மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பகுதியில் பண்ணையாளர் ஒருவர் 12 பேர் கொண்ட குழுவினரால் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று (28) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து கடத்தப்பட்ட குறித்த நபர் மயிலத்தமடு மாதவனை காவல்துறை காவலரணில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியிலுள்ள கால்நடை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையில் அத்துமீறிய குடியேறிகளினால் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனால் அத்துமீறிய குடியேறிகளுக்கும் பண்ணையாளர்களுக்கும் இடையில் தொடர்ந்தும் முரண்பாடு காணப்படுவதுடன் பண்ணையாளர்களின் கால்நடைகளும் சுட்டுக்கொல்லப்படுகின்ற சம்பவங்களும் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.
இந்தநிலையில் இன்று (28) காலை 6.30 அளவில் சந்திவெளியை சேர்ந்த வடிவேல் சோமசுந்தரம் என்பவர் அவரது பட்டியில் வைத்து பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள தரப்பினரின் ஆதரவாளர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
ஐந்து மோட்டார் சைக்கிளில் வந்த பத்திற்கும் மேற்பட்டோர் அவரைக் கடத்திச் சென்று மயிலத்தமடு மாதவனை காவல்துறை காவலரணில் ஒப்படைத்துச் சென்றுள்ளனர்.
அத்துடன் “இவர்தான் மாட்டை சுடுபவர்” என்றும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.



