்தும் பல தொழிலாளர் கள் நீங்கி மாற்றுத் தொழிற் றுறையை நாடிச் செல்வதற்கும் இது உந்து சக்தியாகி இருக்கின்றது. இதனிடையே கொரோனாவை  மையப்படுத்தி தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதற்கு முதலாளிமார் முயற்சித்து வருகின்ற ஒரு போக்கு காணப்படுவதாக குற்றஞ்சுமத்தியுள்ள  தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, இத்தகைய செயற்பாடுகளுக்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றார்.

தமிழகத்தில் இருந்து  தமிழ் மக்கள் கூலித் தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்ட காலம் முதலே அவர்கள் பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றமை ஒன்றும் புதிய விடயமல்ல. இந்தியாவில் நிலவிய பஞ்சம், தொழிலின்மை உள்ளிட்ட பல காரணிகள் தொழிலாளர்களின் இடம்பெயர்விற்கு வலுச்சேர்த்தன. 1799 ற்கும் 1834 ற்கும் இடையில் இந்தியாவில் பலமுறை பஞ்சங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

கூட்டுறவும் அபிவிருத்தியும்1833, 1834 இல் ஏற்பட்ட பஞ்சத்தினால் குண்டூர் பகுதியில் மட்டும் மொத்த மக்கள் தொகையில் 30 – 50 வீதமானோர் இறக்க நேரிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் இருந்து நல்வாழ்வு தேடி இங்கு வந்த கூலித் தொழிலாளர்களின் நிலை பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்ட நிலையில் கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்ட ஒன்றாகவே இருந்தது. மலைப்பாங்கான பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் போதுமான உணவு, உறையுள், மருத்துவ வசதிகளின்றி அல்லல்பட்ட காலங்கள் கசப்பான வரலாறுகளாகும். 1841 – 1848 ம் ஆண்டுகளுக் கிடையில் ஒரு இலட்சத்து 29,360  ஆண்களும், 2635 பெண்களும் மற்றும் 1518 சிறுவர்களும் தோட்டங்களை வந்தடைந்தனர். இவர்களில் சுமார் 70 ஆயிரம் பேர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்ததாக அதிர்ச்சிதரும் தகவலொன்று வலியுறுத்துகின்றது.

தோட்டத் தொழிலாளர்களின் தொழில் நிலைமைகளும் மோசமானதாகவே காணப்பட்டன. அடிமைகளைப் போன்றே இவர்கள் வழிநடத்தப்பட்ட நிலையில் இதற்கு கங்காணியின் ஒத்துழைப்பு அதிகமாகவே காணப்பட்டது. தொழிலாளர்கள் பல்வேறு சுரண்டல்களுக்கும் ஏமாற்றுதல்களுக்கும் உள்ளானார்கள். கங்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி மோசம்போன ஒரு சமூகமாக இம்மக்கள் கூட்டத்தினர் விளங்குகின்றனர். ஒரு தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் எவ்வளவுதான் கொடுமைகள் நிகழ்ந்தபோதும், அங்கிருந்து வெளியேற முடியாமைக்கு மூன்று காரணங்கள் செல்வாக்குச் செலுத்தியதாக பேராசிரியர் சோ.சந்திரசேகரன் சுட்டிக்காட்டுகின்றார். கிராமத்தில் கங்காணியிடம் வாங்கிய கடன், தன்னைக் கூட்டிவந்து கங்காணியை எப்படி விட்டுச் செல்வது என்ற அறவொழுக்கம், துண்டு முறை என்பனவே அவையாகும்.

தோட்டத் தொழிற்றுறையில் தொழிலாளர்களின் உரிமைகள் மிகவும் மோசமாக மழுங்கடிக்கப்பட்டிருந்த நிலையில், தட்டிக் கேட்போர் கொலை செய்யப்பட்ட வரலாறுகளும் இல்லாமலில்லை. மாத்தளையைச் சேர்ந்த தொழிலாளி கருப்பண்ணனின் கொலை இதற்கொரு உதாரணமாகும். தவறுகளைத் தட்டிக் கேட்ட தொழிலாளர்கள் சில சந்தர்ப்பங்களில் மரங்களில் கட்டி வைக்கப்பட்டு சாட்டையால் அடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். 1891 – 1893 ம் ஆண்டுகளில் தேசிய மரண வீதம் 7.42 எனினும் மலையக மக்களின் மரண வீதம் 21 ஆக இருந்தமையானது, பலரினதும் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

