பாராளுமன்றுக்கு அதிகாரங்களை வழங்காது மாற்றம் சாத்தியமில்லை- கல்முனை பிரதி மேயர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார ஸ்திரமற்ற நிலைமைகளுக்கு முற்புள்ளி வைக்கப்பட வேண்டுமாயின் உடனடியாக பாராளுமன்றத்திற்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். பாராளுமன்றுக்கு அதிகாரங்களை வழங்காது மாற்றம் சாத்தியமில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கல்முனை மாநகர சபையின் பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின்  சமகால நெருக்கடியான நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (16) விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அரசியல் ஸ்ரமற்ற நிலைமைகள் தோற்றம் பெற்றுள்ளன. பொதுமக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் வெடித்து தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

காலி முகத்திடலில் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி ஒட்டுமொத்த ஆட்சியாளர்களையும் வெளியேறுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்கள். ஆனால் ஆட்சியாளர்கள் மௌனம் காத்து வருகின்றார்கள்.

எனினும், ஆட்சியாளர்கள் தன்னிச்சையான முடிவுகள் எடுப்பதை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக, இந்த ஆண்டு செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்தமுடியாது என்று எடுத்த எடுப்பில் அறிவித்து விட்டார்கள். சர்வதேச நாணய நிதியத்தை மட்டுமே தமது தீர்வாக கொண்டிருக்கின்றார்கள்.

இவ்விதமான செயற்பாடுகளும், தீர்மானங்களும் நாட்டின் பொருளாதார நெருக்கடிளுக்கு நிரந்தரமான தீர்வினை வழங்கும் என்று ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேநேரம், ஆட்சியாளர்கள் ஜனநாயக போராட்டங்களுக்கு மதிப்பளித்து பதவி விலகுவதே பொருத்தமான செயற்பாடாக இருக்கும் என்பதோடு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையையும் எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படுத்துவதாக அமையும். ஆனால் ஆட்சியாளர்களோ ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை தமது குடும்பத்திற்குள்ளேயே வைத்துக் கொண்டு வெறுமனே அமைச்சரவை மாற்றியமைத்தல் அல்லது எதிரணியையும் அமைச்சரவைக்குள் உள்வாங்கிச் செயற்படுதல் போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

இதுபொருத்தமற்ற அணுகுமுறையாகும். தலைவலிக்கு தலையணையை மாற்றும் செயற்படாகவே இருக்கின்றது. ஆகவே தற்போதைய ஆட்சியாளர்கள் நிலைமைகளை புரிந்து கொண்டு செயற்பட முயற்சிப்பார்களாயின், உடனடியாக மக்கள் மன்றமான பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்க வேண்டும்.

அதாவது, அமுலில் உள்ள 20ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நீக்கி, மீண்டும் குறைகள் நீக்கப்பட்ட 19ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்க வேண்டும். இதன் மூலம் வெளிப்படைத்தன்மை கொண்ட மக்களாட்சி பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுவதற்கு வழிகோலப்படும். இந்தச் செயற்பாட்டிற்கு அனைத்து தேசிய அரசியல் தரப்பினரும் பேதமின்றி முன்வரவேண்டும். அனைத்து அரசியல் தரப்பினரும், மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு விரும்புவார்களானால் பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்குவதே ஒரே தெரிவாகும்.

அவ்வாறு அதிகாரங்களை மாற்றியமைக்காது, அமைச்சரவையை மறுசீரமைப்பதாலோ, அல்லது அனைத்துக்கட்சிகளின் பங்கேற்புடன் இடைக்கால அரசாங்கத்தினை நிறுவுவதாலேயே பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி ஏற்படப் போவதில்லை. அவ்விதமான செயற்பாடு நிலைமைகளை மேலும் சிக்கலான சூழலுக்குக் கொண்டு செல்வதுடன் நாட்டினதும், அடுத்த சந்ததியினரதும் எதிர்காலம் சூன்யமாகி விடும் பேராபத்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tamil News