கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்
கிழக்கு மாகாணத் தமிழர்களின் அரசியல் பொருளாதார நிலைமைகள் குறித்து நாங்கள் தொடர்ச்சியாக எழுதி வருகின்றோம். கிழக்கு மாகாணத்தின் முக்கியத்துவம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உணரப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் இது தொடர்பில் வெளிப்படுத்த வேண்டிய பல விடயங்களை எனது பத்தி ஊடாக எழுதி வருகின்றேன். இவற்றினை வெறுமனே வெறும் எழுத்துக்களாக நோக்காமல், கிழக்கு மாகாண தமிழ் மக்களின் உண்மை நிலையினை உணர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், யுத்தம் மௌனிக்கப்பட்டு 12வருடங்களைக் கடந்துள்ள நிலையில், தமிழ் தேசியப் பரப்பின் கொள்ளைகளையும் அதன் பற்றுறுதிகளையும் ஆட்டங்காணச் செய்யும் செயற்பாடுகள் மிகவும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ் தேசியத்திற்கு எதிரான சக்திகள் இன்று ஒன்றிணைந்து மேற்கொள்ளும் செயற்பாடுகளைத் தடுத்து, தமிழ்த் தேசியத்தின் தேவைப்பாட்டினைச் சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்வதற்கான எந்தவித அடிப்படை வேலைப்பாடுகளும் இன்றியே தமிழ்தேசியப் பரப்பில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் இருக்கின்றன.
அண்மையில் நிகழ்வுவொன்றில் உரையாற்றிய மொட்டுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான வியாழேந்திரன், “எங்களை தெரிவு செய்தால் உரிமையினைப் பெற்றுத் தருவோம், ஈழத்தினைப் பெற்றுத் தருவோம் அதைப் பெற்றுத் தருவோம் என்றெல்லாம் பேசி, அந்த வாக்குகளில் வெற்றி பெற்றதன் பின்னர், குடிநீரைக்கூட பெற்றுக் கொடுக்க முடியாத நிலையே காணப்படுகின்றது. மக்களின் அன்றாடப் பிரச்சினையைக் கூடத் தீர்க்கமுடியாத நிலையே உள்ளது. ஒரு சமூகத்தின் வளர்ச்சியைப் பற்றி சிந்திப்பதாயிருந்தால், தமிழர்களின் அரசியல் மாற்றப்பட வேண்டும். தமிழர்களின் அரசியலில் உள்ள சாபக்கேடும் இதுவாகவேயிருக்கின்றது. தமிழ் சமூகம் மற்றைய சமூகத்திற்கு இணையாக வளர்த்தெடுக்கப்பட வேண்டுமானால், அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெக்கப்பட வேண்டுமானால், தமிழர்களின் அரசியல் அடிப்படையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவதாக அந்த அரசியல் இருக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இவ்வாறான கருத்துகள் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய சிந்தனையினையை இல்லாமல் செய்வதற்கு ஒரு பிரசாரமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான கருத்துகளையே இன்னுமொரு அரசசார்பு பாராளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் தெரிவித்து வருகின்றார்.
இவ்வாறான கருத்துகள் தமிழ் மக்கள் மத்தியில் புதிய பிரசாரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் சக்திகள் கனகச்சிதமாக இந்த செயற்பாட்டினை முன்னெடுத்துவரும் நிலையில், தமிழ் தேசியப் பரப்பில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாத நிலையென்பது தமிழ் தேசியத்தின் பாரிய வீழ்ச்சியாகவே நோக்கப்பட வேண்டும்.
தமிழ் தேசியத்தின் மிக முக்கிய சக்தியாகவுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கான போராட்டங்கள் என்பது இன்று கிழக்கு மாகாணத்தில் வலுவிழந்து நிற்கின்றது. அல்லது வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்த வரையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் 2500க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். தமிழர் தாயகப் பகுதியில் முதன் முறையாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுபவர்கள் இணைந்த முதல் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இருந்தது. ஆனால் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டங்கள் நடைபெறுவதில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கத்தையே காணவில்லை.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அமைப்பு காணாமல் போனதன் பின்னணிகள் மிகவும் கவலைக்குரியது. தமிழ் தேசிய அரசியல் பரப்பில் அரசியல் செய்ய முனையும் அரசியல் சக்திகள் இவர்களைப் பாதுகாக்கத் தவறியதன் காரணமாகவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு போன்ற பல அமைப்புகள் கிழக்கு மாகாணத்தில் மௌனிக்கப்பட்ட நிலையில் உள்ளன.
தமிழ் தேசியப் பரப்பில் செயற்படும் அமைப்புகளையும் அதனை சார்ந்தவர்களையும் கிழக்கில் எவ்வாறு ஓடுக்கலாம் என்பதை அரசு சார்பாக செயற்படுபவர்கள் மிகவும் கச்சிதமாக மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நிலையிலேயே இன்று கிழக்கு மாகாணத்தின் நிலைமை இருக்கின்றது. இதற்கான அடுத்தகட்ட நகர்வினை செய்யவேண்டிய காலத்தின் கட்டாயம் இன்று அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
வடக்கினைப் பொறுத்தவரையில், இன்று பல்வேறு தமிழ் தேசிய சக்திகளும் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் நிலையில், கிழக்கில் அந்த நிலைமையானது பூச்சியமாகவே இருக்கின்றது.