தோட்டத் தொழிலாளர்களின் துன்ப வாழ்க்கையைக் கண்டு கொதித்தெழுந்து, அதனை மாற்ற‌முனைந்த வெள்ளைக்காரத் துரை எம்.ஏ.எல்.பிரேஸ்கேடில் என்றும் நினைவு கூரத்தக்க ஒருவராக விளங்குகின்றார். “நான் உங்களுடைய உணர்வுகளை அறிவேன். அதனை நான் மதிக்கிறேன். இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக்காக நீங்கள் ஆயுதமாக நிற்பதைக் காண்கிறேன். என் அன்புக்குரிய தோழர்களே நான் விரைவில் உங்கள் அழகிய நாட்டை விட்டு வெளியேறி விடுவேன். நான் உங்களை மீண்டும் ஒரு போதும் காணமாட்டேன். ஆனால் தோழர்களே நான் உங்களுடைய போராட்ட உணர்வுகளை உலகிலுள்ள எல்லாத் தொழிலாளர்களின் நெஞ்சங்களுக்கும் எடுத்துச் செல்வேன்” என்ற அவரது வார்த்தைகள் முக்கியத்துவம் மிக்கதாக அமைந்தன.

கூட்டுறவும் அபிவிருத்தியும்கல்வித்துறையிலும் தொழிலாளர்கள் பல்வேறு வழிகளிலும் ஓரங்கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இலங்கை அரசின் கொள்கைகள் பால், வகுப்பு, இனம் என்பவற்றின் அடிப்படையில் பாரபட்சம் காட்டவில்லை. ஆனால் இதற்கு ஒரேயொரு புறநடை உண்டு. அதாவது தென்னிந்தியா விலிருந்து கொண்டு வரப்பட்டு பெருந் தோட்டங்களில் வேலைக்கமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் கல்வி காலனித்துவ வாதிகளின் தேவைகளுக்கு அடிபணிந்திருந்தது.

சுதந்திரத்துக்குப் பின்னரான அபிவிருத்திக் கொள்கைகளும் கூட அவர்களை கவனத்தில் கொள்ளவில்லை என்று மலையகக் கல்விக்கு எதிரான அரசின் பாரபட்சம் தொடர்பில் பேராசிரியர் சுவர்ணா ஜயவீர (1983) குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சுமார் இருநூறு நூற்றாண்டு காலமாக தொடர்ச்சியாக சுரண்டலுக்கும் ஒடுக்கு முறைக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு மக்கள் கூட்டத்தின் கல்வி முறைமையும், அத்தகைய ஒடுக்கு முறையின் அடையாளங்களும் காலனித்துவ மிச்ச சொச்சங்களையும் கொண்டிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை என்று பேராசிரியர் தை.தனராஜ் கூறுவதும் இங்கு நோக்கத்தக்கதாகும்.

தொடரும் துன்பங்கள்

தோட்டத் தொழிலாளர்களின் கடந்தகால வரலாறு எந்தளவுக்கு துன்பகரமானதோ, அவ்வாறே சமகால வரலாறும் அமைந்திருப்பதாக பலரும் விசனப்பட்டுக் கொள்கின்றனர். இம்மக்களின் பல்துறைசார் தேவைகளும் இன்னும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் ஒரு இருள்மயமான வாழ்க்கையையே இவர்கள் எதிர்நோக்கி வருகின்றனர் என்பது யாவரும் அறிந்ததாகும். இனவாத சக்திகளின் மேலெழும்புகைகள் இவர்களைக் கூறுபோட்டு குளிர்காய்வதில் முனைப்புடன் இருந்து வருகின்றன. சமூக விரிசலை ஏற்படுத்தி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயலும் நடவடிக்கைகளும் அதிகமாகவே இடம்பெற்று வருவதனை அவதானிக்க முடிகின்றது.

