றுவாண்டாவில் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான வாழ்வு கிட்டுமா? | தமிழில்: ஜெயந்திரன்

பாதுகாப்பான வாழ்வு கிட்டுமா?

தமிழில்: ஜெயந்திரன்

பாதுகாப்பான வாழ்வு கிட்டுமா?

பல்லாயிரக் கணக்கான தஞ்சக் கோரிக்கையாளர்களை றுவாண்டா நாட்டுக்கு அனுப்புவதற்காக அந்த நாட்டுடன் தாம் ஒரு ஒப்பந்தத்தை கைச்சாட்டிருப்பதாக ஏப்பிரல் மாதத்தில் பிரித்தானிய அரசு அறிவித்தது. இந்த நாடுகடத்தல்கள், சட்டத்துக்கு விரோதமானவை என்பதுடன் மனிதாபிமானம் அற்றவை என்று கூறி பிரித்தானிய எதிர்க்கட்சி, அரச சார்பற்ற நிறுவனங்கள், சமயத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்றவர்களிடமிருந்து அரசாங்கத்தின் இந்த ஏற்பாட்டுக்கு எதிராக கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இது மிகவும் மோசமானது என்று முடிக்குரிய பிரித்தானிய இளவரசரான சாள்சும் தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை தஞ்சக் கோரிக்கையாளரை மேற்குறிப்பிட்ட கிழக்கு ஆபிரிக்க நாட்டுக்குக் கொண்டுசெல்வதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வாடகை விமானத்தின் பயணம், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் குறிப்பிட்ட நாடுகடத்தல் தொடர்பாக விதித்த இறுதி நேரத் தடையுத்தரவின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதே விமானத்தில் கொண்டு செல்லப்படவிருந்த பலரின் நாடுகடத்தல் குறிப்பிட்ட தீர்மானத்துக்கு எதிராக ஐக்கிய இராச்சியத்தின் பல நீதிமன்றங்களில் தொடுத்த வழக்குகளின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க, நாடுகடத்தல் தொடர்பான தனது முடிவில் பிரித்தானிய அரசு எந்தவிதமான மாற்றத்தையும் செய்யப்போவதில்லை என்றும் அடுத்த பயணத்துக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரித்தானிய உள்துறை அமைச்சரான பிரீதி பட்டேல் தெரிவித்தார். அரச அதிகாரிகளும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் தொடர்பான ஒப்பந்தத்தின் ஆதரவாளர்களும் ஐக்கிய இராச்சியத்துக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய பல்லாயிரக்கணக்கான தஞ்சக்கோரிக்கையாளர்களை உள்வாங்கும் ஆற்றல் றுவாண்டாவுக்கு இருக்கிறது என்று வலியுறுத்தினார்கள்.

ஆனால் இது உண்மை தானா?

இளவரசர் சாள்ஸ் மற்றும் பொறிஸ் ஜோண்சன் ஆகியோர் பங்குபற்றவிருக்கின்ற பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை இம்மாதத்தின் இறுதியில் நடத்தவிருக்கும் றுவாண்டா அரசு, 1994ம் ஆண்டில் அந்த நாட்டில் நடந்தேறிய இனப்படுகொலை மற்றும் இனப்பாகுபாட்டால் பாதிக்கப்படுகின்றவர்களை பாதுகாப்பதில் கவனஞ்செலுத்துகின்றது என்றும் அகதிகள் அனைவருக்கும் அது பாதுகாப்பு நிறைந்த சிறப்பான இடம் என்று கருத்தையும் முன்வைத்தது.

ஆனால் அந்த நாடு தொடர்பாகக் கிடைக்கும் உண்மைத் தகவல்கள் வேறு ஒரு யதார்த்தத்தையே சுட்டிக்காட்டுகின்றன.
பாதுகாப்பான வாழ்வு கிட்டுமா?
இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னர் அந்த நாட்டில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் மற்றும் துட்சி இன மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை என்பவற்றின் பின்னர், றுவாண்டா நாட்டில் வாழும் குடிமக்கள் தமக்கு ஏற்பட்ட உளவியல் நெருக்கீடுகளிலிருந்தும் தாம் சந்தித்த இழப்புகளிலிருந்தும் இன்றும் மீண்டு கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. உண்மையான ஒப்புரவு அங்கு எட்டாக்கனியாக இருப்பதாகவே தோன்றுகிறது. ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து குணமாகின்ற பயணம் இன்னும் அங்கு தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. உள்நாட்டுப் போர், இனப்படுகொலை போன்றவை மட்டும் தான் றுவாண்டா இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்கள் என்று கூறிவிடமுடியாது.

