வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை வம்சாவளியினரின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினரைத் தாய்நாட்டுடன் இணைக்கும் நோக்கில், ‘உலகளாவிய இலங்கை மரபுரிமைப் பிரஜை’ என்ற புதிய திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
2027ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை பாராளுமன்றத்தில் முன்வைத்தபோதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இரட்டைப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர் மற்றும் பிள்ளைகளுக்கும், வெளிநாடுகளில் வசிக்கும் மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளுக்கும் எவ்வித கட்டணமுமின்றி இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்த இலங்கை வம்சாவளியினர் தமது தாய்நாட்டுடனான தொடர்பைப் பேணுவதை ஊக்குவிப்பதுடன், பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் நிதிச் சுமையைக் குறைப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கில் நிலவிய ஆயுத மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த 13 ஆயிரம் குடும்பங்கள் இதுவரை முழுமையாக மீள்குடியேற்றப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குடும்பங்களை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முழுமையாக மீள்குடியேற்றுவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக ஏற்கனவே 6 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.



