மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரதேசத்தில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் இரண்டு வீடுகள் தீயிடப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் திகதி இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த குழுக்கள் நேற்று இரவு நாவற்குடா நாவற்குடா இசை நடனக் கல்லூரி வீதியில் 11ம் குறுக்கிலுள்ள இரண்டு வீடுகள் மீது தாக்குதல் நடாத்து தீ வைத்துள்ளதுடன் மேலும் ஒரு வீடு உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு குறித்த வீடுகளில் ஏற்பட்ட தீ மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் பிரிவினால் கட்டுப்படுத்தப்பட்டபோதிலும் வீட்டில் உள்ள பொருட்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.