ஆப்கன் பெண்கள் கருத்தடை சாதனம் பயன்படுத்த தடை: தலிபான்கள் உத்தரவு

ஆப்கானிஸ்தானில் 2021 ஆகஸ்ட்மாதம் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அது முதலே பெண்களுக்கு எதிராக கடும் சட்டதிட்டங்களை அவர்கள் கொண்டு வந்தபடி உள்ளனர். இந்நிலையில், தற்போது பெண்கள் கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவதை தடை செய்துள்ளனர்.

“முஸ்லீம்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மேற்கத்திய நாடுகள் உருவாக்கியதுதான் கருத்தடை சாதனங்கள். இவற்றை இனி பெண்கள் பயன் படுத்தக் கூடாது. மருந்தகங்களில் கருத்தடை சாதனங்கள் மற்றும் கருத்தடை மருந்துகள் விற்க கூடாது” என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளதாக பிரிட்டன் நாளிதழான ‘தி கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கானில் பிறந்து தற்போது பிரிட்டனில் வசித்து வரும் களச் செயல்பாட்டாளர் ஷப்னம் நஷ்மி கூறுகையில் “முன்னதாக பெண்கள் கல்லூரி செல்ல, வீட்டை விட்டு வெளியில் செல்ல தலிபான்கள் கட்டுப்பாடுகள் விதித்தனர். தற்போது பெண்களின் உடலிலும் கட்டுப்பாடுகள் கொண்டு வருகின்றனர். குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதும் கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவதும் அடிப்படை உரிமை. தற்போது அந்த உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.