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்னரேயே, 50 வீதத்துக்கும் குறைவான குடும்பங்களே உணவு தொடர்பான உறுதிப்பாட்டைக் கொண்டவை எனக் கண்டறியப்பட்டிருந்தது. உலக வங்கி 2020 ஆண்டில் வெளியிட்ட தரவுகளின் படி, றுவாண்டா மக்கள் தொகையில் 35.6 வீதமானோர் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 36.9 வீதமான சிறுவர்கள் வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. பெருந்தொற்றைத் தொடர்ந்து, வறுமையில் வாடும் குடும்பங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்திருப்பதோடு, அந்த நாட்டின் உணவுப் பாதுகாப்பில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு ஊட்டச்சத்துக் குறைபாடு மேலும் அதிகரித்திருக்கிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியை றுவாண்டா அடைந்திருக்கின்ற போதிலும், விசேடமாகக் கிராமப்புறங்களில் வறுமையால் வாடும் மக்களின் எண்ணிக்கையில் இது குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் எதனையும் ஏற்படுத்தவில்லை. சந்திப்புகள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள், அருங்காட்சித் தொழில்கள், போன்றவற்றுக்கு அதிகளவிலான பொது நிதியை ஒதுக்கி, அரசு சுற்றுலாத்துறையை கணிசமான அளவு விருத்திசெய்தது மட்டுமன்றி, தலைநகரான கிகாலியில் இலகுவில் அவதானிக்கக்கூடிய உட்கட்டுமான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருக்கிறது. ஆனால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிகள் எவையும் நாட்டின் வேலைவாய்ப்புக்கள் தொடர்பாக குறிப்பிடத்தக்க அதிகரிப்புகள் எதையும் தோற்றுவிக்கவில்லை என்பது மட்டுமன்றி தமது வாழ்வாதாரத்துக்காக நாளாந்தம் போராடுகின்ற கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றத்தையும் தோற்றுவிக்கவில்லை. பெருந்தொற்றின் காரணமாக சுற்றுலாத்துறை கணிசமான பாதிப்பைச் சந்தித்ததன் காரணமாக ஏற்கனவே பெறப்பட்ட அடைவுகள் மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.

இவற்றின் காரணமாகவும் இன்னும் பல தீட்சண்யப்பார்வையற்ற பொருண்மியத் திட்டங்களின் காரணமாகவும் றுவாண்டா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது 73வீதமான கடனைக் கொண்டிருப்பதாக அறிய முடிகின்றது.

இவை மட்டுமன்றி, அயல்நாடுகளுடன் தொடர்ச்சியாக ஏற்படுகின்ற அரசியல் பிரச்சினைகளின் காரணமாக, எல்லைகள் பல மூடப்பட்டிருப்பதன் காரணமாக எல்லைகளுக்கு இடையில் நடைபெறுகின்ற முறைசாரா வர்த்தகச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருப்தனால் பல குடும்பங்கள் தாம் நம்பியிருந்த தமது வருமானத்தின் கணிசமான பகுதியை இழந்திருக்கின்றன. கொங்கோ சனநாயக் குடியரசுக்கு எதிராக றுவாண்டாவின் எல்லைக்கு அருகில் போரிட்டு வருகின்ற எம் 23  (M 23) என்ற கிளர்ச்சிக் குழுவுக்கு றுவாண்டா அரசு வழங்கி வருகின்ற ஆதரவின் காரணமாக, அண்மைக்காலத்தில் கொங்கோ சனநாயகக் குடியரசுடனான  (Democratic Republic of Congo – DRC) றுவாண்டா அரசின் உறவு பாதிக்கப்பட்டிருக்கிறது. கொங்கோ சனநாயகக் குடியரசுக்குரிய சந்தைக்கு பொருட்களை வழங்கும் றுவாண்டாவின் முறைசாரா வர்த்தகர்களின் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் கணிசமான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
பாதுகாப்பான வாழ்வு கிட்டுமா?
றுவாண்டாவின் கிராமங்களில் வறுமை அதிகமாக நிலவுகின்ற பொழுதிலும், நகரங்களில் குறிப்பாகக் கிகாலியில் வாழுகின்ற குடும்பங்களும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றன. நகரங்களில் மேற்கொள்ளப்படும் முறைசாரா வர்த்தக நடவடிக்கைகளை அரசு தடைசெய்திருக்கின்ற காரணத்தினால் வறிய குடும்பங்களின் வருமானத்தில் மேலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கிகாலியில் வீதிகளில் பொருட்களை விற்பனை செய்வோரைக் குறிப்பாகப் பெண்களைக் காவல்துறை அதிகாரிகள் கையாள்கின்ற நடைமுறை தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் தமது கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கின்றன.

