ஆப்கான் அகதிகள் விடயத்தை அரசியலாக்கும் ஐரோப்பிய அரசியல் தலைவர்கள்- மொழியாக்கம்: ஜெயந்திரன்

536 Views

அரசியலாக்கும் ஐரோப்பிய அரசியல் தலைவர்கள்
பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட போர்கள் மற்றும் மேற்குலக ஆக்கிரமிப்புகள் எல்லாவற்றுக்கும் பின்னர், முற்றிலும் சீரழிக்கப்பட்ட ஒரு நாடாகவே தலீபான் ஆப்கானிஸ்தான் இன்று காட்சி தருகிறது.  மேற்குறிப்பிட்ட இராணுவ நடவடிக்கைகளில் ஐரோப்பிய நாடுகள் மிகவும் தீவிரமாகவே பங்குபற்றியிருந்தன. அப்படிப் பார்க்கும் போது, ஆப்கான் குடிமக்கள் இன்று சந்திக்கின்ற இந்த மோசமான நிலைமை தொடர்பாக, ஐரோப்பிய சமூகங்களும், அரசியல்வாதிகளும் மிகுந்த அக்கறை கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். ஆனால் அதற்கு முற்றிலும் எதிர்மாறாக, எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையை இழந்த ஆப்கான் குடிமக்கள், காபூல் விமான நிலையத்திலிருந்து வான் நோக்கிப் பறக்க ஆயத்தமான விமானங்களில் தொங்கிக் கொண்டிருந்த காட்சிகளைத் தாங்கிய காணொளிகள் ஐரோப்பிய மக்களை  உண்மையில் அதிர்ச்சியடையச் செய்திருக்கின்றன.

அகதிகள் விடயத்தை அரசியலாக்கும்3 ஆப்கான் அகதிகள் விடயத்தை அரசியலாக்கும் ஐரோப்பிய அரசியல் தலைவர்கள்- மொழியாக்கம்: ஜெயந்திரன்அரசியலாக்கும் ஐரோப்பிய அரசியல் தலைவர்கள்: ஆப்கான் இன்று சந்திக்கின்ற மோசமான நிலைமைக்கு, பல வகைகளிலும் தார்மீகப் பொறுப்பை ஏற்க வேண்டிய ஐரோப்பிய அரசியல்வாதிகளோ, ஆப்கான் மக்களுக்கு உதவுவதற்கு எவ்வகையிலும் முன்வருவதாகத் தெரியவில்லை. தலிபான்களின் ஆட்சியை விட்டு வெளியேற முயற்சி செய்பவர்களுக்கென ‘ஐநாவினால் பராமரிக்கப்படும் ஒரு பாதுகாப்பு வலயம்’ ஒன்றை காபூலில் உருவாக்க வேண்டும் என்று பிரான்சும், பிரித்தானியாவும் முன்மொழிந்திருக்கின்றன. இதே நேரம் மக்களை வெளியேற்றுதல், உடனடி மனிதாய உதவி, நீண்ட கால அபிவிருத்தி உதவி போன்ற விடயங்கள் தொடர்பாக ஜி7 நாடுகளின் சந்திப்பில் கலந்துரையாடப் பட்டதாக ஐரோப்பிய ஆணைக் குழுவின் தலைவியான ஊர்சுலா வொன் டேர் லேயென் (Ursula von der Leyen) குறிப்பிட்டார்.

ஒரு மனிதநேய நெருக்கடியை ஆப்கான் மக்கள் மிக விரைவாகச் சந்திக்கும் ஆபத்து இருக்கின்ற ஒரு பின்புலத்திலும், தஞ்சம் தேடி பிறநாடுகளுக்கு அந்த மக்கள் படையெடுக்கக் கூடிய ஒரு சூழலிலும், அவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த ஒழுங்கமைப்புகள் எவ்வகையிலும் போதியவையாக இருக்கமாட்டாது. இவற்றை விடவும் மிகவும் மோசமான விடயம் என்னவென்றால், தமக்கு அரசியல் இலாபத்தைப் பெற்றுக் கொள்ளும் ஒரு விடயமாக ஆப்கான் நெருக்கடியை ஐரோப்பிய அரசியல்வாதிகள் தற்போது பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

அகதிகள் விடயத்தை அரசியலாக்கும்7 ஆப்கான் அகதிகள் விடயத்தை அரசியலாக்கும் ஐரோப்பிய அரசியல் தலைவர்கள்- மொழியாக்கம்: ஜெயந்திரன்
Nigel Farage

