அகதிகளை நிச்சயத் தன்மையற்ற நிலையில் வைக்கும் தற்காலிக பாதுகாப்பு விசாக்களுக்கு அவுஸ்திரேலிய தொழிற்கட்சி ஆதரவா? 

அவுஸ்திரேலியா: தஞ்சக் கோரிக்கை யாளர்களுக்கு தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் வழங்குவதை தொழிற்கட்சி ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் அந்தோணி அல்பனீஸ் தவறுதலாக கருத்து தெரிவித்த நிலையில், அது குறித்து விளக்கும் அளிக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார். 

முன்னதாக, அவுஸ்திரேலிய ஆளும் தாராளவாத கட்சியின் கொள்கைகளாக அறியப்படும் ‘எல்லைகள் இறைமை நடவடிக்கை மற்றும் தற்காலிக பாதுக்காப்பு விசாக்களை’ தொழிற்கட்சி ஆதரிக்கிறதா என ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு ‘ஆம்’ என தொழிற்கட்சி தலைவர் அந்தோணி பதலளித்திருக்கிறார்.

ஆனால், உண்மையில் தஞ்சமைடையும் படகுகளை திருப்பி அனுப்பும் ஆளுங்கட்சியின் கொள்கையை தொழிற்கட்சி ஆதரித்தாலும் தற்காலிக பாதுகாப்பு விசாக்களுக்கு அக்கட்சி நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விசாக்கள் அகதிகளை தேவையின்றி பல ஆண்டுகள் நிச்சயத்தன்மையற்ற நிலையில் வைக்க உதவுகிறது என்பது தொழிற்கட்சியின் நிலைப்பாடாக உள்ளது.  அத்துடன் இவ்விசாக்களை முடிவுக்கட்டி நிரந்தர விசாக்களை அகதிகளுக்கு வழங்க வேண்டும் என்பதே தொழிற்கட்சியின் கொள்கையாக உள்ளது.

இந்த குழப்பத்தினால் மீண்டும் பேசிய தொழிற்கட்சி தலைவர், ‘அது கேள்வியை முழுமையாக கேட்காததால் நிகழ்ந்த தவறு’ என்றும் ‘தற்காலிக பாதுகாப்பு விசாக்களை தொழிற்கட்சி ஆதரிக்கவில்லை’ என்றும் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் அடுத்த பிரதமரை தீர்மானிக்கப் போகும் தேர்தல்  விரைவில் நடக்கவிருக்கும் நிலையில், எதிர்க்கட்சி தலைவரான அந்தோணி அல்பனீஸ் இந்த விவகாரத்தால் நான்கு நாட்களில் இரண்டு முறை விளக்கம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil News