இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகருடன் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல்லா மார்டினுடன் (Isabelle martin) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சந்திப்பு நடத்தியுள்ளது.

இதில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட தரப்பினர் பங்கேற்றுள்ளனர்.

தமிழ் மக்களினுடைய நீண்ட கால கோரிக்கையான நிரந்தரமான அரசியல் தீர்வு மற்றும் காத்திரமான பொருளாதார அபிவிருத்தி என்பவற்றை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்னிலைப்படுத்திய அரசு அது சம்பந்தமாக எந்த நகர்வுகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி உள்ளமை தொடர்பில் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கம் நடைமுறைப்படுத்த உள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயலை தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் அதிலும் சிறுபான்மை இன மக்கள் எதிர்கொள்ள இருக்கும் அபாயங்களை பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான நிரந்தர அரசியல் தீர்வு, காணி அபகரிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், யுத்த குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலைக்கான நீதிப் பொறிமுறை மற்றும் திட்டமிட்டு பிற்போடப்பட்டிருக்கும் மாகாண சபை தேர்தல்கள் என்பவற்றிற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையிலே குறித்த சட்டமூலங்களின் ஊடாக அந்தப் போராட்டங்களை ஒடுக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று மனித உரிமை பேரவையின் அறிக்கைகள் தெளிவாக கூறி வருகின்ற போதிலும் அரசாங்கம் அதை முற்றாக நீக்குவதற்கு பதிலாக, அதற்கு பதிலீடான ஆபத்தான சட்டங்களை நடைமுறைப்படுத்த முனைவது தமிழ் மக்களுக்கும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஆபத்தான விடயம் என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழர் பகுதிகளில் மாகாண சபையின் நிர்வாக கட்டமைப்பு இல்லாமையினால் பல்வேறு அரச நிறுவனங்களினால் காணி அபகரிப்புக்கும் சட்டவிரோத குடியேற்றங்களுக்கும் வழிவகுக்கிறது என்பதும் முன்வைக்கப்பட்டது.

வட மாகாணத்தில் அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படாமல் இருக்கும் அதேநேரத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் மேய்ச்சல் தரையான மாதவனை மயிலத்தமடு பிரதேசங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள், அங்குள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய மேய்ச்சல் தரையை அபகரித்து கால்நடை வளர்ப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் சூழ்நிலை நிலவுவது விளக்கப்பட்டது.

இவற்றிற்கு பதிலளித்த கனேடிய உயர்ஸ்தானிகர், ஐ.நா மனித உரிமை விடயங்களில் கனேடிய அரசு தொடர்ந்தும் உறுதியுடன் செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.