திட்டமிட்ட குடியேற்றங்கள், காணி அபகரிப்புகள், கலாசார முடக்கங்கள், பொருளாதாரத்தை மழுங்கடிக்கச் செய்வதன் ஊடாக சகல துறைசார் நிர்வாண நிலைக்கு வித்திடுதல் எனப் பலவும் இதன் வடிவங்களேயாகும். தோட்டங்களில் உத்தியோகத்தர் மட்ட நிலைகளில் முன்பெல்லாம் தமிழர்களையே அதிகமாகக் காணமுடிந்தது. வெளிக்கள உத்தியோகத்தர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், சாரதிகள், சிறுவர் அபிவிருத்தி நிலைய உத்தியோகத்தர்கள் எனப்பலவும் இதில் உள்ளடங்கும். இருந்த போதும் இப்போது தோட்டப் புறங்களில் இத்தகைய பதவிகளில் பெரும்பான்மை சமூகத்தினர் அமர்த்தப்பட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது. பெரும்பான்மையினரை தோட்டங்களில் உள்நுழைத்து தோட்டப்புற இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புக்களை பறித்தெடுப்பது ஒருபுறமிருக்க, இம்மக்களின் கலாசார விழுமியங்கள் சிதறடிப்புக்கு உள்ளாவதையும் காண முடிகின்றது.

தோட்டத் தொழிலாளர்கள் ஆரம்ப காலத்தில் இங்கு அழைத்து வரப்பட்ட நிலையில், உறையுள் வசதிகள் உரியவாறு காணப்படாத நிலையைப் போன்றே இன்னும் இது தொடர்பில் திருப்தியற்ற நிலை காணப்படுகின்றது. ஆரம்பத்தில் உழைப்பிற்கேற்ற வேதன வழங்கலில் தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதைப்  போன்றே சமகாலத்திலும் வேதன இழுபறிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முதலாளி, தொழிலாளி ஆகியோரிடையே உறவுகளைப் பேணுகின்ற சட்டங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்ட நிலையில் அவை முதலாளிகளுக்குச் சார்பானதாகவே பெரிதும் அமைந்திருந்தமை கடந்தகால வரலாறாகும்.

19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் இயற்றப்பட்ட சட்டங்கள் நடைமுறையில் இருந்த தொழிலாளர் பற்றிய சட்டங்கள் யாவும் அக்காலத்தில் மேற்கிந்தியத் தீவுகளிலும் மொரிசியசிலும் இருந்த சட்டங்களைக் காட்டிலும் குறைவான நன்மைகளையும் வசதிகளையும் தொழிலாளர்களுக்கு வழங்கியதாக அறிய முடிகின்றது. அச்சட்டங்கள் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்காத நிலையில், தொழிலாளர்கள் தமது தோட்டங்களை விட்டு அகன்று செல்வதைத் தடை செய்வதையும், அவர்கள் ஒப்பந்தத்தை மீறுமிடத்து அவர்களைத் தண்டிப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகவே அமைந்தன. பின்வந்த காலங்களில் இந்நிலை மாற்றமுற்று தொழிலாளர் நலன் பேணும் சட்டங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டபோதும், தொழிலாளர்கள் எந்தளவுக்கு சாதக விளைவுகளைப் பெற்றுக் கொண்டார்கள் என்பது கேள்விக்குறியேயாகும்.

கைத்தொழில் புரட்சியின் ஆரம்பத்திலிருந்தே தொழிலாளர் உரிமைகள் என்ற சங்கல்பத்தை தொழில் செய்யும் பொதுமக்களின் பொருளாதார மற்றும் சமூகம் சார்ந்த அபிவிருத்தியுடன் வேறாக்க முடியாத ஒன்றாக கட்டுப்பட்டு இருக்கின்றது. தொழில் சட்டம் என்பது எஜமான் – தொழிலாளி ஆகிய இரு தரப்பினர்களுக்கும் இடையில் உள்ள உரிமைகள் மற்றும் கடமைகளைப் பரிபாலனம் செய்யும் விசேட சட்டத் துறையாகும். இன்று வரையில் இந்தத் துறையின் மூலம் கைத்தொழில் தொடர்புகளின் சகல பிரிவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று கூறும், நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்ட தேசிய கருத்திட்ட இணைப்பாளர் திருமதி. சர்மிளா பெரேராவின் கருத்துக்களும் இங்கு நோக்கத்தக்கதாகும்.

