தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது விதித்துள்ள தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை கனடா முதலில் முன்னெடுத்து, ஏனைய நாடுகளும் தமது தடைகளை நீக்குவதற்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் செயற்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவின் தலைநகரில் அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
இலங்கையில் ஆயுதப் போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையைத் தொடர்ந்து பேணுவதற்கான அவசியத்தை கனடா மறுபரிசீலனை செய்ய வேண்டுமென சிறீதரன் வலியுறுத்தினார்.
குறிப்பாக, கனடா இந்த விடயத்தில் முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து தடையை நீக்குவதுடன், ஏனைய நாடுகளும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த சந்திப்பில் இரண்டாவது முக்கிய விடயமாக, யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச தரத்திலான தடயவியல் தொழில்நுட்ப உதவிகளையும் நவீன ஆய்வு உபகரணங்களையும் பெற்றுக்கொடுப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் நம்பகத்தன்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்படுவதற்கு சர்வதேச நிபுணர்களின் பங்களிப்பும், மனித எச்சங்களை விஞ்ஞான ரீதியாகப் பரிசோதிப்பதற்குத் தேவையான நவீன தடயவியல் கருவிகளும் அவசியமானவை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்காக கனடா உரிய தொழில்நுட்ப உதவிகளையும் சர்வதேச தடயவியல் நிபுணத்துவத்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்கான சர்வதேச தடயவியல் உதவிகள் ஆகிய இரண்டு முக்கிய கோரிக்கைகளை மையமாகக் கொண்டு இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது தொடர்பாக கட்சித் தலைமையுடன் ஆலோசித்து சாதகமான முடிவை எடுப்பதாக கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்தனர்.