ஆப்கான் நாட்டுக்கு எதிராக மூன்று போர்களைத் தொடுத்தது மட்டுமன்றி, நான்காவது போரிலும் தன்னை இணைத்துக் கொண்ட பிரித்தானியா நாட்டின் தீவிர வலதுசாரித் தலைவர்களில் ஒருவரான நைஜல் பராஜ் (Nigel Farage) ‘இஸ்லாமிய அலை’ என்ற விடயத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார். “ஆப்கானிலிருந்து மக்கள் அலையலையாக வெளியேறுவதை இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள். எமது நாட்டுக்குள் ஏற்கனவே வந்திருக்கும் அகதிகளைக் கையாள முடியாது நாம் திண்டாடிக் கொண்டிருக்கின்றோம்” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார். “இந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தித் தலிபான்களும் ஏனைய தீவிரவாதக் குழுக்களும் தமது போராளிகளை இவ்வழியாக எங்கள் நாட்டுக்கு அனுப்ப மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்” என்று அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.

அகதிகள் விடயத்தை அரசியலாக்கும்6 ஆப்கான் அகதிகள் விடயத்தை அரசியலாக்கும் ஐரோப்பிய அரசியல் தலைவர்கள்- மொழியாக்கம்: ஜெயந்திரன்
Matteo Salvini

“ஆபத்தை எதிர்கொள்கின்ற பெண்கள் மற்றும் சிறுவர்கள் வெளியேறுவதற்கான ஒரு மனிதநேயப் பாதையை நிச்சயமாக நாம் திறந்துவிட வேண்டும். ஆனால் அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள் உள்ளே வருவதற்கு எமது கதவுகளைத் திறந்துவிட நாங்கள் ஒருபோதும் ஆயத்தமாக இல்லை. ஏனென்றால் பயங்கரவாதிகளும் அவ்வாறாக எமது நாட்டுக்குள் நுழைந்து விடலாம்” என்று மேனாள் இத்தாலிய உள்துறை அமைச்சரும் தீவிர வலதுசாரிக் குழுவின் தலைவருமான மத்தேயோ சல்வீனி (Matteo Salvini) தெரிவித்தார்.

ஒரு மனிதாயப் பேரிடரை அரசியலாக்குவதில் தீவிர வலதுசாரிகள் மட்டும் ஈடுபடவில்லை. அதே நேரம் நடுவண் வலதுசாரிக் கட்சிகளின் தலைவர்களும் இவ்வாறான சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். இஸ்லாமிய மக்களுக்கு எதிரான, மற்றும் தேசியவாதக் கருத்துகளை உள்வாங்கி, குடியேற்றவாசிகளை முற்றாக எதிர்க்கின்ற பரப்புரையை இந்த அரசியல்வாதிகள் முன்னெடுத்து வருகிறார்கள்.

அகதிகள் விடயத்தை அரசியலாக்கும்5 ஆப்கான் அகதிகள் விடயத்தை அரசியலாக்கும் ஐரோப்பிய அரசியல் தலைவர்கள்- மொழியாக்கம்: ஜெயந்திரன்ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அலை அலையாக எமது நாட்டுக்குள் மக்கள் குடிபெயர்வதை நாம் நிச்சயம் எதிர்பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சூழல் ஏற்படுமானால் அதனை உடனே தடுத்து நிறுத்தி, எமது நாட்டைப் பாதுகாக்க நாம்; ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று பிரெஞ்சு அதிபரான இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) ஆகஸ்ட் 17இல் வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். ஐரோப்பாவை நோக்கி வருகின்ற ஆப்கானியர்களை மூன்றாம் நாடுகளில் தங்க வைக்க வேண்டும் என்று ஆஸ்திரிய அதிபரான செபஸ்தியன் கூர்ஸ் (Sebastian Kurz) கருத்து தெரிவித்திருக்கிறார். ஆப்கானிலிருந்து  வெளியேறும் மக்கள் அந்த நாட்டுக்கு அருகிருக்கும் நாடுகளுக்குள் கொண்டுவரப்பட்டு, அங்கேயே அவர்கள் பராமரிக்கப்பட வேண்டும் என்று ஆகஸ்ட 22ம் திகதி அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆப்கான் நிலைமை தொடர்பாக விவாதிக்க, ஆகஸ்ட் 31இல் விசேட சந்திப்பை மேற்கொண்ட உள்விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐரோப்பிய அமைச்சர்கள், இதுபோன்ற கருத்துக்களையே தெரிவித்ததாக அறியமுடிகிறது. சட்டவிரோதக் குடியேற்றங்களைத் தடுப்பதற்கே தாம் முன்னுரிமை வழங்குவார்கள் என்று அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லைகளைச் செயற்றிறன்மிக்க வகையில் பாதுகாக்கவும், சட்டவிரோத வருகைகளை தவிர்க்கவும் உறுதிபூண்டுள்ளன என்று தமது சந்திப்புக்குப் பின்னர் வெளியிட்ட தமது அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