கூட்டுறவும் அபிவிருத்தியும்ஆரம்ப காலம் தொட்டே தொழிலாளர்களின் உரிமைகள் பல வழிகளிலும் மீறப்பட்டு வரும் நிலையில் கொரோனா அவற்றுக்கு மேலும் வலுசேர்த்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. கோவிட் நிலைமையை காரணம் காட்டி அதிகமான முதலாளிமார், தொழிலாளர் களின் உரிமைகளை இல்லாமலாக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதற்கு ஒரு போதும் தாங்கள் இடமளிக்கப் போவதில்லை என்றும் தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்திருக்கின்றார். மேலும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களில் பல சட்டதிட்டங்களை அமுல்படுத்தியுள்ளது. சம்பள  அதிகார சபை ஊடாக 1000 ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டபோதும், அந்த நடவடிக்கை தற்போது நீதிமன்றம் சென்றிருப்பதால் நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தவுடன் 1000 ரூபா சம்பள அதிகரிப்பைப் பெற்றுக் கொடுக்க தேவையான சட்டங்களை கொண்டு வரவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.

தோட்டத் தொழிற்றுறையில் பல்வேறு நெருக்கீடுகள்  இருந்து வருகின்றபோதும் ஆளுமையற்ற, சுயநலவாத மலையக அரசியல் பிரதிநிதித்துவங்கள் இதனைக் தட்டிக்கேட்க திராணியற்றிருப்பதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது. இக்கூற்றில் உண்மை இல்லாமலுமில்லை. சில பிரதிநிதித்துவங்கள் ஊடகங்களில் அறிக்கை விடுவதில் காட்டுகின்ற ஆர்வத்தினை தொழிலாளர் மேம்பாட்டுச் செயற்பாடுகளில் வெளிப்படுத்துகின்றனரா? என்பது சந்தேகத்திற்கு இடமானதேயாகும். இதேவேளை தோட்டங்களில் பல்வேறு கெடுபிடிகளின் பின்னரே தொழிற்சங்கங்களை ஆரம்பிக்கும் நிலைமை உருவானது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் ஒரு காலத்தில்  தொழிலாளர்களின்  கலங்கரை விளக்கமாக திகழ்ந்தன.

எனினும் சமகாலத்தில் இதன் செயற்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் கையாலாகாத நிலைமைகள், தொழிலாளர் நலன் சார்ந்த முன்னெடுப்புக்களை மேற்கொள்வதில் உள்ள தேக்க நிலை எனப்பலவும் தொழிலாளர்களின் உரிமைகள் மழுங்கடிக்கப்படுவதற்கு ஏதுவாகியுள்ளன. இந்நிலையில் இழந்த உரிமைகளை மீளப் பெற்றுக் கொள்ளவும், உள்ள உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், புதிய உரிமைகளைப் பெற்றுக் கொள்ளவும் தொழிற்சங்கக் கலாசாரம் வலுப்படுத்தப்படுதல் வேண்டும். ஐக்கியத்துடனானதும், விட்டுக் கொடுப்புடனானதுமான அரசியல், தொழிற்சங்கச் செயற்பாடுகளே தொழிலாளர் தலைநிமிர வாய்ப்பளிக்கும்.?

மலையக கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் தொடர்பில் நாளுக்கு நாள் விமர்சனங்கள் அதிகமாக இருந்து வருகின்றன. மலையக சமூகத்தின் உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கையில், கட்சிகளும் தொழிற்சங்கங்களும் வாய்மூடி மௌனித்திருப்பதாக கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சகலதுறை சார்ந்தோரும் பொறுப்புடன் செயற்பட்டு, மலையகத்தை மேலெழும்பச் செய்ய வேண்டியது அவசியமாகும்.

Tamil News

1 COMMENT

  1. […] கூட்டுறவும் அபிவிருத்தியும் பெருந்தோட்டத் தொழிற்றுறை நாட்டின் முதுகெலும்பாக இருந்து, அதிகளவான அந்நியச் செலாவணியை நாட்டிற்கு பெற்றுக் கொடுத்த காலம், வரலாற்றில்மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-170-february-19/ https://www.ilakku.org/  […]

Leave a Reply