கடந்த காலங்களில் இரு வல்லரசுகளின் போட்டியில் சீரழிந்த தம் வரலாற்றை மனதில் கொண்டு இப்போது மற்றுமொரு வல்லரசான சீனாவின் விளையாட்டு திடலாக ஆப்கன் மாற, தலிபான்கள் இடமளிக்க கூடாது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் வெற்றி கொண்டுள்ளது குறித்து தனது முகநுாலில் மகோ கணேசன் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறியிருந்தார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,
“இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் சமபல உறவுகளை பேணுவது தலிபான்களுக்கு உலக அங்கீகாரத்தை பெற்று தரும்.
சமூக நீதி, சட்ட ஒழுங்கு, மனித உரிமைகள், குறிப்பாக கல்வி கற்பதற்கும், தொழில் செய்வதற்குமான ஆப்கான் பெண்களின் உரிமை ஆகியவற்றை மதிப்பதன் மூலம், சொல்லொணா துன்பங்களை அனுபவித்த ஆப்கான் மக்களுக்கு, இது ‘நம்ம ஆட்சி’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்த தலிபான்கள் படிப்படியாக முன்வர வேண்டும்.
நாட்டை மீண்டும் அடிப்படைவாத 9ம் நூற்றாண்டுக்கு கொண்டு சென்று, கடந்த 20 ஆண்டு கால அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆட்சியே பரவாயில்லை என ஆப்கான் இளைய தலைமுறை தீர்மானிக்கும் நிலைமையை, தலிபான்கள் ஏற்படுத்த கூடாது.
இல்லா விட்டால் இயல்பு வாழ்வு திரும்பாது. ஸ்திரமான ஆட்சியும் ஏற்படாது.
ஆகவே, ரஷ்யா, அமெரிக்கா போன்று சீனாவும் இன்னொரு சுற்று ஓடலாம். அது இறுதி சுற்றாகவும் மாறி விடலாம். அப்பாவி ஆப்கன் மக்கள் மத்தியில் இரத்த ஆறு இனியும் ஓடக்கூடாது” என மேலும் தெரிவித்துள்ளார்.