அநுராதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் கைது !

அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அநுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரியும் குறித்த பிக்குகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பிக்குகளும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த இடத்திலிருந்த கூடாரமும் அகற்றப்பட்டுள்ளது.

அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்திற்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்த பிக்குகளுக்கும், ராஜாங்கனை சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினருக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

அநுராதபுரத்தில் போராட்டம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற ராஜாங்கனை சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினர், பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட தரப்பினர் முன்னெடுத்த போராட்டத்துக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டவுடன் எதிர்ப்பிலும் ஈடுபட்டனர்.

இதன்போது, இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதாகவும், ராஜாங்கனை சத்தாரதன தேரர் மீது பிக்குகள் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.