கிழக்கு மாகாணத்தின் தமிழர் பகுதிகளின் எல்லைப்பகுதிகளை மாற்றம் செய்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதுடன் இனங்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப் பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் நிர்வாக எல்லைகளை மாற்றும் செயற்பாடுகள் மிகவும் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரியவருகின்றது.
நீண்ட காலமாகயிருந்து வந்த கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயகத்தின் எல்லைப்பகுதிகளை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேநேரம் குறித்த பிரதேச செயலகத்திலிருந்த காணி பகுதியையும் அங்கிருந்தவைகளையும் கல்முறை பிரதேச செயலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை சில அரசியல்வாதிகளின் துணையுடன் சில மதச்சார்பு அமைப்புகளுடன் இந்த எல்லைகள் மாற்றப்பட்டுள்ளதுடன் சில வீதிகளின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கல்முனையில் செட்டியா வீதி மற்றும் தரவைப்பிள்ளையார் ஆலய வீதிகளின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும் கல்முனை நகர்ப்பகுதியில் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பகுதியின் பெயரையும் மாற்றி குழப்பங்களை சிலர் ஏற்படுத்தமுனைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புனாணை கிழக்கு பகுதியை வேறு ஒரு பிரதேச செயலகத்துடன் இணைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் எல்லைகளையும் மாற்றி வேறு பிரதேச செயலகத்துடன் இணைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.