அலைனா பி. டெப்பிளிட்ஸின் கருத்துக்கு சீன தூதரகம் கண்டனம்

சீனாவும் இலங்கையும் சுதந்திரமான நாடுகள் ,அவற்றிற்கு தங்களின் தேவைகளுக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப வெளிநாட்டுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான உரிமையுள்ளது எனவும் இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

“எம்.சி.சி உடன்படிக்கை இவ்வளவு தூரம் அரசியல்மயமாக்கப்பட்டமை வெட்கக்கேடான விடயம்” என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்பிளிட்ஸ் டெய்லி மிரரிற்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்திருந்தார்.

மேலும் உத்தேச எம்.சி.சி உடன்படிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதா என்பதை தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே, அரசியல் நோக்கமற்று, தரவுகளை அடிப்படையாக கொண்டு கலந்தாய்வு கட்டமைப்புகளை அடிப்படையாகொண்டு அபிவிருத்தி திட்டங்கள் உருவாக்கப்படுவதை கருத்தில் கொள்ளும்போது எம்.சி.சி உடன்படிக்கை மிக அதிகளவிற்கு அரசியல் மயப்படுத்தபட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மூன்றாவது நாடொன்றின் தூதுவர் இலங்கை அமெரிக்க உறவுகளை வெளிப்படையாக கேள்விக்குட்படுத்தியுள்ளார் என இலங்கைக்கான சீன தூதுரகம் குற்றம் சுமத்தியுள்ளது.

Alaina B. Teplitz அலைனா பி. டெப்பிளிட்ஸின் கருத்துக்கு சீன தூதரகம் கண்டனம்

இறைமையுள்ள நாடொன்றின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது எப்போதும் ஆச்சரியமளிக்காத விடயம் என தெரிவித்துள்ள சீன தூதரகம், மற்றையவர்களின் இராஜதந்திர உறவுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வெறுக்கத்தக்க நடவடிக்கைகளை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

நெருக்கடியான காலங்களில் சீனாவும் இலங்கையும் பரஸ்பரம் ஆதரவாகவும் உறுதியாகவும் காணப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள  சீன தூதுரகம், சீனவுடனான உறவுகள் குறித்து இலங்கை மக்களும் அரசாங்கமும் தங்களின் சுயாதீனமான மதிப்பீடுகளை கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

சீன இலங்கை உறவுகள் குறித்து விரிவுரை வழங்குவதற்கு அமெரிக்காவிற்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ள சீன தூதரகம் இப்படியான வெளிப்படையான மேலாதிக்க ஆதிக்க அதிகார அரசியலை சீன மக்களோ அல்லது இலங்கையர்களோ சகித்துக் கொள்ளப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளது.

ஏனையவர்களுக்கு போதனைசெய்யும் ஆனால் நடைமுறையில் அதனை பின்பற்றாத பழக்கத்திலிருந்து விடுபடுமாறு அமெரிக்காவிற்கு ஆலோசனை வழங்குகின்றோம் எனவும் சீன தூதரகம்  தெரிவித்துள்ளது