உதவி தேவைப்படுபவர்களுக்கு அந்தப் பிரதேசத்தில் வைத்தே உதவிகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக, ஆப்கானுக்கு அயலில் உள்ள நாடுகளுக்கு ஒன்றியம் அளித்துவரும் உதவிகளை வலுப்படுத்த வேண்டும் என்று அவர்கள் மேலும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆப்கானிய மக்களின் இன்றைய மோசமான நிலையைக் கண்ணோக்கும் போதும், ஆப்கானிய நிலைமை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கின்ற நிலைப்பாட்டைப் பார்க்கும் போதும், தீவிர வலதுசாரிக் கொள்கைகள் இவ்விடயங்களில் பின்பற்றப்படுவதையே தற்போது அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. மில்லியன் கணக்கிலான ஆப்கான் மக்கள் எல்லோரும் மேற்குலக நாடுகளுக்குள் தாம் உள்வாங்கப்படுவார்கள் என்று எண்ணுவது கேலிக்கூத்தாக இருக்கிறது என்றும் இதற்குப் பதிலாக ஆப்கானுக்கு அயலில் உள்ள நாடுகளில் அந்த மக்களைத் தங்க வைப்பதற்கு குறிப்பிட்ட அந்த நாடுகளுக்கு ஐரோப்பா உதவ வேண்டும் என்று இத்தாலியின் புதிய பாசிச சகோதரர்கள் (neo-fascist Brothers of Italy) என்ற கட்சியைச் சார்ந்த ஜோர்ஜியா மெலோனி (Georgia Meloni) தெரிவித்தார்.

இடைத்தங்குமிடங்களையும் அதே நேரத்தில் வரவேற்புக்கூடங்களையும் நாட்டுக்கு வெளியே ஒரு குறிப்பிட்ட இடத்தில் வடிவமைத்து, குடியேற்றவாசிகளையும் மனிதாயப் பாதுகாப்பையும்  கையாளும் அணுகுமுறை ஒன்றும் புதிய விடயமல்ல என்பது அவதானிக்கப்பட வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியம் 2016ம் ஆண்டு துருக்கியுடன் ஓர் உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டது. இந்த உடன்படிக்கையின் படி ஒன்றிய எல்லைக்குள் அகதிகள் நுழைவதைக் தடுக்கவும், அதே நேரத்தில் ஏற்கனவே துருக்கியூடாக கிரீசுக்குச் சென்றவர்களில் பன்னாட்டுப் பாதுகாப்புத் தேவையைக் கொண்டிராத அனைத்து அகதிகளையும் தாம் மீள் உள்வாங்கவும் அங்கரா சம்மதம் தெரிவித்தது. இதற்குப் பதிலாக வேறு பல உதவிகளுடன் மில்லியன் கணக்கிலான இந்த அகதிகளைக் கையாள்வதற்காக, பெருந்தொகையான நிதியைத் துருக்கிக்கு வழங்குவதாகவும் ஒன்றியம் உறுதியளித்தது.

