நெதர்லாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி முன்னெடுக்கப்படும் போலியான வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து, நெதர்லாந்து இராச்சியத்தின் தூதரகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான மோசடிகளில் ஏற்கனவே பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தூதரகம், சிலர் போலியான வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி வேலை தேடுபவர்களை ஏமாற்றி வருவதுடன், நெதர்லாந்து குடிவரவு சேவையினால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் போலியான கடிதங்களையும் புழக்கத்தில் விட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான வேலைவாய்ப்புகளுக்கு நெதர்லாந்து பொதுவாகப் பணி விசாக்களை வழங்குவதில்லை எனத் தெரிவித்துள்ள தூதரகம், உயர் திறன்சார் தொழில்நுட்பப் பணிகள் போன்ற விதிவிலக்கான துறைகளில் மாத்திரமே உண்மையான வேலைவாய்ப்புகள் காணப்படக்கூடும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், நெதர்லாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் தூதரகம் ஈடுபடுவதில்லை என்றும் வலியுறுத்தியுள்ளது.
எந்தவொரு நிதி உறுதிப்பாட்டையும் வழங்குவதற்கு முன்னர், வேலைவாய்ப்பை வழங்குவதாகக் கூறும் நிறுவனங்கள் அல்லது முதலாளிகளுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக இலங்கையின் சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் சட்ட உதவியை நாடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.