நவீனத்துவம் வாய்ந்ததும் சுற்றுச்சூழலைப் பொறுத்தவரையில் நிலைத்து நிற்கக் கூடியதுமான வீடுகளை கிகாலியில் வதியும் மக்களுக்கு வழங்கும் நோக்குடன், கிகாலியில் அரசு பல புதிய கட்டுமானங்களை மேற்கொள்வதோடு, அந்த நகரை முற்றாக உருமாற்றி வருகிறது. இதனைச் சாதிப்பதற்காக மாவட்டங்கள் இடையேயும் கிராமங்கள் இடையேயும் மக்கள் இடம் மாற்றப்படுகிறார்கள். இவ்வகையான இடப்பெயர்வுகளைச் செய்வதற்கு அரச அதிகாரிகள் மேற்கொள்ளும் நடைமுறைகள் காரணமாக குடும்பங்கள் பல உளநெருக்கீடுகளையும் பொருளாதாரப் பாதிப்புகளையும் சந்தித்து வருகின்றன.

எடுத்துக்காட்டாகப் பாதுகாப்புப் பிரச்சினைகளைக் காரணங்காட்டி, 2020 மார்ச் மாதத்தில் அதிகாரிகள் நியாறுட்டறாமாவில் அமைந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புக் கட்டடங்களை முற்றாக அழித்தார்கள். அழிக்கப்பட்ட குடியிருப்புகளுக்குப் பதிலாக வேறு வீடுகளைக் கொடுப்பதாகவோ அன்றேல் இழப்பீட்டுத் தொகையைக் கொடுப்பதாகவோ அவர்களுக்குச் சொல்லப்பட்டது. இவர்களில் சிலர் நகரத்தின் வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட வீடுகளில் குடியமர்த்தப்பட்டனர். ஆனால் அந்த மக்களோ அடிப்படை வசதிகள் பல தமக்குக் கிடைக்கவில்லை என்றும் தமக்கு வழங்கப்பட்ட புதிய குடியிருப்புகளில் போதிய வேலைவாய்ப்பு வசதிகள் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் முறையிடுகின்றனர். மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகைகள் இன்னுமே வழங்கப்படவில்லை என்பது மட்டுமன்றி இப்பிரச்சினைகள் தொடர்பான பிரச்சினைகள் இன்னும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

றுவாண்டா தற்போது சந்தித்துக் கொண்டிருக்கின்ற பொருண்மியம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான சவால்களைப் பொறுத்த வரையில் இவை மிகச் சொற்பமானவை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட கடன்களினால் நாடு கணிசமான அளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. வாழ்வதற்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் தனது குடிமக்களில் கணிசமானோர்க்கு வறுமையற்ற ஒரு வாழ்வையும் வழங்க முடியாத நிலையிலேயே றுவாண்டா தற்போது காணப்படுகிறது. இந்தப் பிரச்சினைகள் எல்லாவற்றின் காரணமாக, கணிசமான பொருண்மிய வளர்ச்சியைப் பதிவுசெய்த பொழுதிலும், உலக மகிழ்ச்சிச் சுட்டெண்ணைப் பொறுத்த வரையில் றுவாண்டா மக்கள் கடைசியிலுள்ள 5 நாடுகளில் ஒன்றாகவே இருக்கின்றனர்.

எனவே, ஏற்கனவே வறுமையாலும், தமது சொந்த நாடுகளில் நடைபெறுகின்ற போர்களின் காரணமாகவும் ஏற்கனவே உளவியல் ரீதியிலான பல பாதிப்புகளைச் சுமக்கின்ற இந்தத் தஞ்சக் கோரிக்கையாளர்கள், எவ்வாறு றுவாண்டாவில் நல்ல வாழ்க்கையைப் பெற்றுக்கொள்ள முடியும்? இனப்படுகொலைக்குப் பின்னர் தன்னை மீண்டும் கட்டியெழுப்புவதிலும், தனது சொந்தப் பிரச்சினைகளிலிருந்தும் மீள முயற்சிக்கின்ற றுவாண்டாவால் எவ்வாறு இவர்களுக்குத் தேவையான வாய்ப்புகளை வழங்கி அவர்களைப் பராமரிக்க முடியும்?

ஐக்கிய இராச்சியத்தை நோக்கி வருகின்ற தஞ்சக் கோரிக்கையாளருக்கு றுவாண்டா பொருத்தமான இடம் இல்லை என்பதற்கு பொருண்மியம் மற்றும் அபவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் மட்டும் காரணம் அல்ல.