இவ்வாறான நிலையில், கிழக்கு மாகாணத்தில் வலுவான கட்டமைப்பு ஒன்றை, புலம்பெயர் அமைப்புகளை இணைத்து உருவாக்கி, அதன் ஊடாக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும். அதனை தொடர்ந்து தமிழ் தேசியப் பரப்பில் செயற்படும் அமைப்புகள், செயற்பாட்டாளர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதன்மூலம் புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இதேபோன்று புலம்பெயர் தேசத்திலும் அனைத்து தமிழ் தேசிய பரப்புகளை முடிந்தளவுக்கு ஒன்றுசேர்த்து, கிழக்கின் கட்டமைப்புடன் இணைந்து பணியாற்றுவதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும்.
இன்று கிழக்கில் முன்னெடுக்கப்படும் அரச சார்பு கட்சிகளின் முக்கிய பிரசாரமாக, தமிழ் தேசிய சக்திகளினால் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினையை தீர்க்கமுடியாது என்பது உள்ளது. இது தொடர்பில் சர்வதேச ரீதியில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு வடகிழக்கு மக்களின் தேவைகள் கொண்டு செல்லப்பட்டு முடிந்தளவு தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
தொழில் வாய்ப்பு நிலையும் வறுமையுமே இன்று தமிழ் மக்கள் மத்தியில் தாக்கங்களை செலுத்தி வருகின்றன. இவை தொடர்பிலான முழுமையான திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும். கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், மட்டக்களப்பு வளங்கள் கூடிய மாவட்டமாகவுள்ளது. அதிலும் தமிழர் பகுதிகளில் அதிகளவு வளங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றில் சரியான முதலீடுகள் முன்னெடுக்கப்படும்போது அவற்றின் மூலம் அதிகளவானவர்கள் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளக்கூடிய சூழ்நிலையுள்ளதுடன், வறுமையினை ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டுவரும் நிலைமை அதிகளவில் காணப்படுகின்றது.
இன்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்கக்கோரியும், 13வது திருத்தச் சட்ட அமுலாக்கத்திற்கு எதிராகவும் போராட்டம் நடாத்தும் தமிழ் தேசிய சக்திகள், கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கவும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். வெறுமனே போலியான அரசியல் நிலைப்பாடுகளுடன் தமிழ் தேசிய அரசியலை ஆயுதமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் அரசியல் நகர்வினால் நன்மையடையப் போவது அரசியல்வாதிகள் மட்டுமே. இதன் மூலம் மேலும் தமிழ் தேசியம் பலவீனமடைந்து செல்லுமே தவிர, அவற்றினால் எந்தவித நன்மையும் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போவதில்லை.
இவற்றினை கருத்தில்கொண்டே இந்த கட்டமைப்பின் அவசியத்தினை இன்றைய பத்தியில் எழுதத் தூண்டியது. இன்று புலம்பெயர் தேசத்தில் பெருமளவானோர் இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கான வாய்ப்புகளை எதிர் பார்த்திருக்கின்றனர். தமிழ் தேசியத்தினை நேசிக்கும் பலர் தமது தேசத்தில் முதலீடுகளை செய்து, தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்துவிட வேண்டும் என்ற துடிப்புடன் உள்ளதை முகப்புத்தகங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. ஆனால் தமிழ் தேசிய அரசியலில் காணப்படும் போலிகள், ஏமாற்றுகள் மற்றும் திட்டமிடலற்ற தன்மை காரணமாக முதலிடுவதை தவிர்த்து வருகின்றனர் அல்லது அச்சமடைகின்றனர்.
இவ்வாறான நிலையிலேயே கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் தேசிய பரப்பில் உள்ள அரசியல் சக்திகளை ஒன்றிணைத்து செயற்படவேண்டிய தார்மீக கடமை தமிழ் மக்களுக்கு இருக்கும்; தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உள்ளவர்களுக்கும் உள்ளது.
இந்த விடயங்கள் சரியான முறையில் முன்கொண்டு செல்லப்படுமானால், எதிர்காலத்தில் கிழக்கில் பாரியளவிலான மாற்றங்களை தமிழ் தேசிய அரசியலில் காணக்கூடிய சூழ்நிலையேற்படும். அற்பசொற்ப சலுகைகளுக்கு விலைபோகாத கிழக்கு மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்போதே வடகிழக்கு இணைந்த தமிழ் தேசியப் பரப்பு என்பது வலுவாக மாற்றம் பெறும். அவறுமனே தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமானால், கிழக்கு மாகாணம் என்பது தமிழ் தேசிய அரசியலிலிருந்து முற்றாக விலகிச்செல்லும் சூழ்நிலையே அதிகமாகவுள்ளது. இதனை உணர்ந்து எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.