பொருளாதார நெருக்கடிக்குள் மூடி மறைக்கப்படும் வலிந்த உயிர்ப்பறிப்புகள்

இலங்கைத்தீவு சந்தித்து நிற்கும் பொருளாதார நெருக்கடி நிலை மீதான பரபரப்பிற்குள் வலிந்து உயிர்பறிப்பு சம்பங்கள் இடம்பெற்று வருகின்றமை மூடி மறைக்கப்பட்டு வருகின்றது.

தென்னிலங்கையில் மிக அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களின் மூலம் வலிந்த உயிர்பறிப்புகள் இடம்பெற்றுவருகின்றன.

ஒரு வார காலத்தில் இவ்வாறு அடையாளம் தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலன சம்பவங்கள் பட்டப்பகலிலேயே இடம்பெற்றுள்ளன. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய இலங்கை காவல்துறையினர் வெறுமனே சம்பவங்கள் இடம்பெற்ற பின்னர் அவை தொடர்பில் அறிக்கையிடும் பணியை செய்யும் தரப்பாகவே தமது கடமையை செய்துவருவதனை அவதானிக்க முடிகிறது.

இவ்வாறு இடம் பெறும் துப்பாக்கிச்சூட்டு சம்பங்கள் தொடர்பில் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்பட்டிருக்கவில்லை. அடையாளம் தெரியாத நபர்கள் என்ற அடைமொழிக்குள் குற்றவாளிகள் தப்பவைக்கப்பட்டு வருகின்றனரோ என்ற சந்தேகம் இயல்பாகவே ஏற்படுகிறது.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர் மற்றும் பாதிக்கப்படுவோரை போதைப்பொருள் பின்னணியுடையோராகவும் பாதாள உலக குழுவினராகவும் அடையாளப்படுத்துவதன் மூலம் அதன் பின்னணி தொடர்பான தேடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.

வரலாறு காணாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து தென்னிலங்கையில் பரவலாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. இவ்வாறான போராட்டம் என்பது ஒழுங்குமுறைப் படுத்தப்பட்டதாகவோ, ஒருமுகப்படுத்தப்பட்டதாகவோ இல்லாதுள்ளமை அதில் முன்னின்று செயற்படுபவர்கள் தொடர்பான அறிமுகமும் அவதானிப்பும் ஏனையோருக்கு இல்லதிருக்கும் நிலைகாணப்படுகிறது.

இவ்வாறான பின்னணியில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இலக்கு வைக்கைப்பட்டு பலியெடுக்கப்பட்டு வருபவர்களில் மேற் குறிப்பிட்ட வகையில் அவதானிப்பற்ற வகையிலான போராட்ட முன்னெடுப்பாளர் களார்களில் எவரும் இருக்கமாட்டார்கள் என்பதனை நிராகரித்துவிட முடியாது.

வடக்கு-கிழக்கிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ் இளைஞர், யுவதிகள் இலங்கை பாதுகாப்பு தரப்பினராலும், அவர்களோடு சேர்ந்தியங்கிய துணை இராணுவக்குழுவினராலும் பலியெடுக்கப்பட்டிருந்த பின்னணியில் தென்னிலங்கையில் இடம்பெற்று வரும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் கவனம்செலுத்துவது முக்கியமாகும்.

Tamil News