துரதிட்டவசமாக, உள்நாட்டுப் போர், இனப்படுகொலை என்பவை தொடர்பான மோசமான நினைவுகள் இன்னும் அவர்கள் மனங்களை ஆட்டிப்படைக்கும் சூழலில் அரசியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் இன்னும் அந்த நாட்டில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

உண்மையில், அரசின் கொள்கைகளையும் அதன் விளக்கங்களையும் கேள்விக்கு உட்படுத்தத் துணிபவர்கள், துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதோடு, ‘றுவாண்டா அரசின் உறுதித்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தவல்ல ஓர் எதிரி’ என்றும் பட்டங்கட்டப்படுகிறார்கள்.

இது எனக்கு மிக நன்றாகவே தெரியும் ஏனென்றால் நானே தனிப்பட்ட முறையில் இதனை அனுபவித்திருக்கிறேன்.

2010ம் ஆண்டில், றுவாண்டா அரசின் கொள்கைகள் தொடர்பாகக் கேள்வி எழுப்பியதற்காக, இனப்படுகொலையை மறுதலித்தது உட்பட இட்டுக்கட்டப்பட்ட பல குற்றச்சாட்டுகள் என்மீது சுமத்தப்பட்டு, 15 வருட சிறைத்தண்டனை எனக்கு விதிக்கப்பட்டது. சிறையில் எட்டு வருடங்களைக் கழித்த பின்னர், அதிபர் வழங்கிய மன்னிப்பின் காரணமாக 2018ம் ஆண்டு நான் விடுதலை செய்யப்பட்டேன்.

அரசைக் கேள்விக்கு உட்படுத்தியதற்காக துன்புறுத்தப்பட்ட எனது கதையும் இவ்வாறான அல்லது இதைவிட மோசமான அனுபவங்களைப் பெற்றவர்களின் கதைகளும் ஐக்கிய இராச்சியத்தை நோக்கிய தஞ்சக் கோரிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பை வழங்கக்கூடிய ஒரு நாடாக றுவாண்டா விளங்க முடியாது என்பதற்கான நிரூபணம் ஆகும்.

அரசுக்கு எதிராகப் பேசுகின்ற ஒரேயொரு காரணத்தை வைத்து, அதாவது இனப்படுகொலைக்குப் பின்னரான ஒப்புரவுச் செயற்பாடுகளை அல்லது அல்லது அதன் பயனற்ற பொருண்மியக் கொள்கைகளை விமர்சிக்கின்ற தனது குடிமக்களைச்  சிறையிலடைத்து, அவர்களை மௌனிக்கச் செய்கின்ற ஓர் அரசு, குறிப்பாக இது போன்ற அரசியல் துன்புறுத்தல்களிலிருந்து தப்பி வருகின்ற தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு தனது நாட்டுக்குள் பாதுகாப்பையும் மாண்புமிக்க வாழ்வையும் வழங்க முடியும் என்று எப்படிச் சொல்ல முடியும்?

றுவாண்டாவில் விரைவில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் குறிப்பிட்ட இந்த அமைப்பின் தலைவர்கள், மாநாட்டில் இவ்விடயங்கள் தொடர்பாகக் கேள்வி எழுப்புவதுடன் றுவாண்டா அரசின் தவறுகள் தொடர்பாகவும் கேள்வி எழுப்பி, பொதுநலாவாய அமைப்பின் விழுமியங்களை நடைமுறைப் படுத்தும்படியும் அதனை வலியுறுத்தவும் வேண்டும். பிரித்தானிய பிரதம அமைச்சர் பங்குபற்றவிருக்கின்ற இந்த உச்சி மாநாட்டில், ஐக்கிய இராச்சியத்துக்கும் றுவாண்டாவுக்கும் இடையே ஒப்பமிடப்பட்டுள்ள இந்தத் தஞ்சக் கோரிக்கை ஒப்பந்தத்தின் நடைமுறைச் சாத்தியம் தொடர்பாகவும் பொருத்தப்பாடு தொடர்பாகவும் கேள்வி எழுப்பும் ஒரு தளமாகவும் அமைப்பின் தலைவர்கள் இதனைப் பயன்படுத்த வேண்டும்.

தனது நாட்டின் பொருண்மியத்தை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தி, நாட்டில் ஏற்கனவே வாழ்கின்ற  தனது குடிமக்களின் மனித உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகள் என்பவற்றை உறுதிப்படுத்தும் கொள்கைகளை நடைமுறைப்படுத்தாது, தஞ்சக் கோரிக்கையாளருக்கு தன்னால் ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுக்க முடியும் என்று றுவாண்டா வாக்குக் கொடுக்க முடியாது.

நன்றி:  Victoire Ingabire Umuhoza: அல்ஜசீரா

Tamil News