தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் உதவியை செய்ய அனுமதி கேட்டார் | கே.எஸ்.இராதாகிருஸ்ணன்

தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்கே.எஸ்.இராதாகிருஸ்ணன்

தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்- தமிழக முதல்வர் உதவி

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு அமைய வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவரும், அதற்காக நீண்டகாலம் அயராது உழைத்து வருபவரும், திமுகவின் செய்தித் தொடர்பாளருமான வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஸ்ணன் அவர்கள், தமிழக முதலமைச்சர் ஈழத்தமிழர்களுக்கு வழங்கும் உதவிகளை  இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும் என்றும், ஈழத் தமிழர்ளுக்கு மட்டும் வழங்க வேண்டாம் என்றும் சிறிலங்கா பாராளுமன்ற உறுப்பினர் கூறியது தொடர்பாக இலக்கு மின்னிதழிற்கு செவ்வியொன்றை வழங்கியிருந்தார்.

கேள்வி:
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், ஈழத் தமிழர்களுக்கான  உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்குவது  குறித்து மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர், அனுமதி கோரியுள்ள நிலையில், சிறிலங்கா பாராளுமன்ற உறுப்பினர் குறித்த உதவிகளை இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும் என்றும், ஈழத் தமிழர்ளுக்க மட்டும் வழங்க வேண்டாம் என்றும்  கூறியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்தை அறிய விரும்புகின்றோம்.

பதில்:
ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் பூர்வீகத் தமிழர்கள். மலையகத் தமிழர்கள் தமிழகத்திலிருந்து தோட்டத் தொழிலுக்காகச் சென்று பல ஆண்டுகளாக இருந்தவர்கள். இந்த இரண்டு தரப்பு மக்களுமே கடந்த காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதி மக்கள் இனப்படுகொலைக்கு உட்பட்டவர்கள்.  கடந்த காலத்தில் இவர்களுக்கு இந்தியா பல உதவிகளைக் கொடுத்தும், இலங்கை அரசு அதை அவர்களிடம் சரியாகச் சேர்க்கவில்லை. எனக்கு நன்றாகத் தெரியும். நெடுமாறன் அவர்களோடு நாங்கள் இங்கே சேகரித்த இரத்தம், உணவுப் பொருட்களை 2007, 2008, 2009 காலகட்டங்களில் கொழும்பிலேயே வைத்துவிட்டார்கள்.

வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பவில்லை. அங்கே ஈழத்தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அதேபோல மலையகத் தமிழர்களும் இரண்டாந்தரக் குடிமக்களாக கடந்த காலத்தில் ஆக்கப்பட்டதும், பிரஜாவுரிமை 1950களில் மறுக்கப்பட்டு, 1964இல் சிறீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் இலட்சக் கணக்கான மக்களை இந்தியாவிற்கு அனுப்பிய தெல்லாம் உண்டு. இந்த மக்கள் அங்கே இரண்டாந்தரக் குடிமக்களாக இருக்கிறார்கள். அந்தக் கருணையின் அடிப்படையில் தமிழக முதல்வர் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலையில் ஒரு உதவியை செய்ய அனுமதி கேட்டார்.

பொதுவாக ஒரு நாடு பாதிக்கப்படும் போது அனைவருக்கும் தான் கொடுக்க வேண்டும். அதை நான் மறுக்கவில்லை. அந்தப் பெருந்தன்மையும், அந்தக் கண்ணியமும் சரிதான். ஆனால் அப்படி அனுப்பும் பொழுது எந்தப் பொருளையும் சரியாக சிங்கள அரசு தமிழர்களுக்கு வழங்குவதில்லை. இது கடந்தகால அனுபவம். இப்போது இலங்கை  பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. மறுக்கவில்லை. சிங்களவர்களை வேறுபடுத்திப் பார்க்க வேண்டாம்.  ஆனால் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

இந்த இடத்தில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். முள்ளிவாய்க்கால் போர் முடிந்ததும் இந்திய அரசாங்கம் அங்கு மறுவாழ்விற்கு பணம் கொடுத்தது. வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கு 42,000 வீடுகள் கட்ட வேண்டும். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு ட்ராக்டர்கள் வழங்க வேண்டும். இவற்றை எல்லாம் அன்று சிங்கள அரசு சரியாக நடைமுறைப்படுத்தினதா? அது மட்டுமல்ல, கொடுத்த பணத்தில் தென்னிலங்கையில் காலியில்  ரயில்வே சந்திப்பு நிலையத்தை பெரிதாகக் கட்டினார்கள். அது இந்தியா கொடுத்த பணம். அதை வடக்கு கிழக்கில் அல்லவா செலவு பண்ணியிருக்க வேண்டும்.

இப்படி கடந்த கால அனுபவங்கள், கடந்தகால நிலைமைகளைப் பொறுத்து அங்கே உள்ள தமிழர்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அதேபோல ஒட்டுமொத்த இலங்கை மக்களும், சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் கிடையாது. ஆனால் கடந்த காலத்தில் தமிழர்கள் பெரும் ரணத்திற்கு உட்பட்டார்கள். தமிழர்களுக்கு இரண்டு பக்கமும் சித்தரவதை. ஒருபக்கம் விலைவாசி ஏற்றம். பெரும் பொருளாதாரச் சிக்கல். இன்னொரு பக்கம் இன்னும் அந்த இராணுவம் ஏன் வடக்கு கிழக்கில் இருக்க வேண்டும். போர் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னொரு பக்கம் இராணுவ பீதி. இரண்டு பக்கமும் பீதி. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி போல வடக்கு கிழக்கு மக்களின் நிலை.

வடக்கு கிழக்கில் இராணுவம், பெரிய பெரிய கட்டடங்களைக் கட்டி, பெரிய கூடாரங்களை அமைத்து, தமிழர்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டு தமிழர்களுக்கு எதிராக அந்த இராணுவம் ஏன் அங்கே நிறுத்தப்பட வேண்டும். போர் முடிந்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இதிலிருந்து சிங்களவர்கள் தமிழர்களை நசுக்குகிறார்கள் என்று தெரிகிறது.

இந்தப் பொருளாதாரச் சிக்கலில் மேலும் தமிழர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற ஒரு  எண்ணத்தில் தொப்புள்கொடி உறவுகளுக்கு முடிந்தளவு தமிழக அரசு செய்ய வேண்டும் என்று தான் தமிழக முதல்வர் செய்தாரே ஒழிய இதில் பாரபட்சம், சிங்களவர்களுக்கு கொடுக்கக் கூடாது, மனிதாபிமானமாக கொடுக்கக் கூடாது என்று நினைக்கவில்லை என்பதை இந்த நாடாளுமன்ற உறுப்பினர் புரிதல் வேண்டும்.

Tamil News