இப்படிப்பட்ட ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் குறிப்பிட்ட குடியேற்றவாசிகளும் அகதிகளும் துருக்கியில் பாதுகாப்பானதும் நிலையானதுமான ஒரு வாழ்வைத் தேடிக்கொள்ள முடியவில்லை. தாம் மேற்கொண்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக மீண்டும் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தைக் குற்றஞ்சாட்டிய அங்கரா, மேலதிக உதவி தமக்கு வழங்கப்படாவிட்டால் அகதிகள் அனைவரையும் மீண்டும் ஐரோப்பாவுக்குள் அனுப்புவதாக அச்சுறுத்தியது. இதன் விளைவாக மில்லியன் எண்ணிக்கையைக் கொண்ட குடியேற்றவாசிகளும் தஞ்சக் கோரிக்கையாளர்களும் தமது எதிர்காலம் தொடர்பான எந்தவித நம்பிக்கையும் இன்றி இடை நடுவில் விடப்பட்டிருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானைவிட்டு அமெரிக்கா தற்போது வெளியேறியிருக்கும் பின்புலத்தில், அப்படிப்பட்ட ஒரு மோசமான உடன்படிக்கைக்குள் மீண்டும் ஒரு தடவை நுழைய தாம் ஆயத்தமாக இல்லை என்று துருக்கியின் வெளிவிவகார அமைச்சரான மெவ்லுட் கவுசோலு (Mevlut Cavusoglu) குறிப்பிட்டிருக்கிறார். ‘நாங்கள் உங்களுக்குப் பணத்தைத் தருகிறோம். அகதிகளை உங்கள் நாட்டில் நீங்கள் வைத்திருங்கள்’ என்ற மனப்பாங்கு தொடர்வதாக இருந்தால், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எந்தவிதமான ஒத்துழைப்பையும் வழங்கத் தாம் தயாரில்லை என்று ஆப்கான் குடியேற்றவாசிகள் விடயம் தொடர்பாக உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஐரோப்பாவை நோக்கிக் கடல் வழியாக வெளியேறும் குடியேற்றவாசிகளையும் தஞ்சம் தேடுவோரையும் கடலில் இடைமறித்து, மீண்டும் அவர்களை லிபியாவுக்கே கொண்டுசெல்வதற்காக, லிபிய கடற்காவலர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பல வருடங்களாக உதவிகளை வழங்கி வந்திருக்கின்றது. இச்செயற்பாடு ஆபத்தான பல பின்விளைவுகளைத் தோற்றுவித்திருக்கிறது. இவ்வாறு கடலில் இடைமறிக்கப்பட்ட குடியேற்றவாசிகளும் தஞ்சக் கோரிக்கையாளர்களும் லிபியாவின் தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, மனிதாபிமானம் அறவேயற்ற மிக இழிவான சூழல்களில் தங்க வைக்கப்பட்டது மட்டுமன்றி சித்திரவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள், பணம் பறிமுதல் செய்யப்படல், கட்டாய வேலை போன்றவற்றுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

மனித உரிமைக் கண்காணிப்பகத்தாலும் வேறு பல பன்னாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களாலும் ஆர்வலர்களாலும் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டது போல, லிபியத் தடுப்பு முகாம்களில் நடைபெறும் மேற்குறிப்பிட்ட கொடூரமான, மனிதாபிமானமற்ற, தரக்குறைவான கையாள்கை, பன்னாட்டுச் சட்டத்தை முற்றிலும் மீறுகின்றது என்னும் விடயம் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். இவ்வாறு இழைக்கப்படும் துஸ்பிரயோகங்களுக்கு லிபிய அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே தோல்வியடைந்துவிட்ட ஒரு மூலோபாயத்தைச் செயற்படுத்த அதாவது குடியேற்றவாசிகளையும் தஞ்சக் கோரிக்கையாளர்களையும் இடைமறித்து, மீண்டும் லிபியாவுக்கே அவர்களைக் கொண்டு செல்ல லிபியக்கடற்காவலர்களுக்கு ஆற்றலை வழங்குவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியமும் இவ்வாறான மனித உரிமை மீறல்களுக்கு உடந்தையாக இருக்கின்றது.

அகதிகள் விடயத்தை அரசியலாக்கும்2 ஆப்கான் அகதிகள் விடயத்தை அரசியலாக்கும் ஐரோப்பிய அரசியல் தலைவர்கள்- மொழியாக்கம்: ஜெயந்திரன்ஆப்கானின் தற்போதைய நெருக்கடியைக் கையாளும் விடயத்தில், ஐரோப்பா மீண்டும் இதே தவறுகளைச் செய்யக்கூடாது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் பல, 2001ம் ஆண்டிலிருந்து ஆப்கான் நாட்டுடன் தொடர்புபட்டிருக்கின்றன. அமெரிக்காவுடன் இணைந்து அவையும் தற்போது ஆப்கானை விட்டு வெளியேறியிருக்கின்றன. ஆப்கான் தற்போது சந்திக்கும் மனிதாய நெருக்கடிக்கு அந்த நாடுகளுக்கும் பங்கு இருக்கின்றது. இது வோஷிங்டனது பொறுப்பு என்று சொல்லி, மில்லியன் கணக்கிலான ஆப்கான் மக்கள் தற்போது சந்திக்கின்ற சொல்லொணாத் துன்பங்களிலிருந்து அந்த நாடுகள் கைகழுவிவிடமுடியாது.

