சந்திராயன் – 2 விக்ரம் லான்டரை கண்டுபிடித்து விட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

225
226 Views

நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லான்டரை கண்டுபிடித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சுற்றுவட்டக் கலன், விக்ரம் லான்டரின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளதாகவும் சிவன் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுவரை லான்டருடன் எந்த ஒரு தொடர்பும் இல்லை. நாங்கள் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகின்றோம். விரைவில் தொடர்பு கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார். சந்திராயன் – 2 திட்டம் முழுமையாக தோல்வியடையவில்லை. அடுத்த 14 நாளில் (நிலவில் இது ஒரு நாள்) விக்ரம் லான்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சி செய்வோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

சந்திராயன் – 2 திட்டம் இரு விடயங்களை உள்ளடக்கியது. ஒன்று அறிவியல், மற்றொன்று தொழில்நுட்ப செயற்பாடு. ஆர்ப்பிட்டர் என்பது அறிவியல் சார்ந்தது. லான்டரின் தரையிறக்கம் என்பது மற்றும் ரோவர் ஆகிய இரண்டும் தொழில்நுட்ப செயற்பாட்டை சார்ந்தது.

இதற்கு முன்பு இந்தியா அனுப்பிய ஆர்ப்பிட்டர்களைவிட இத்திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் வித்தியாசமானது. இது நமக்கு அதிகப்படியான தகவல்களை அளிக்கும்.

செப்டெம்பர் 7ஆம் திகதி அதிகாலை 1.30 தொடக்கம் 2.30 மணியளவில் சந்திராயன் – 2 திட்டத்தின் அதிமுக்கிய நிகழ்வான லான்டர் தரையிறக்கம் நடைபெறும் என்று இஸ்ரோ அறிவித்துள்ள நிலையில், நிலவின் மேற்பரப்பிற்கு 2.1 கிலோமீற்றர் உயரத்தில் இருந்த போது லான்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பு இழக்கப்பட்டது.  எனவே, லான்டரின் நிலை குறித்து பலதரப்பட்ட கேள்விகள் எழுந்தன. மீண்டும் லான்டரை தொடர்பு கொள்ள முடியுமா என்றும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

சந்திராயன் குறித்து இஸ்ரோ வெளியிட்டிருந்த அறிக்கையில், சந்திராயன் 2 திட்டம்  மிகவும் நுட்பமான பணித்திட்டம். இதற்கு முன் இஸ்ரோ முன்னெடுத்த திட்டங்களுடன் ஒப்பிடும் போது, இது ஒரு பெரிய படிக்கல். ஜுலை 22, 2019இல் சந்திராயன் 2 ஏவப்பட்டதில் இருந்து இந்தியா மட்டுமல்ல, இந்த உலகமே ஆர்வத்துடனும் பெரிய எதிர்பார்ப்புகளுடனும்,  இதன் முன்னேற்றத்தை கூர்ந்து கவனித்து வந்தது. இது நிலவின் ஒரு பகுதியை மட்டுமல்ல, மொத்த நிலவையும் ஆராய்வதற்கான நோக்கம் கொண்ட வித்தியாசமான திட்டம் இது.

சரியான சுற்றுவட்டப் பாதையில் பயணிக்கும் ஆர்ப்பிட்டர், நிலவில் ஏற்படும் மாற்றங்கள், துருவங்களின் நீர் மற்றும் கனிமங்கள் எங்கு இருக்கின்றது என்பது குறித்து நாம் அதிகம் புரிந்து கொள்ள உதவும். இத்திட்டம் 90-95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here