அவுஸ்திரேலியாவில் அகதிகளை/தஞ்சக்கோரிக்கையாளர்களை தடுத்து வைக்கும் குடிவரவுத் தடுப்பு முகாம்களாக செயல்பட்ட தங்கும் விடுதிகளை பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் வரைபடமாக வெளியிட்டுள்ளனர்.
நீதிமன்ற ஆவணங்கள், தகவல் உரிமையின் கீழ் பெறப்பட்ட தகவல்கள், அவுஸ்திரேலிய மேலவையின் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தரவு முழுமையானதாக அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளாக பல இடங்களை ரகசிய தடுப்பு முகாம்களை கொண்டுள்ள அவுஸ்திரேலிய அரசு, தங்கும் விடுதிகளையும் அவ்வாறான தடுப்பு முகாம்களாக பயன்படுத்தி வந்திருக்கிறது. பல சமயங்களில் 3,000த்துக்கும் மேற்பட்டோர் இவ்வாறான முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இது குறித்த தகவல்களை பொதுவெளியில் அரசு வெளியிடவில்லை மற்றும் தகவல் உரிமையின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பதில் முறையாக வழங்கப்படவில்லை. ஏனெனில் அவ்வாறான முகாம்கள் எங்கே இருக்கிறது எனத் தெரியவில்லை என்று சம்பந்தப்பட்ட துறை சார்பாக பதிலளிக்கப்பட்டிருக்கிறது.
“குடிவரவுத் தடுப்புக்காக பயன்படுத்தப்பட்ட தங்கும் விடுதிகளில் உடற்பயிற்சி போன்றவற்றுக்கு வசதிகள் இல்லை. அத்துடன் வெளிகாற்று வாங்கக்கூட (அகதிகள்) அனுமதிக்கப்படவில்லை. அழுகிய உணவு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தங்கும் விடுதி தடுப்பால் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள், உடல்நல/மனநல் தாக்கங்கள் மிக மோசமானவை,” என மனித உரிமைகள் ஆணையாளர் லொரானி பின்லே தெரிவித்திருக்கிறார்.
2018 – 2021 ஆண்டுகளுக்கு இடையில், அவுஸ்திரேலியா முழுதும் குறைந்தது 170 இடங்கள் தடுப்பிற்கான மாற்று இடங்களாக வகைப்படுத்தப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய பாரளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய விசாரணை அதிகாரியின் அறிக்கைப்படி, இந்தாண்டின் ஜூலை 31ம் திகதி வரை 77 தங்கும் விடுதிகளை தடுப்பிற்கான மாற்று இடங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அதே சமயம், இவ்வாறான மறைமுகமான தடுப்பு முகாம்களின் பட்டியல் முழுமையானது அல்ல என்றும் முன்பு தடுப்பு முகாம்களாக பயன்படுத்தப்பட்ட 34 தங்கும் விடுதிகளை மட்டுமே தங்களால் கண்டறிய முடிந்ததாகவும் மெக்குவாரி மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைகழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
தடுப்பு முகாம்களாக பயன்படுத்தப்பட்ட தங்கும் விடுதிகள் பற்றிய வெளிப்படைத்தன்மையற்ற நிலை சுமார் 600 நாட்களுக்கு மேலாக அதில் வைக்கப்பட்டவர்கள் குறித்து கவலைக்கொள்ள செய்கிறது என மெக்குவாரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் ஆண்டூரு பரிரிட்ஜ் கூறியிருக்கிறார்.