முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகளுக்கும் ஜனநாயகக் கட்டமைப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் எனத் தெரிவித்துள்ள சுதந்திர ஊடக இயக்கம் (Free Media Movement – FMM), குறித்த சட்டமூலத்தை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் மீளப்பெறுமாறு அரசாங்கத்தைக் கோரியுள்ளது.
ஊடகச் சுதந்திரத்தையும் புலனாய்வு ஊடகவியலையும் குற்றமாக்கக்கூடிய ஏற்பாடுகள் இந்தச் சட்டமூலத்தில் உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அந்த இயக்கம், குறிப்பாகக் கடுமையான குற்றங்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளைப் பற்றிய தகவல்களை முன் அனுமதியின்றி அறிக்கையிடுவதற்கான தடைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ளது.
இதனால், அரச ஆதரவுடன் இடம்பெறுவதாகக் கூறப்படும் குற்றங்கள், பொலிஸ் சித்திரவதைகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் புலனாய்வு ஊடகவியலாளர்கள் மேற்கொள்ளும் வெளிப்படுத்தல்கள், விசாரணைகளுக்குத் தடையாக அமைவதாக பொருள்கொள்ளப்படும் அபாயம் உள்ளதாகச் சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஊடகவியலாளர்களுக்கு எதிராகக் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கும் அவர்கள் தடுத்து வைக்கப்படுவதற்கும் வழிவகுக்கலாம் எனவும் எச்சரித்துள்ளது.
இத்தகைய கட்டுப்பாடுகள் ஊடகச் சுதந்திரத்தைப் பாதிப்பதுடன், தகவல்களை அறிந்துகொள்வதற்கான பொதுமக்களின் உரிமையையும் கட்டுப்படுத்தக்கூடும் என அந்த இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டமூலத்தில் “ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்” மற்றும் “பாரதூரமான குற்றம்” ஆகிய சொற்கள் விரிவாகவும் தெளிவற்ற வகையிலும் வரையறுக்கப்பட்டுள்ளதாகச் சுதந்திர ஊடக இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக, தங்களது பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி விவசாயிகள், மீனவர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அடிமட்ட மக்கள் முன்னெடுக்கும் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புப் போராட்டங்கள் கூட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களாக வகைப்படுத்தப்படும் அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், சமூக ஊடகங்கள் ஊடாக அரசாங்கத்தை விமர்சிப்பதையும் அநீதிகளுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதையும் கட்டுப்படுத்துவதன் மூலம் சமூகத்தில் அச்சத்தையும் சுயதணிக்கையையும் ஏற்படுத்தும் சூழல் உருவாகலாம் எனவும் அந்த இயக்கம் எச்சரித்துள்ளது.
நீதிமன்ற விசாரணையின்றி பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவின் பேரில் சந்தேக நபர்களை நீண்டகாலம் தடுத்து வைப்பதற்கும், பொலிஸாரிடம் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களைச் சாட்சியங்களாக ஏற்றுக்கொள்வதற்கும் சட்டமூலம் இடமளிப்பதாகச் சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தகைய ஏற்பாடுகள் நியாயமான விசாரணையைப் பெறுவதற்கான உரிமையைப் பாதிப்பதுடன், பொலிஸ் காவலில் சந்தேக நபர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
நீதித்துறை மேற்பார்வையின்றி நிறைவேற்று அதிகாரத்திற்கும் பொலிஸாருக்கும் விரிவான அதிகாரங்களை வழங்குவது சட்டத்தின் ஆட்சியைப் பலவீனப்படுத்தி, நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பிற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்த இயக்கம் எச்சரித்துள்ளது.
குற்றங்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நாட்டில் ஏற்கனவே போதுமான பொதுச் சட்டங்கள் நடைமுறையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள சுதந்திர ஊடக இயக்கம், அரசியல் நோக்கங்களுக்காகத் தன்னிச்சையானதும் மனித உரிமைகளுக்கு முரணானதுமான சட்டங்களை முன்வைக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
நாட்டின் குடிமக்களின் அடிப்படை உரிமைகள், ஊடகச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக வெளியைப் பாதுகாக்கும் நோக்கில், முன்மொழியப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் மீளப்பெறுமாறு அரசாங்கத்திடம் அந்த இயக்கம் கோரியுள்ளது.



