ஜனாதிபதி பொது மன்னிப்பு முறைமையை நீக்குவது குறித்து கவனம் செலுத்தும் அரசாங்கம்!

கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும், அதனை ஒரு ஜனாதிபதி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவே தாம் கருதுவதாகவும் விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் K.D.லால் காந்த தெரிவித்துள்ளார்.

தமக்கு வேண்டியவர்களை விடுவிப்பதற்காக ஜனாதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்தும் நடைமுறையை நீக்கவேண்டும் என்ற கருத்து தற்போது கலந்துரையாடப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கன்னொருவையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் லால் காந்த, நாட்டில் சட்டம் என்ற ஒன்று இருக்கின்றது. அந்த சட்டத்தை தராதரம் பார்த்து அமுல்படுத்த முடியாது என்றும் சட்டத்தை அனைவருக்கும் சமமாக அமுல்படுத்துவதற்காகவே மக்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆணை வழங்கியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

அதற்கமையவே நாட்டில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், சட்டத்திற்குப் புறம்பாகச் செயற்பட வேண்டாம் என மக்களிடமும் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று தாமும் நீண்டகாலமாக கலந்துரையாடி, ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்ததாகத் தெரிவித்த அமைச்சர், தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பில் மக்களுக்குத் தமது கருத்துக்களைத் தெரிவிக்க முழு உரிமை உள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் இது ஒரு ஜனநாயக நாடு என்பதால் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும், மனுக்களைச் சமர்ப்பிக்கவும் கலந்துரையாடல்களை நடத்தவும் முடியும்.

இறுதிச் செயற்பாடாக மக்களின் அனைத்துக் கருத்துக்களையும் கவனத்தில் கொண்டே பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்படும் என்றும், மக்கள் அபிப்பிராயத்தைப் புறக்கணித்து அரசு எதனையும் செய்யாது என்றும் அவர் உறுதியளித்தார்.