ஆப்கானிஸ்தானில் வாழும் மக்கள் தொடர்பாக தமக்கிருக்கும் தார்மீகக் கடமைகளை விரைவாகவும் திறமையாகவும் நிறைவேற்றுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் பல வழிகள் இருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்காலிகப் பாதுகாப்பு வழிமுறை ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத நாடுகளிலிருந்து இடம்பெயரும் மக்களுக்காகவும் மிக அதிகமான எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்வதன் காரணத்தினால் அகதிகளுக்கு உதவுதற்கென உருவாக்கப்பட்ட நடைமுறையைச் செயற்படுத்துவதில் உள்ள இடர்ப்பாடுகள் காரணமாக தமது சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாது தவிக்கின்ற மக்களுக்கு உதவுவதற்காகவும் உடனடியானதும் தற்காலிகமானதுமான பாதுகாப்பை வழங்க இந்த விசேட செயற்பாடு 2001இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுள் இடையே இருக்கின்ற கூட்டுறவை அடிப்படையாக வைத்து வடிவமைக்கப்பட்ட இந்த நடைமுறை, கடந்த இருபது வருடங்களில் ஒரு தடவை கூட அமுலாக்கப்படவில்லை. இந்த நடைமுறையை அமுலாக்குவதன் மூலம் தனது பொறுப்புக்களைத் தட்டிக்கழிக்கவில்லை என்றும் மனித மாண்பு, சுதந்திரம், சனநாயகம், சமத்துவம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் ஆகிய ஒன்றியத்தின் அடிப்படை விழுமியங்களைப் பாதுகாப்பதற்கு உறுப்பு நாடுகள் ஒன்றோடொன்று இணைந்து பணியாற்றுகின்றன என்ற செய்தியையும அது உலகுக்குச் சொல்ல முடியும்.

அகதிகள் விடயத்தை அரசியலாக்கும்4 ஆப்கான் அகதிகள் விடயத்தை அரசியலாக்கும் ஐரோப்பிய அரசியல் தலைவர்கள்- மொழியாக்கம்: ஜெயந்திரன்குடியேற்ற நெருக்கடியை இன்னொரு மூன்றாவது நாட்டுக்குக் கடத்துவதும் குடியேற்ற வாசிகளுக்கு எதிரான பரப்புரையை முன்னெடுப்பதும் குறுங்கால நன்மைகளை ஐரோப்பிய அரசியல்வாதி களுக்கு அளிக்கக்கூடும். அண்மைக் காலங்களில் அவதானிக்கப்பட்டது போல அவ்வாறான மூலோபாயங்கள் நீண்ட கால அடிப்படையில் வெற்றியளிக்கப் போவதில்லை, ‘ஐரோப்பியக் கோட்டையைக்’ கட்டுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் பாதுகாப்பாகவும் செழிப்பாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தைப் பேணுவதற்கு உதவப் போவதில்லை. அதற்கு மாறாக இனங்களை அடிப்படையாகக்கொண்ட தேசியவாதக் கொள்கைகள் வளரவும் ஒன்றியத்தின் எல்லைகளுக்குள் ஒருவர் மேல் ஒருவர் வெறுப்புக் கொள்ளவுமே உதவும். அது மட்டுமன்றி உலகத்தின் ஏனைய பகுதிகளிலிருந்து ஒன்றியத்தைத் தனிமைப்படுத்துவதாகவும் இது அமைந்துவிடும்.

தனது வெளிநாட்டுக்கொள்கை தொடர்பான முடிவுகளால் பாதிப்புகளைச் சந்தித்த மக்களுக்கு அறநெறி ரீதியிலான தனது பொறுப்புக்களை உறுதிப்படுத்துகின்றதும் அதே நேரம் அதன் அடிப்படை விழுமியங்களைப் பிரதிபலிக்கின்றதுமான ஒரு பொறுப்பு வாய்ந்த குடியேற்றக் கொள்கையை செயற்படுத்த வேண்டிய காலம் ஐரோப்பாவுக்குத் தற்போது கனிந்திருக்கிறது. அனைத்து மானிடரினதும் உரிமைகள் மட்டில் நேர்மையான ஈடுபாட்டைக்கொண்டுள்ள, ஒரு புதிய ஐரோப்பிய ஒன்றியத்தைக் கட்டியெழுப்பும் பயணத்தை ஆரம்பிப்பதற்கு ஆப்கானில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, ஒன்றியத்துக்கு ஒப்பிடமுடியாத ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது,

நன்றி: அல்ஜசீரா

Leave a Reply