அதிபர் பதவி என்றால் என்னவென்று தெரியாத, புரியாத நபரை அமர்த்தியுள்ளோம் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா, தற்போதைய அதிபரைச் சாடியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது, இதனையொட்டி ஜனநாயகக் கட்சியின் மாநாடு நடைபெற்று வருகிறது, இதில் மிஷெல் ஒபாமா கலந்து கொண்டு பேசினார்:
இந்த நாட்டின் ஒரு மோசமான, தவறான அதிபர் ட்ரம்ப். அதிபர் பதவியில் சிறப்பாகச் செயல்பட அவருக்கு நல்வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அதிபர் பதவி என்றால் என்னவென்றே தெரியாத, புரியாத நபராக இருந்து விட்டார்.
அவரால் பொறுப்பை நிறைவேற்ற முடியவில்லை. இப்படிப்பட்ட ஒருவர் அதிபர் பதவிக்குத் தேவையா? கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தேர்தலின் போது நம்முடைய ஓட்டினால் என்ன மாற்றம் வந்து விடப்போகிறது என மக்கள் நினைத்தனர். அதனால் அதன் பலனை 4 ஆண்டுகளாக அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இனியும் இப்படிப்பட்ட தவறுகளைச் செய்யக் கூடாது, நாடு இப்போது பிளவுபட்டுக் கிடக்கிறது. இதை ஒரு கருப்பரினப் பெண்ணாகச் சொல்கிறேன், இதை விட மோசமான நிலையை அமெரிக்கா சந்திக்குமா என்றால் சந்திக்கும் என்றே கூற வேண்டியிருக்கிறது. வரும் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை எனில் நிச்சயம் மோசமான நிலையை அமெரிக்கா சந்திக்கும்.
தற்போதைய குழப்பங்களுக்கு தீர்வு ஜோ பிடன் கையில்தான் உள்ளது. ஒரு அதிபரின் பேச்சு அமைதியையும் ஏற்படுத்தும் போரையும் ஏற்படுத்தும். வெறும் பகட்டுடன் இருந்தால் போதாது. என் கணவர் பராக் ஒபாமா துணை அதிபர் ஜோ பிடன் ஒப்படைத்த அமெரிக்கா தற்போது சின்னாபின்னமாகியுள்ளது. ஒரு புறம் இனவெறி இன்னொரு புறம் கரோனா கையாளுதலில் குறைபாடுகளினால் வேலையின்மை.
சர்வதேச அளவிலும் அமெரிக்க அதிபர்கள் இதுவரை பெற்றுத்தந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது, என்றார் மிஷெல் ஒபாமா.